கொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட்-19க்கு கேரளம் முன்மொழிகிற பிளாஸ்மா சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி-க்காக
கோவிட்-19 (கொரோனா வைரஸ் நோய்) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கேரளம் முன்மொழிந்த கன்வேலசன்ட் பிளாஸ்மா சிகிச்சை (ஊநீர் சிகிச்சை) முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா பரவலை ஒட்டி கேரள மாநில அரசு அமைத்த மருத்துவ நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றிருந்த குருதியியல், குருதி மாற்றியல் மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அவசர சிகிச்சை வல்லுநர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. உலகளாவிய தொற்றாக உருப்பெற்றுள்ள கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க இந்த ஊநீர் சிகிச்சையைப் பயன்படுத்தலாம் என்று இந்தக் குழு பரிந்துரைத்தது.
‘பிளாஸ்மா தெரபி’ அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன?
ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.
இந்த அடிப்படையில் கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது, அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.

பட மூலாதாரம், THE TURKISH RED CRESCENT/Getty Images
“கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படும்” என்று பிபிசியிடம் தெரிவித்தார் கேரள மருத்துவ நடவடிக்கைக் குழுவின் உறுப்பினரும், கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையின் அவசர சிகிச்சை சிறப்பு மருத்துவருமான டாக்டர் அனூப்குமார்.
நோயில் இருந்து மீண்டவர்கள் உடலில் எந்த அளவுக்கு எதிரணுக்கள் உள்ளன என்பதைத் தீர்மானிக்க எலிசா சோதனை நடத்தப்படும்.
கொடையாளி உடலில் இருந்து ரத்தம் எடுப்பதற்கான நிபந்தனைகள் என்னென்ன?
நோயில் இருந்து மீண்டவர்களுக்கு இரண்டு முறை கோவிட்-19 இருக்கிறதா என்று பரிசோதனை, பிறகு எலிசா சோதனை ஆகியவை நடத்தப்பட்ட பிறகும், அவரது ரத்தம் தூய்மையானதா என்பதைத் தீர்மானிக்க இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிர்ணயித்துள்ள திட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டபிறகே கொடையாளி உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்படும்.
“இந்த விதிமுறை தளர்த்தப்படாது” என்கிறார் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் கழக குருதி மாற்றியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் தேவஷிஷ் குப்தா.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும்
- கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?

ரத்தம் எப்படி எடுக்கப்படும்?
எல்லா சோதனைகளும் முடிந்து, ஒரு குணமான கோவிட்-19 நோயாளி உடலில் இருந்து ரத்தம் எடுப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன், ஆஃபெரசிஸ் (apheresis) என்று அழைக்கப்படும் முறைப்படி ரத்தம் எடுக்கப்படும். இந்த முறையில் கொடையாளி உடலில் இருந்து பெறப்படும் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு மீதமுள்ள ரத்தம் கொடையாளி உடலிலேயே திரும்பச் செலுத்தப்பட்டுவிடும்.
“பிளாஸ்மாவில் (ஊநீர்) மட்டுமே எதிரணுக்கள் இருக்கும். ஒரு கொடையாளி உடலில் இருந்து 800 மி.லி. ஊநீர் பிரித்தெடுக்கப்படும். ஆனால், ஒரு கோவிட்-19 நோயாளிக்கு இதில் 200 மி.லி. அளவு ஊநீர்தான் செலுத்தப்படும். எனவே ஒரு தகுதி வாய்ந்த, குணமடைந்த நோயாளி உடலில் இருந்து நான்கு பாக்கெட் எடுத்து, நான்கு நோயாளிகளுக்கு செலுத்த முடியும்” என்கிறார் டாக்டர் அனூப் குமார்.
“இந்த ஊநீர் கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டுமே செலுத்தப்படும். வேறெவருக்கும் செலுத்தப்படாது” என்கிறார் டாக்டர் குப்தா.

பட மூலாதாரம், THE TURKISH RED CRESCENT/Getty Images
ஊநீர் எப்போது செலுத்தப்படும்? எவ்வளவு விரைவில் குணமாகும்?
“காய்ச்சல், இருமல் மட்டும் இருப்பவர்களுக்கு இந்த ஊநீரை செலுத்தவேண்டியது இல்லை. காய்ச்சல், இருமல் மற்றும் ஆக்சிஜன் பூரித நிலையில் (oxygen saturation levels) லேசான வீழ்ச்சி இருப்பவர்களுக்கும்கூட இந்த ஊநீரை செலுத்தவேண்டியது இல்லை. யாருடைய உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறதோ, எந்த கோவிட்-19 நோயாளியின் ஆக்சிஜன் பூரித நிலை மிகக் குறைவாக இருக்கிறதோ, அவர்கள் நிலை மிக மோசமான நிலைக்கு சென்றுவிடாமல் தடுக்க இந்த ஊநீர் செலுத்தப்படும்” என்கிறார் அனூப் குமார்.
சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது செலுத்தப்படலாம் என்கிறார் அவர்.
“எங்களிடம் நீண்டகாலத் தரவுகள் இல்லை. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில், இந்த ஊநீர் செலுத்தப்பட்ட நோயாளிகள் குணமடையத் தொடங்குவதற்கு 48 முதல் 72 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது” என்கிறார் அனூப்குமார்.

அடுத்தது என்ன?
கிட்டத்தட்ட மோசமான நிலையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் (டிரக் கண்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா) அங்கீகாரம் அளிப்பதற்காக கேரள சுகாதாரத் துறை காத்துக்கொண்டிருக்கிறது. இந்த அனுமதி விரைவில் கிடைத்துவிடும் என்று மருத்துவ நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் நினைக்கின்றனர்.
ஆனால், இதைப் போன்ற சிகிச்சை முறை சீனாவிலும், தென் கொரியாவிலும் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இங்கே மருத்துவமனை சோதனைகளை மேற்கொள்ள போதிய நேரம் இருக்காது.
“மருத்துவமனை சோதனைகளை மேற்கொள்ள எலிசா பரிசோதனை சாதனங்கள் வந்து சேரவேண்டியுள்ளது. விற்பனையாளர்களிடம் அதற்கான ஆர்டர்கள் கொடுத்துவிட்டோம். உலக அளவில் இந்த சாதனங்களுக்கு தேவை அதிகரித்துவிட்டது” என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
கேரளாவில் கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்த 84 பேர் உள்ளனர். “குணமடைந்த பிறகு 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை யார் யார் நிறைவு செய்திருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். மிகச் சரியான எண்ணிக்கை தற்போது தயாராக இல்லை. ஆனால், அவர்களில் பெரும்பாலோரிடம் இருந்து பிளாஸ்மா (ஊநீர்) கொடை பெற முடியும்” என்றார் டாக்டர் அனூப்குமார்.
பிளாஸ்மா சிகிச்சைக்கு எவ்வளவு செலவு பிடிக்கும்?
ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை செலவு ஆகலாம். ஏனெனில் இதெல்லாம் அரசு மருத்துவமனை மூலம்தான் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் டாக்டர் அனூப்குமார்.
எதற்காக பிளாஸ்மா சிகிச்சை?
அடிப்படையில் இரண்டு காரணங்களுக்காகத்தான் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை பற்றிய யோசனை வந்தது. தற்போது கோவிட்-19 சிகிச்சைக்கு குறிப்பான வைரஸ் எதிர்ப்பு வினையாற்றிகள் (ஆன்டி வைரல் ஏஜென்டுகள்) இல்லை என்பது ஒரு காரணம்.
கோவிட்-19 சிகிச்சை மேலாண்மைக்கு உறுதியான வழிமுறைகள் இன்னும் வகுக்கப்படாததால், சார்ஸ், மெர்ஸ், எச்1என்1 போன்ற தொற்று நோய்களின் சிகிச்சையில் செய்ததைப் போல மருத்துவர்கள் நூற்றாண்டுப் பழமையான கன்வாலசன்ட் பிளாஸ்மா சிகிச்சை முறைக்குத் திரும்பிச் செல்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












