கொரோனா வைரஸ் மும்பைக்கு வந்தது எப்படி? தாராவி போன்ற குடிசைப் பகுதிகளில் நிலை என்ன?

மும்பைக்கு கொரோனா வந்தது எப்படி? தாராவி போன்ற குடிசைப் பகுதிகளில் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மயாங்க் பாக்வத்
    • பதவி, பிபிசி மராத்திக்காக

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பை எப்படி கொரானா வைரஸ் பரவும் முக்கிய மையமாக விரைவாக மாறிவருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 5,443 உயர் இடர்ப்பாடு மிக்க நபர்களை மும்பை மாநகராட்சி தேடிக் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளது.

பல வெளிநாட்டினர் பணி நிமித்தமாக மும்பை வருகின்றனர். அதைப் போலவே லட்சக்கணக்கான இந்தியக் குடிமக்கள் மும்பையில் இருந்து வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கின்றனர். இது போன்ற பயணிகளால் முதல் முதலாக மார்ச் மாதம் ஒரு நோயாளி மகாராஷ்டிர மாநிலத்தில் கண்டறியப்பட்டார். இப்போது இந்த தொற்று மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிவிட்டது.

தாராவியில் கொரோனா பரவியது எப்படி?

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளை நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என்று அரசு அறிவித்தது. ஆனால் வோர்லி, பிரபாதேவி, கோவாண்டி, சீட்டா கேம்ப், காலினா போன்ற பகுதிகளே நோய் அதிகம் பரவும் பகுதிகளாக உள்ளன.

மும்பைக்கு கொரோனா வந்தது எப்படி? தாராவி போன்ற குடிசைப் பகுதிகளில் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

வோர்லி கோலிவாடா பகுதியில் 11 பேருக்கும், பிரபாதேவி சாவ்ல் பகுதியில் 10 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பிரபாதேவியில் உள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில் 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மும்பையின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்தார்.

வெளிநாட்டில் இருந்து மும்பை வந்த சிலருக்கு கொரோனா இருந்து அவர்கள் மூலமாகவே கிழக்கு மும்பையின் புறநகர்ப் பகுதிகளான சீத்தா கேம்ப், மான்குர்த், செம்பூர், கௌவன்டி, சிவாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு கொரோனா தொற்று சென்றது. ஜெய் போலேநகர், விஷ்ணு நகர் பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் மூலமாகவே கொரோனா தொற்று பரவியது என்று மாநிலத்தின் சிறுபான்மையினர் நல அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

ஜெய்போலே நகரைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். இவர் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருந்து டாக்சியில் அழைத்து வந்தவர். விஷு நகர் பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்மணி உயிரிழந்தார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரது வீட்டில் வேலை செய்தவர். மும்பை மாநகராட்சி அந்தப் பகுதியை சீலிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தாராவியில் கொரோனா வைரஸ் எப்படிப் பரவியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் “வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய சில வெளிநாட்டினர் தங்களுடன் கொரோனா தொற்றையும் கொண்டுவந்தனர். இவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. வீட்டு தனிமைப்படுத்தல் செய்யப்பட்டபோதுகூட அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். அவர்கள் வீடுகளில் வீட்டு வேலை செய்தவர்களுக்கு கொரோனா தொற்றியது. அவர்கள் தங்களது குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு அறியாமலேயே இந்த தொற்றினைப் பரப்பினர்” என மருத்துவ விஷயங்கள் குறித்து எழுதிவரும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அமோல் அன்னடேட்.

மும்பைக்கு கொரோனா வந்தது எப்படி? தாராவி போன்ற குடிசைப் பகுதிகளில் நிலை என்ன?

பட மூலாதாரம், ANI

“குடிசைவாசிகளுக்கு கல்வியறிவு குறைவு என்பது மட்டுமல்ல, வறுமை காரணமாக நெருக்கடியான ஒரு அறையில் 10-15 பேர்கூட வாழவேண்டிய நெருக்கடி அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு வைரஸ் தொற்றினால், அது மற்றவர்களுக்கு வேகமாகப் பரவுகிறது. சில சமூகங்களில் உள்ளவர்கள் தங்களுக்கெல்லாம் கொரோனா வராது என்று தவறாக நம்புகிறார்கள். அதனால் முடக்கநிலைக் காலத்தில் அவர்கள் விதிகளை, அறிவுரைகளைப் பின்பற்றுவதில்லை,” என்று 35 ஆண்டுகளாக சையோன் தாராவி பகுதியில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் அணில் பச்சனேகர் தெரிவித்தார்.

தவறான புரிதல் காரணமாக கொரோனா பரவுகிறதா?

மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து பல தவறான கருத்துகளும், தகவல்களும், புரிதல்களும் இருந்தால் அது வேகமாகப் பரவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“தனிமைப்படுத்திக் கொள்ளுதலையோ, சமூக இடைவெளியையோ மக்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. அவர்கள் நோயை எளிமையாக எடுத்துக்கொள்கின்றனர். இந்த நோய் தங்களை ஏதும் செய்யாது என்று மக்கள் நினைக்கிறார்கள். கொரோனா பரவுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்” என்கிறார் மும்பை மாநகராட்சி துணை ஆணையர் கிரண் திகாவாகர். தாராவி பகுதியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தற்போது திகாவாகருக்குத் தரப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

வெப்பமான சுற்றுச்சூழலிலும் கொரோனா பரவக்கூடும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த வைரஸ் பரவுவதில், அல்லது மெதுவாகப் பரவுவதில் தட்ப வெட்ப நிலை தாக்கம் செலுத்துமா என்பது பற்றி எந்த நிரூபணமும் இல்லை. “வெப்பமான பிரதேசத்தில் இந்த வைரஸ் பரவாது என்று மக்களுக்கு ஒரு தவறான புரிதல் இருக்கிறது. இந்த வைரசை இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறோம். எனவே எந்த தட்பவெட்பத்தில் இது எப்படிப் பரவும் என்பது குறித்து உறுதியாக எதையும் சொல்ல முடியாது. வெப்பமான பகுதியில் வசிப்பதால் நம்மை இந்த வைரஸ் தொற்றாது என்று நினைப்பது தவறு. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படலாம். எனவே மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்கவேண்டும்” என்கிறார் பெருந்தொற்று வல்லுநர் திருப்தி கிலாடா.

கண்காணிப்பில் வைக்கப்படும் சந்தேகத்துக்குரிய நோயாளிகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தொகுப்பு வாரி செயல்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு தொகுப்பிலும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதோடு, நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபரின் தொடர்பில் இருந்த அனைவரும் அடையாளம் காணப்படுகிறார்கள். இவ்விதம் மாநிலத்தில் 9 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபே சனிக்கிழமை வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை வரை மாநிலத்தில் 42,713 பேர் வீடுகளிலும், 2,913 பேர் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவிக்கிறது. மும்பையில் கொரோனா நோயாளிகள் பரவல் அதிகரிக்காமல் தடுக்கத் தேவையான எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் சுகாதாரத் துறை அமைச்சர் டோபே.

மும்பைக்கு கொரோனா வந்தது எப்படி? தாராவி போன்ற குடிசைப் பகுதிகளில் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை 4 ஆயிரம் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள். தேவையெனில் ட்ரோன், ஜி.பி.எஸ். போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயர் இடர்ப்பாடுள்ள நபர்களும், அவர்களது உறவினர்களும் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

“மும்பையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சிலர் வெளிநாடு சென்று வந்தவர்களுடனோ, ஏற்கெனவே நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களுடனோ நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள். ஆனால், இத்தகையவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. சமூகத் தொற்று என்ற நிலை மகாராஷ்டிராவில் வரவில்லை. மும்பை குடிசைப் பகுதியில் கொரோனா பரவாமல் பார்த்துக்கொள்வதே அரசாங்கத்துக்கு உள்ள மிகப்பெரிய சவால். குடிசைப் பகுதியில் கொரோனா தொற்றிய நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வெளியே கொண்டு செல்வது பற்றி அரசு யோசித்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.

அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

நோய்ப்பரவல் தடுக்கப்படவேண்டிய தொகுப்புகளாக அடையாளம் கண்டுள்ள பகுதிகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஒவ்வொரு குடிமக்களையும் மும்பை மாநகராட்சி சரிபார்க்கிறது. குறைவான இடர்ப்பாடுள்ள தொடர்புகள் தொலைபேசி மூலம் திரட்டப்படுகிறது.

கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக பல இடங்கள், 5 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உதவியோடு கண்காணிக்கப்படுகின்றன என்கிறார் மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் ககானி. இது தவிர, 210 சுகாதாரச் சாவடிகளை அமைத்துள்ள மும்பை மாநகராட்சி, 186 மருத்துவனைகளையும் நடத்துகிறது.

கொரோனா வைரஸ்

குடிசைவாசிகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உணவையும், தண்ணீரையும் கொண்டு சேர்ப்பது முக்கியக் கவலையாக உள்ளது. “குடிசைப் பகுதிகளின் மீது அரசு கவனம் வைக்கவேண்டும். ஏழைகளுக்கு உணவு விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற உத்தரவாத்ததை அளித்து, மும்பை மாநகரத்தில் இந்த நோய் தீவிர நிலையை அடையாமல் பாதுகாக்கும் வகையில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியம்,” என்கிறார் டாக்டர் அணில் பச்னேகர்.

“கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வால், சளி, இருமல், காய்ச்சல் உள்ள நோயாளிகள் மருத்துவர்களைப் பார்க்கிறார்கள். நான் தினமும் 200 நோயாளிகளைப் பார்க்க நேர்கிறது. சாதாரணமான வைரல் காய்ச்சல் மற்றும் கொரோனா ஆகிய இரண்டுக்குமான அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். எனவே மருத்துவர்கள் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி நோயாளிகளைப் பார்க்கவேண்டும். காய்ச்சல் நிற்காமல் அடித்தால், நோயாளியின் நெஞ்சப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும்,” என்று பரிந்துரைக்கிறார் இந்திய மருத்துவக் கழகத் துணைத் தலைவராகவும் இருக்கும் டாக்டர் பச்னேகர்.

நோய்ப் பரவல் கட்டுப்பாட்டு பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் கட்டுப்பாட்டு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் அத்தகைய பகுதிகளில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்கின்றனர். மும்பை மாநகராட்சி நடத்துகிற மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் – 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒருவேளை அவசரத் தேவை ஏற்பட்டால் இவர்களையும் பயன்படுத்திக்கொள்ளும் திட்டம் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: