தமிழகத்தில் கொரோனா: வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட 84 வயது மூதாட்டி

84 வயது மூதாட்டி

பட மூலாதாரம், NurPhoto / Getty

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியிடங்களில் காணப்பட்ட 1,40,176 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

1,51,151 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் 1,19,286 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் இதன்மூலம், ரூ.53,72,044 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது. 

கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக தமிழக அரசின் சார்பில் தினமும் மாலையில் சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து தகவல்களைத் தெரிவிப்பது வழக்கம். ஆனால், நேற்று தமிழக தலைமைச் செயலர் கே. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

"தமிழக அரசின் பிரதானமான நோக்கம் இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதுதான். அதற்காகத்தான் இந்த ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முடக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியில் எதுவும் வந்துவிடாத வகையில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்" என்று தெரிவித்தார் தலைமைச் செயலர்.

"கொரோனோ தொற்றில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருக்கிறது"

பட மூலாதாரம், Getty Images

இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஓரிரு நாளில் அது முடிந்துவிடும். அதைத் தொடர்ந்து, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி, நோய்க் குறி ஏற்பட்டால் சோதனை செய்யப்படும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கு சோதனைகளை முடித்துவிட்டால் இந்த நோய் கட்டுப்பாட்டிற்கு வருமென்ற நம்பிக்கை இருக்கிறது.

ஊரடங்கு மூலமாக ஏற்பட்டிருக்கும் சிரமங்களைப் போக்க பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அரிசி, பருப்பு போன்றவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 90 சதவீதம் குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. ஏழ்மையில் இருக்கக்கூடிய பல்வேறு தொழிலாளர் பிரிவினருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஊரடங்கினால் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் செய்யப்பட்டுவருகின்றன என்று தெரிவித்தார் சண்முகம்.

"கொரோனோ தொற்றில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருக்கிறது"

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு ஏற்கனவே மாநிலப் பேரிடர் நிதிக்காக 510 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. தற்போது தேசிய ஹெல்த் மிஷன் நிதிக்கென 15 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. அதில் முதற்கட்டமாக 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் தமிழ்நாட்டிற்கு 314 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. ஆனால், மத்திய அரசின் நிதியை மட்டும் நம்பி மாநில அரசு இல்லை. எவ்வளவு தேவையோ அந்த அளவு நிதியை மாநில அரசு திரட்டி செயல்படும் என்றும் தலைமைச் செயலர் விளக்கமளித்தார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சருடன் மருத்துவ ஆலோசனைக் குழுவினர் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் பிரதீப் கௌர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கொரோனா வைரஸ்

"தமிழ்நாட்டில் கொரோனாவை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. பொது சுகாதார நிலையும் நன்றாக உள்ளது. அதைப் பற்றி விவாதித்தோம். மேலும், தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், நோயாளிகளுக்கான தேவை, அவர்களின் குடும்பத்தினரின் தேவை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், களத்தில் கொரோனாவை எதிர்கொண்டு போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்களின் பாதுகாப்பு குறித்து பேசினோம். தமிழகத்தில் இவ்வளவு முயற்சிகள் நடந்தபோது தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே, மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென பரிந்துரைத்திருக்கிறோம்." என்று அவர் கூறினார்.

மேலும், கூடுதலாகக் கிடைக்கும் இந்த 14 நாட்களிலும் நிறைய பேரை கொரோனா சோதனைக்கு உள்ளாக்க வேண்டும். நோயாளிகளின் உறவினர்கள், சுற்றி இருப்பவர்களைச் சோதிக்க வேண்டும். அப்படி நிறையப் பேரைச் சோதித்தால், நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என்றார் பிரதீப் கௌர்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

புதுவையில் என்ன நிலை?

இதனிடையே, புதுச்சேரியில் மருத்துவர்கள், காவல் துறையினர், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கொரோனா தொற்று பரவாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அதன் காரணமாக, கொரோனா நோய்த் தொற்று புதுச்சேரியில் கட்டுக்குள் உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி செய்பவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அதன் அடிப்படையில் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும், இழப்பு ஏற்பட்டால் 10 லட்சமும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்படும் எனப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: