கொரோனா வைரஸ்: தமிழகத்தில் 6-ம் கட்ட முடக்கநிலை - கட்டுப்பாடுகள், தளர்வுகள் என்ன?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: இன்று முதல் 6-ம் கட்ட சமூக முடக்கம் அமல்

தமிழகத்தில் இன்றுடன் ஐந்தாம் கட்ட சமூக முடக்கம் முடிவுக்கு வரும் சூழலில் இந்து தமிழ் திசை இது தொடர்பாக விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் ஆறாவது கட்ட ஊரடங்கில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து விவரித்துள்ளது.

பின் வருமாறு அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது:

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத்தில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகள் நீடிக்கும். மற்ற பகுதிகளில் ஏற்கெனவே உள்ள தளர்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடை வெளியில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப் பட்டு வருகிறது. அத்துடன் நோய்ப் பரவல் தாக்கத்தைப் பொறுத்துத் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மே மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட 5-ம் கட்ட ஊரடங்கு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை நீட்டிப்பது, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விதிமுறைகளைக் கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 6-ம் கட்டமாக ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களின் சில பகுதிகளில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்றும், இந்தப் பகுதிகளில் ஜூன் 6-ம் தேதி முதல் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வந்த தளர்வுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

தமிழகம் முழுவதும் தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள விதிமுறைகள் தொடரும். நோய்ப் பரவல் குறைவு அடிப்படையில் தளர்வு கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்து இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளில் இன்று முதலும், முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 6 ம் தேதி முதலும் தேநீர்க் கடைகள், உணவகங்கள், மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்களும் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம். மால்கள் தவிர இதர வணிக நிறு வனங்கள், ஷோரூம்கள், ஜவுளி, நகைக் கடைகள், தனியார் நிறுவனங்களும் கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம்.

அரசாணை வெளியீடு

இந்நிலையில், 6-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்புகளுக்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றாலும், 20 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ்

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதர நோய்களுடன் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமிகள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது.

ஆரோக்கிய சேது செயலி மூலம் தொற்று அறிகுறி உள்ளவர்களை எளிதில் கண்டறிய முடியும் நிலை உள்ளதால் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்க முடிகிறது. எனவே, தனியார் ஒவ்வொருவரும் இந்த செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்வதை மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி: அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கே.பி. அன்பழகன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கே.பி. அன்பழகன்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அதன் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள 6 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, மொத்தம் உள்ள 15 மண்டலங்களும் 6 அமைச்சர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டன.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு மண்டலங்கள் 13, 14, 15 (அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்) ஆகிய 3 மண்டலங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்தநிலையில், கடந்த மாதம் 17-ந்தேதி அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

-இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது

தினமணி: வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டி வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

பட மூலாதாரம், Getty Images

  • நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கிடையாது.
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோர் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
  • பொது இடங்களில் கட்டாயமாக குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். வரிசையில் நிற்கும்போதும் இதைப் பின்பற்ற வேண்டும்.
  • முகக் கவசங்கள் அணிவது கட்டாயம். முகக் கவசம் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
  • இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டைகளால் அல்லது முழங்கையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும்.
  • பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
  • ஆரோக்ய சேது செயலி கட்டாயம் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • நுழைவாயிலில் சானிடைஸர்களை வைக்க வேண்டும். முடிந்தால், தெர்மல் ஸ்கீரினிங் செய்ய வேண்டும்.
  • அறிகுறி இல்லா நபர்களை மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்.
  • வழிபாட்டுத் தல வளாகங்களில் இருக்கும் கடைகள், தேநீர் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • வளாகத்துக்குள் நுழையும் முன் கை மற்றும் கால்களை சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.
  • சிலை உள்ளிட்டவற்றைத் தொட்டு வழிபட அனுமதி கிடையாது.
  • 5 பேருக்கு மேல் கூட தடை.
  • வழிபாட்டுத் தல வளாகங்களில் பிரசாதம், தீர்த்தம் உள்ளிட்டவற்றை வழங்க அனுமதி கிடையாது.
  • அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு உணவு தயாரிக்கும்போது மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
  • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அரசின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தி, கண்காணிக்க கொரோனா பாதுகாப்புக் குழுவை அமைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இவை அரசு கூறி உள்ள வழிகாட்டுதல்கள் என்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: