கொரோனா வைரஸ்: தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

முதல்வர் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை

பட மூலாதாரம், ARUN SANKAR / getty

தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 12 நபர்கள் இறந்துள்ளனர் என்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று இறந்த 12 நபர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுத்திணறல் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று பாதிப்புக்கு உள்ளான 1,373 நபர்களில் 11 நபர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், தெலுங்கானா, குவைத், மகாராஷ்டிரா, கேரளா,உள்ளிட்ட இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 1072 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் செயல்படும் 74 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 5, 44,918மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 16,447 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 585 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,914ஆக உயர்ந்துள்ளது.

முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை

முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ், அரசால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 விழுக்காட்டை காப்பீட்டு திட்டத்தின் கீழ், கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும். கட்டணம் தொடர்பான புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

முன்னதாக, இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழக பிரிவு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெறும் கொரோனா பாதிப்புடைய ஒருவரிடம் மருத்துவர் ஆலோசனை கட்டணத்தை தவிர, நாள் ஒன்றுக்கு ரூ.23,182 கட்டணம் வசூல் செய்யலாம் என்றும் மருந்து, படுக்கை கட்டணம், அறை வாடகை என அனைத்தும் சேர்த்து 10 நாட்களுக்கு ரூ.2,31,000 கட்டணம் வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களிடம் நாள் ஒன்றுக்கு ரூ. 43,141 என்றும் 17 நாட்களுக்கு ரூ.4,31,000 வசூல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.9,600 வரை நிர்ணயிக்கலாம் எனவும் இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ், இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ள கட்டணத்திற்கு பதிலாக, காப்பீடு பெற்றுள்ள நபர்கள், சிகிச்சை எடுத்துக்கொண்டால், தமிழக அரசு அவர்களுக்கான பணத்தை தனியார் மருத்துவமனைகளுக்குத் தொகுப்பு கட்டடனமாக செலுத்தும்.

அதன்படி, தனியார் மருத்துவமனையில் பொது வார்டில், கிரேட் ஏ1,ஏ 2,ஏ 3,ஏ4 என்ற தரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கட்டணமாக ரூ.5,000ஐ அரசு செலுத்தும். அதேபோல கிரேட் ஏ1,ஏ2 மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை தொகுப்பு கட்டணமாக செலுத்தும். இதே சிகிச்சை கிரேட் ஏ3,ஏ4 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.13,500வரை தொகுப்பு கட்டணமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: