கொரோனா வைரஸ் பரிசோதனை: மருத்துவக் கட்டணம் செலுத்தாத நோயாளி அடித்துக் கொல்லப்பட்டதாக புகார்

சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி இந்தி

மருத்துவக் கட்டணம் செலுத்த முடியாத நோயாளி ஒருவரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் நோயாளியின் தரப்பினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே சண்டை நடப்பது தெரிகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவருடன் சென்ற தங்களை மருத்துவமனை ஊழியர்களை தாக்கியதாக இறந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்," என்று அலிகர் நகர்ப்புற மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் மருத்துவக் கட்டணம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துடன் சண்டையில் ஈடுபட்டது தங்களது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், உடற்கூறாய்வு நடத்தப்பட்ட பின்பு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

உயிரிழந்த சுல்தான் கான் எனும் நபர் சிறுநீரக கோளாறு காரணமாக என்.பி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர் சிகிச்சையில் இருந்த பொழுது தாங்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது தாங்கள் தாக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மீதமுள்ள மருத்துவக் கட்டணத்தை செலுத்திவிட்டுத்தான் அவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

"அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பே மருத்துவக் கட்டணங்கள் குறித்து நாங்கள் விசாரித்தோம்; ஆனால் முதலில் சிகிச்சை அளித்து விட்டு பின்பு மருத்துவ கட்டணங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்று அவர்கள் கூறினார்கள்; பரிசோதனைகள் எதுவும் செய்யாமலேயே ஐந்தாயிரம் ரூபாய்க்கு மருந்து எழுதிக் கொடுத்தார்கள்; தினசரி சிகிச்சை கட்டணமும் ஐந்தாயிரம் ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது," என உயிரிழந்த சுல்தானின் உறவினர் சமன் கான் என்பவர் தெரிவித்துள்ளார்.

"அவ்வளவு பணத்தை தங்களால் சிகிச்சைக்காக செலவிட முடியாது என்று கூறி நாங்கள் வாங்கிய மருந்தை திருப்பி கொடுத்துவிட்டு 3,300 ரூபாயை மருத்துவ கட்டணமாக நாங்கள் கொடுத்தோம்," என்கிறார் அவர்.

கொரோனா வைரஸ்

"ஆனால் அவர்கள் மேலும் நான்காயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இதை எங்களால் தர முடியாது என்று கூறிவிட்டு நாங்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது எங்களை 15 நிமிடத்துக்கு மேலாக அவர்கள் தடுத்து வைத்திருந்தார்கள். நாங்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் விடவில்லை. ஆனால் அவர்களை மீறி நாங்கள் வெளியே செல்ல முயன்றபோது அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். மருத்துவமனை ஊழியர் ஒருவர் குச்சியால் தாக்கினார். அது அவருக்கு உயிரிழப்பை உண்டாக்கியது," என்கிறார் சமன் கான்.

மருத்துவமனை நிர்வாகம் கூறுவது என்ன?

இவரது குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருகிறது. சிகிச்சைக்காக கட்டணத்தைத் தாங்கள் கேட்கவில்லை என்றும் நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்காக கட்டணங்களையே கேட்டதாகவும் என்.பி மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

"மருத்துவப் பரிசோதனைகளுக்கு உண்டாகும் செலவுகள் குறித்து நாங்கள் முழுமையாக அவர்களிடம் தெரிவித்து விட்டோம். நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம். ஆனால் கொரோனா பரிசோதனைக்கு தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்றும் நோயாளியை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்கள்," என்று மருத்துவ மனையின் உரிமையாளர் ஷான் மியான் பிபிசியிடம் தெரிவித்தார்.

"மருத்துவ கட்டணத்தை கேட்ட மருத்துவமனை ஊழியரை அவர்கள் தாக்கினார்கள். பின்பு ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு நோயாளியை வேறு எங்கோ அழைத்துச் சென்றனர். சற்று நேரம் கழித்து திரும்பி வந்து நோயாளி இறந்து விட்டதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தாக்கியதால்தான் அவர் இறந்தார் என்றும் எங்களிடம் தெரிவித்தனர்," என்கிறார் ஷான் மியான்.

காவல்துறை விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். இன்னும் பிணக்கூறாய்வு முடிவு வெளிவரவில்லை. நாங்கள் கட்டையால் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்றால் காவல்துறை எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலே நோயாளிகள் பலரும் அச்சப்படுவதாக கூறும் அவர் தங்களது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் யாருக்கும் சிகிச்சை அளிப்பதில்லை என்றும் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

நோயாளிகள் யாருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்வது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவக் கட்டணங்கள் அதிகரிப்பு

சமீப மாதங்களில் மருத்துவமனைகளில் கட்டணம் மிகவும் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கிறார் பிபிசியிடம் பேசிய அலிகர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பானு பிரதாப்.

ஒருவேளை நோயாளி தாக்கப்பட்டு இருந்தால் அது தவறு என்றும் விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது நோயாளியை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் உடற்கூறு ஆய்வு முடிவுகளில் அவர் தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்தார் என்று தெரியவந்தால் அது கொலை வழக்காக மாற்றப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: