கொரோனா வைரஸ் ஊரடங்கு விவசாயிகளின் நிலத்திலிருந்து வீடு தேடி வரும் காய்கறிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கொரோனா தாக்கத்தை அடுத்து, தமிழக அரசின் தோட்டக்கலை துறையின் நடமாடும் காய்கறி விற்பனை நிலையம் மூலமாக காய்கறிகளை விற்பனை செய்வது மற்றும் ஆன்லைன் மூலமாக காய்கறிகளை விற்பனை செய்வது பிரபலமாகி வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள சென்னை நகரத்தில், ஆன்லைன்(https://ethottam.com/) மூலம் பதிவுசெய்யப்படும் ஆர்டர்களின் பேரில் தினமும் 1,000க்கும் மேற்பட்ட காய்கறி தொகுப்புகள் விற்பனையாகின்றன.
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் தற்போதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட காய்கறி பார்சல்களை தோட்டக்கலைத்துறை விற்பனை செய்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் சுமார் மூன்று லட்சம் பார்சல்கள் விற்கப்பட்டுள்ளன.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்படும் காய்கறி, வாடிக்கையாளர்களிடம் விற்கப்படுவதால் வெளிச்சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் சுப்பையன், "கொரோனா தாக்கத்தால் பல விவசாயிகள் வியாபாரம் செய்யமுடியாமல் தவித்தபோது, அவர்களின் பொருட்களை விற்பனை செய்ய எடுத்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது," என்கிறார்.
''கொரோனா நோய் பரவல் குறித்த அச்சம் மக்களிடம் உள்ளது. இந்த நேரத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் வீணாவதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதேநேரம், பொது மக்களும் அதிக விலை கொடுத்து காய்கறிகள் வாங்குவதை பார்க்கமுடிந்தது. தோட்டக்கலைத்துறையின் நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களில் காய்கறிகளை ஏற்றி விற்பனையை ஏற்கனவே செய்துவருகிறோம்.''
''சென்னை நகரத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால், முதியவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியில் வந்து காய்கறிகளை வாங்குவதற்கு சிரமம் உள்ளது என்பதால் ஆன்லைன் வசதி அறிமுகப்படுத்தினோம். தற்போது பலரும் இதனை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆர்டர்கள் அதிகரித்துவருகின்றன,'' என்றார் அவர்.

பட மூலாதாரம், TANHODA
மேலும், ''தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஆன்லைன் விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளதால், சென்னை நகரத்தில் ஆன்லைன் வசதியை விரைவாக செய்துள்ளோம். விவசாயிகளிடம் நேரடியாக எங்கள் அதிகாரிகள் வாங்கிக்கொள்வதால், அவர்கள் எங்கும் வெளியில் வரவேண்டியதில்லை. அதேபோல,வாடிக்கையாளர்கள் வெளியில் வரவேண்டியதில்லை, நேரடியாக அவர்களிடம் கொண்டுசேர்க்கிறோம்,'' என்றார் அவர்.
வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், வெண்டைக்காய், சேனை கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி, இஞ்சி, கத்தரி உள்ளிட்ட 15 விதமான காய்கறிகள் அடங்கிய மூன்று விதமான காய்கறி தொகுப்பு விற்பனைக்கு வருகின்றன. ரூ.300, ரூ.500 மற்றும் ரூ.600 என்ற விலையில் விற்கப்படுகின்றன. காய்கறிகளின் அளவு மட்டும் விலைக்கு ஏற்ப மாறுபடும். பழங்களும் இதேபோல ரூ.500, ரூ.600 மற்றும் ரூ.800 மதிப்பிலான பழங்கள் விற்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Tanhoda
ஆன்லைன் பதிவு செய்பவர்களுக்கு, 24 மணிநேரத்தில் காய்கறி கிடைக்குமாறு வசதி செய்யப்பட்டுள்ளது; விற்பனைக்கான ரசீது செல்போன் மெசேஜ் மற்றும் ஈமெயில் மூலம் அனுப்பப்படுகின்றது.
ரூ.300 மதிப்பிலான காய்கறி தொகுப்பை வாங்கிய சென்னைவாசி ப்ரியா, வெளிச்சந்தையை விட தரமான காய்கறி தனக்கு கிடைத்ததாக கூறுகிறார்.
''வெளியில் சென்று காய்கறி வாங்குவதற்கு பதிலாக வீட்டுக்கு வந்து விற்பனை செய்வதால், மிகவும் எளிமையாக உள்ளது. காய்கறி கடைகளில் கொரோனா காரணமாக தினமும் விலையை ஏற்றுகிறார்கள். காய்கறி சந்தையில் இருந்து வரவில்லை என்றால் பழைய காய்கறிகளை கூட, அதிக விலைக்கு விற்கிறார்கள். ஆன்லைன் மூலம் காய்கறி வருவதால், எனக்கு மகிழ்ச்சி. கொரோனாவுக்கு பின்னரும் இந்த விற்பனை தொடரவேண்டும்,''என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












