தேசிய மருத்துவர் தினம் : ”குழந்தையின் முகம் பார்த்து 3 மாதங்கள்” – அயராது உழைக்கும் மருத்துவர்களின் கதை

- எழுதியவர், மு. ஹரிஹரன், பிபிசி தமிழுக்காக
- பதவி, பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ்
கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் தங்களது குடும்பத்தினரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பலர் அயராது பணியாற்றி வருகின்றனர்.
மருத்துவமனை மட்டுமின்றி குடியிருப்புகளில் மருத்துவ பரிசோதனை செய்வது, மாவட்ட எல்லைகளில் மக்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவது, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது, நோய்த்தொற்று உள்ளவர்களைக் குணப்படுத்துவது ஆகிய பணிகளை மார்ச் மாதம் முதல் கடந்த 100 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதால் மருத்துவர்கள் பலர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.
சுழற்சி முறையில் விடுப்பு கிடைத்தாலும், நோயாளிகள் குறித்து மட்டுமே சிந்திக்கும் அளவிற்கு மனநிலை மாறிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலராக பணியாற்றி வரும் அனுரத்னா, மார்ச் 22 முதல் தனது குடும்பத்தைப் பிரிந்து, தனியாக வசித்து வருவதாகத் தெரிவிக்கிறார்.
"கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியவுடன் எனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூருக்கு அனுப்பிவிட்டு, பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நான் தனியாக வாசிக்கத் துவங்கினேன். ஒவ்வொரு முறை கைப்பேசியில் பேசும் போது எனது குழந்தைகள், 'எப்ப வருவீங்க அம்மா?' எனக் கேட்பார்கள்.'' என்கிறார் அனுரத்னா.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் உயிரிழந்த செய்தியைப் பார்த்ததும் உடனடியாக தன்னை அழைத்து, பாதுகாப்பாக இருக்கும்படியும், விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரும்படியும் குடும்பத்தினர் வற்புறுத்துவார்கள் என்கிறார் அவர்.
''ஆனால், என்னால் போக இயலாது. காரணம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றாலும், மனம் முழுவதும் நோயாளிகள் குறித்தும், அவர்களுக்கான சிகிச்சை பற்றியும் யோசித்துக்கொண்டே இருக்கும். அத்தோடு, என்னால் எனது குடும்பத்தினருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்" என்கிறார் மருத்துவர் அனுரத்னா.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

"மருத்துவப்பணியில் அதிக தியாக உணர்வு தேவைப்படும். ஒரு காலத்தில் மனிதர்களை வாட்டி வதைத்த சின்ன அம்மை, காலரா போன்ற நோய்கள் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாகத் தெரிவதில்லை. அதற்குக் காரணம் அந்த நோய்கள் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுயநலம் பார்க்காமல் தியாக உணர்வோடு பணிசெய்த மருத்துவர்கள்தான். தற்போது அப்படி ஒரு சூழ்நிலை எனக்கும் உருவாகியுள்ளது என நினைத்துக்கொண்டு எனது பணியை தொய்வில்லாமல் செய்து வருகிறேன். எனது குழந்தைகளிடம் செப்டம்பர் மாதம் வீட்டிற்கு வருகிறேன் என உறுதியளித்துள்ளேன். அதற்குள் கடுமையான இந்த சூழலை நாம் கடந்துவிட முயற்சிப்போம்" என உறுதியாகத் தெரிவிக்கிறார் இவர்.
சேலம் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் சரக்கப்பள்ளியூர் வட்ட மருத்துவ அலுவலர் ரமணன், மார்ச் 27 ஆம் தேதி முதல் கொரோனா கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

"கொரோனா கட்டுப்பாட்டுப் பணியில் நான் நியமிக்கப்பட்டதும், கர்ப்பிணியாக இருந்த எனது மனைவியை அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு அனுப்பிவிட்டேன். நான் எனது தாய் மற்றும் தந்தையோடு சேலம் மாவட்டத்தில் தங்கியுள்ளேன். கடந்த மூன்று மாதங்களாக மருத்துவப்பணி மற்றும் தனிமை இவை இரண்டு மட்டும்தான் தொடர்ந்து வருகிறது. மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை செய்வது, நோய்த்தொற்று உடையவர்களோடு தொடர்பில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, வீட்டிற்குச் சென்றாலும் என்னை தனிமைப்படுத்திக் கொள்வேன்." என்கிறார் அவர்.
"எனது மனைவியைப் பார்க்க மாதம் ஒருமுறை சென்று வருவேன். அவரை பார்க்கும்போதெல்லாம் கர்ப்பகாலத்தில் அருகில் இருக்க முடியாததை நினைத்து வருத்தப்படுவேன். கடந்த ஜூன் 11 ஆம் தேதி மனைவிக்கு வளைகாப்பு நடந்தது, முக்கிய சொந்தங்கள் மட்டும் வந்திருந்தனர். விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கும்படி அனைவரும் வற்புறுத்தினர். ஆனால், கொரோனா தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கும் முக்கிய பொறுப்பில் இருப்பதால் விடுப்பு எடுக்க முடியாது.'' என்கிறார்
''வளைகாப்பு நிகழ்வு முடிந்ததும் உடனடியாக கிளம்பி பணிக்கு வந்துவிட்டேன். இதுபோன்று பல சூழ்நிலைகளில் குடும்பத்தினரிடமிருந்து விலகி இருக்க வேண்டியுள்ளது. தற்போது, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், கட்டுப்பாட்டுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம்,'' என்கிறார் மருத்துவர் ரமணன்.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிவரும் மருத்துவர் சுகந்தி, PPE எனப்படும் பாதுகாப்பு உடையை அணிவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து தெரிவிக்கிறார்.
"கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கவச உடையை அணிந்து வருகிறோம். ஆனால் இவை ஒவ்வொரு நபருக்கும் ஏற்ற வடிவில் வடிவமைக்கப்படுவதில்லை. 4அடி உயரமுள்ளவருக்கும், 7 அடி இருப்பவருக்கும், உடல் பருமனாக இருப்பவர்களுக்கும், எடை குறைவானவர்களுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு உடையை இருப்பதால் அசௌகரியங்கள் உள்ளன.'' என்கிறார் சுகந்தி.

''குறிப்பாக மாதவிடாய் காலங்களில் கவச உடைகளை அணிந்துகொண்டு பணி செய்வது மிகவும் சவாலாக உள்ளது. தலை முதல் கால் வரை மூடப்பட்டிருப்பதால், பலருக்கு மூச்சு விடுவதில் சிரமங்கள் ஏற்படும். இந்த உடைகளை அணிந்து கொண்டு கழிவறைக்குக் கூட சென்று வர முடியாது. மேலும், அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாதுகாப்பு கவச உடையை அணிந்தவாறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது சவாலாக மாறியுள்ளது. கொரோனா நோயாளிகள் பலர் குணமடைந்து செல்லும்போது என்னைப் பாராட்டிய தருணம் எல்லா கஷ்டங்களையும் மறக்கச் செய்துவிடும்" என தெரிவிக்கிறார் மருத்துவர் சுகந்தி.

இவரின் கணவரும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்ததோடு கொரோனா வார்டில் பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார் சென்னையில் பணியாற்றும் அரசு மருத்துவர் தியாகு. சென்னை அரசு இயற்கை யோகா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தியாகு, கொரோனா பாதிக்கப்பட்டு 11 நாட்கள் சிகிச்சை எடுத்தவர்.
திருச்சியில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தியாகுவுக்கு நோய் தொற்று இருந்ததால், அவரது குடும்பத்தினரும் 14 தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு அவர் திருச்சிக்குச் செல்லவில்லை. குடும்பத்தினரைப் பிரிந்திருப்பது சிராமமாக இருந்தாலும் கூட, கொரோனா வார்டில் பணிக்குச் செல்வதில் அவர் தயக்கம் காட்டவில்லை.
''மார்ச் 22ம் தேதி சென்னை திரும்பினேன். எனக்கு கொரோனா இருப்பது உறுதியான பிறகு, கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். முதல் சில நாட்கள் அச்சம் தந்தன. தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக, வெளி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்திருந்தேன். திருச்சியிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் பயணம் செய்தேன். எனக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என புலப்படவில்லை. ஆனால் என்னால் என் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்,'' என்றார்.

''கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டுவர மனதைரியம் தேவை. பதற்றமும் உளைச்சலும் நம் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். நான் சிகிச்சை எடுத்த சமயத்தில், மூச்சுப்பயிற்சிகள், எளிமையான யோகாசனங்களைச் செய்தேன். மூச்சுப்பயிற்சியின் முக்கியத்துவத்தை முழுமையாக என்னால் உணர முடிந்தது. தற்போது கொரோனா வார்டில் உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு எனக்கு இந்த அனுபவங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன,''என்கிறார் தியாகு.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததோடு, பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த தனமும் செய்திருக்கிறார் தியாகு.
''தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படாத சூழலில் இருக்கிறோம். ஆனால் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கவேண்டும். நோய் கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகள்(antibody), பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் ரத்தத்தில் கலந்திருக்கும். இதன் மூலம் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்மாவுக்காக ரத்த தானம் செய்தேன்,''என்கிறார் அவர்.
''தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா காலத்தில், பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை அளிக்கும் பணியில் நான் இருக்கிறேன் என்பது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிட்டது,''என்கிறார் தியாகு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












