கொரோனா வைரஸ்: "எங்களிடம் பேசவே அஞ்சுகின்றனர்" - தனிமைப் படுத்தப்பட்டிருப்போரின் உள்ளக்குமுறல்

coronavirus quarantine

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தனிமை படுத்தப்பட்டிருப்பதாக தெரியப்படுத்தும் சில நடவடிக்கைகள், உதாரணமாக, அவர்கள் வீட்டின் வாசலில் ஒட்டப்படும் குறியீடுகள், அவர்களின் தகவல்களை வெளியிடுவது இவை போன்றவற்றால் அவர்கள் சில விளைவுகளை சந்தித்து நேரிடுகிறது. இது குறித்து பிபிசி செய்தியாளர் விகாஸ் பாண்டே விவரித்துள்ளார்.

டெல்லியில் வாழும் பரத் திங்கராவின் அண்ணனும் அவரது மனைவியும் மார்ச் 22ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் வீட்டில் இருக்கும் ஆறு பேரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நோய்க்கான அறிகுறி ஏதும் இல்லையென்றாலும் அரசின் அறிவுறுத்தலின் பேரில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் அவர்கள் வீட்டிற்கு வெளியே 'இந்த வீடு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது யாரும் வர வேண்டாம்' எனக் கூறும் ஒரு ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். மக்கள் விதிமுறையை பின்பற்றவே இது ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அரசின் விதிமுறைகளை பின்பற்றும் திங்கரா போன்றவர்களுக்கு இந்த ஸ்டிக்கர் மன உளைச்சலைத் தருகிறது.

கொரோனா வைரஸ்

"எங்கள் வீடு மிருகக்காட்சி சாலை போன்று ஆகிவிட்டது," என அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். "நாங்கள் ஒரு நிமிடத்திற்கு எங்கள் பால்கனிக்கு வந்தால் கூட எங்கள் அருகில் வசிப்பவர்கள் உள்ளே போகுமாறு கூறுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் விழிப்புணர்வுக்காக அடையாளம் காணும் விதமாக இருக்க வேண்டும் என்பது எங்களுக்கு புரிகிறது. அதிகாரிகள் எங்களிடம் தன்மையாகவே நடந்து கொள்கின்றனர். ஆனால் பொது மக்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம்தான் கவலையளிக்கிறது," எனக் கூறினார் திங்கரா.

"சிலர் எங்கள் வீட்டின் புகைப்படத்தை எச்சரிக்கை என்று கூறி வாட்சப் குழுவில் பகிர்ந்துள்ளனர். இதனால் எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை. தனிமைப்படுத்தியிருப்பது என்பது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அதற்கு காரணம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது கிடையாது என்று மக்கள் உணர வேண்டும்." என்கிறார் திங்கரா.

நாடு முழுவதும் இது போல் பலரிடம் பேசியது பிபிசி. அனைவரும் இது போன்ற அனுபவத்தை சந்தித்ததாக கூறுகின்றனர். டெல்லி அருகே நொய்டாவில் வசிக்கும் ஒரு தம்பதி, "எங்கள் வீடு நிறைய பேருக்கு பயம் கொள்ளும் இடமாக மாறியது" என்கிறார்கள்.

" வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் நாங்கள் எங்களை தனிமைப்படுத்தி கொண்டோம். ஆனால் சமூகத்திலிருந்து விலக்கப்படுவோம் என நாங்கள் நினைக்கவில்லை," என்கிறார் அவர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தொலைபேசி மூலமாக அல்லது குறுந்தகவல் முலமாக ஆறுதலான வார்த்தைகள் மட்டுமே.

"ஆனால் அனைவரும் எங்களை சந்தேக கண்களோடு பார்க்கின்றனர். நாங்கள் பால்கனியில் நின்றால் கூட எங்களை அப்படித்தான் பார்க்கின்றனர். நாங்கள் யாரையும் சந்திப்பது கிடையாது. இவ்வாறு நடத்தப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஃபரூக்காபாத் என்னும் மாவட்டத்தில் வாழும் குல்ஜித் சிங் என்பவரும் தனிமைப் படுத்தப்பட்டிருந்தபோது இதே பிரச்சனையை எதிர்கொண்டதாக கூறுகிறார்.

பாலிவுட் பிரபலம் கனிகா கபூரை அவர் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

கனிகா கபூர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்ததையடுத்து ஊடகங்கள் நிறைய பேசின. இதனால் தன் குடும்பத்தின் மேல் அழுத்தம் ஏற்பட்டதாக கூறினார் குல்ஜித் சிங்.

"பல வதந்திகள் பரவின. நான் ரத்த வாந்தி எடுப்பதாகவும் சில நாட்களில் உயிரிழந்து விடுவேன் எனவும் வதந்திகள் பரவின," என்றார்.

"மக்கள் பயத்தில் உள்ளனர். அதனால் சமூக வலைத்தளத்தில் வரும் வதந்திகளை நம்புகின்றனர்." என்கிறார் சிங்.

கோப்புப்படம்

சிங்கின் தனிமைப்படுத்தப்பட்டிருந்த காலம் முடிந்தது. ஆனால் மக்கள் பார்வையில் இதை ஏற்றுக் கொள்ள பல நாளாகும் என்கிறார் அவர். காய் மற்றும் பால் விற்பவர் கூட தனது வீட்டிற்கு வர மறுக்கின்றனர் என்கிறார் அவர்.

சில சமயங்களில் சோதனை மேற்கொள்ளும் முறையே பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

பிகார் மாநிலத்தில் ஒரு தம்பதியின் மகன் ஒருவரை தெருவுக்கு வந்து பரிசோதனையை செய்து கொள்ளுமாறு கூறப்பட்டது.

அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

"கனடாவிலிருந்து வந்த அவன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தான். ஆனால் மருத்துவர்களை பாதுகாப்பு உடையில் பார்த்தது எங்கள் அருகில் வாழ்பவர்களுக்கு அச்சத்தை தூண்டியது. எங்கள் மகனுக்கு கொரோனாத் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டபின்பும் அவனிடம் யாரும் பேசுவதில்லை. பேச தயங்குகின்றனர்" என்கிறார்கள் அந்த தம்பதி.

தகவல்கள் வெளியானது

ஹைதராபாத் , பெங்களூர் போன்ற நகரங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடுகின்றனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஏதோ விடுமுறை நாட்களில் இருப்பதைப் போல சுற்றி திரிகின்றனர். அதனால் தான் அவர்கள் பேரை வெளியிடுகிறோம்" என்கிறார் பெங்களூருவை சேர்ந்த அந்தஅதிகாரி. ஆனால் இது அவர்களின் தனிமையைக் கெடுக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

பேரை மட்டும் அரசு கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவர்களின் வீட்டு விலாசத்தோடு வெளியிட்டது அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் என்கிறார் பெங்களூர் வழக்கறிஞர் கே.வி. தனஞ்ஜெய்.

தனிமைப்படுத்துதல் தொடர்பாக சில போராட்டங்களும் நடந்துள்ளது. மைசூரில் 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விடுதியில்அதிகாரிகளைக் கொண்டு அவர்களை காலி செய்ய சொல்லுமாறு கூறி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

அவர்கள் அங்கிருந்து ஜன்னல் மூலமாக எச்சில் துப்பி அதிலிருந்து மக்களுக்கு பரவி விடும் என மக்கள் பயந்தனர் என அந்த பகுதியில் வசிப்பவரும் மைசூரின் முன்னாள் மேயருமான எம்.ஜே . ரவிகுமார் தெரிவித்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

மூத்த போலீஸ் அதிகாரி சி.பி.ரிஷ்யநாத் கூறுகையில், இவ்வாறு வேறுபாடு பார்ப்பவர்கள் மீதும் வதந்திகளை பரப்புவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஹைதராபாத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 19 பேரின் பட்டியல் அவர்களின் தொலைபேசி எண்ணுடன் வெளியானது.

இதனால் பல நேரங்களில், பலர் வைரஸை எப்படி அழிப்பது என அறிவுரை அளிப்பதாக அந்த குடும்பங்கள் கூறுகின்றனர்.

இதே போன்ற வேற்றுமையை தான் சந்தித்தாக முடக்கம் அறிவிக்கும் ஒரு நாள் முன்னர் நகரத்தை விட்டு சென்ற ரமேஷ் துங்கா கூறியுள்ளார்.

"ஹைதராபாத்திலிருந்து என் கிராமத்திற்கு சென்றேன். வெளிநாட்டு பயணம் ஏதும் செய்யவில்லையென்றாலும் கிராம அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்" என்கிறார் அவர்.

"ஆனால் அதற்குபின் தான் எனக்கு பிரச்சனை தொடங்கியது. என் குடும்பத்துடன் பேசுவதையே அனைவரும் தவிர்த்துவிட்டனர். எனக்கு கொரோனாவைரஸ் இருப்பதாகவும் அனைவருக்கும் அதை நான் பரப்பிவிடுவேன் என அனைவரும் நம்பினர். எச்சரிக்கையாக இருக்கலாம் ஆனால் மனிததன்மையை இழந்துவிடக்கூடாது" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: