கொரோனா வைரஸ்: இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என பிபிசி இந்தி சேவைக்கு அளித்த பேட்டியில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து,வணிகம், பள்ளி கல்லூரி என இந்தியாவில் அனைத்து சேவைகளும் மூடப்பட்டன. மக்கள் வெளியே வராமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

இதுவரை ஐந்து கட்டமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இன்று முதல் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது

பள்ளி மற்றும் கல்லூரிகளை, எப்போது திறப்பது என்பதை மத்திய மாநில அரசுகள் ஜூன் மாதம் முடிவெடுக்கும் என உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், கொரோனா முடக்கநிலை காரணமாக நின்றுபோன பத்தாம் வகுப்பு தேர்வினை ஜூன் 15 முதல் 25-ம் தேதி வரை நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதேபோல பல தனியார்ப் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து வருகின்றன.

இந்தநிலையில் பிபிசிக்கு அளித்த பேட்டியில்,’’ பள்ளி தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும். அதன்பின்னர் ஆகஸ்ட் மாதமே பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும்’’ என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மேலும், ''இப்போது உள்ள சூழ்நிலையில், தங்களது எதிர்காலம் என்னவாகும் என மாணவர்கள் மத்தியில் சந்தேகங்கள் உள்ளது. இதில் இருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கல்லூரி மாணவர்கள் மத்தியிலும், பள்ளி மாணவர்கள் மத்தியிலும், அடுத்து என்ன செய்வது, ஆன்லைனில் எப்படி படிப்பது என்ற குழப்பங்கள் இருக்கின்றன.

Banner image reading 'more about coronavirus'

விடுபட்ட சிபிஎஸ்சி பாடங்களுக்கான தேர்வு ஜூலை 1 முதல் 15 வரை நடத்தப்படும். நீட் போன்ற நுழைவு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பதும் விரைவில் முடிவு செய்யப்படும்’’ என்றார் ரமேஷ் பொக்ரியால்

ஆனால் ஹரியானா போன்ற மாநிலங்கள் பள்ளிகளை முன்னரே திறப்பதில் மும்முரமாக உள்ளன. ஹரியானாவில் ஜூலை மாதம் முதல் படிப்படியாகப் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் கன்வார் பால் தெரிவித்திருந்தார்.

சமூக இடைவெளியைப் பின்பற்ற, வகுப்புகளைக் காலை, மாலை என இரண்டு ஷிப்டுகளாக பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: