சாத்தான்குளம்: “இன்று இரவிற்குள் முதல் தகவல் அறிக்கையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது” - சிபிசிஐடி ஐஜி சங்கர்

காவல்நிலையங்களில் நிகழும் வன்முறைக்கு எதிராக குரல்கொடும் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கைதுசெய்யப்படும் நபர்கள் மோசமான மனித உரிமை மீறலுக்கு ஆளாவது குறித்து விளக்கினார்.

பட மூலாதாரம், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை -மகன் தாக்கப்

சாத்தான்குளம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் இன்று இரவிற்குள் முதல் தகவல் அறிக்கையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது என சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 10-12 குழுக்கள் அமைக்கப்பட்டு நியாயமான விசாரணை நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை இன்று காலையில் துவங்கியுள்ளது. நீதித் துறை நடுவரும் வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்.

தந்தை, மகன் உயிரிழப்பதற்கு முன்னதாக அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சிபிசிஐடி ஆய்வாளர் சரவணகுமார், உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி கிளை சிறைக்கு வந்தனர்.

அவர்கள் தந்தை, மகன் அடைக்கப்பட்டு இருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து கிளைச் சிறை கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தினார். மேலும், தந்தை, மகன் அடைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாத்தான் குளம் சம்பவம் தொடர்பான விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற மாநில அரசு பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், சி.பி.ஐ. தனது விசாரணையைத் துவங்க நாட்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாகவே குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.சி.ஐ.டி.) தனது விசாரணையைத் துவங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. இன்று தனது விசாரணையைத் துவங்கியது.

ஆய்வாளர் பிறைச்சந்திரன் தலையிலான சிபிசிஐடி காவல்துறையினர், சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் நடத்திவந்த செல்போன் கடை அருகில் உள்ள கடைக்காரர்களிடம் தங்களது விசாரணையை இன்று காலையில்துவங்கினர்.

இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார்.

காணொளிக் குறிப்பு, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: 'காவல்துறை வன்முறை ஊக்குவிக்கப்படுகிறது'

சாத்தான் குளம் சம்பவத்தை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, விழுப்புரம் எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார். அருண் பாலகோபாலன் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி ஜெயக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுடன் காவல்துறை நல்லுறவுடன் செயல்படும்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: