கொரோனா வைரஸ்: மருத்துவமனையாக மாறிய பள்ளிவளாகம் - உதவும் தன்னார்வலர்கள்

- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தனார்வலர்கள் பலர் உணவு மற்றும் மளிகை பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். அதேபோல், கொரோனா சிகிச்சைக்காக கல்லூரி வளாகம், மருத்துவமனை மற்றும் பள்ளி வளாகங்களை இலவசமாக அரசுக்கு வழங்க தனியார் நிர்வாகத்தினர் பலர் முன்வந்துள்ளனர்.
மருத்துவமனையாக மாறிய பள்ளிவளாகம்
கோவையில் கொரோனா பதிப்புள்ளவர்களுக்கு சிங்காநல்லூர் அருகே உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டவர்களை கண்காணிக்க மருத்துவமனைக்கு அருகிலே ஓர் இடத்தை மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்திருந்த நிலையில், தங்களது பள்ளி வளாகத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து அரசுக்கு உதவி வருகின்றனர் பெர்க்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்தினர்.
"கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பில்லை என கண்டறியப்பட்டவர்களை 14 நாட்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க இடம் தேவைப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தினர் எங்களை அணுகினர். உடனடியாக அனுமதி வழங்கி, அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைத்தோம்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும்
- கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?

ஊரடங்கு உத்தரவு காரணமாக வகுப்பறைகள் வெறுச்சோடியே இருக்கின்றன. அதனால், பள்ளி வளாகத்தில் இருந்த 11 வகுப்பறைகளை சுத்தம் செய்து சுகாதாரத்துறைக்கு வழங்கியுள்ளோம். ஒரு வகுப்பறையில் இரண்டு பெட்டுகள் என மொத்தம் 22 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது." என தெரிவிக்கிறார் பெர்க்ஸ் பள்ளியின் நிர்வாகி ஸ்ரீநிவாசன்.
மேலும், "கண்காணிப்பில் இருப்பவர்கள் நடைபயிற்சி செய்ய இடவசதியும் உள்ளது. அவர்களின் பொழுதுபோக்கிற்காக தொலைகாட்சி வசதி அரசு சார்பில் ஏறபாடு செய்யப்படவுள்ளது. இவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மனரீதியாக வலிமையாக வைக்க உதவும். கொரோனாவிற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் இடவசதி அளித்து உதவியிருப்பது மிகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் தருகிறது. உலகம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான இந்த சூழலில் இருந்து விடுபட அரசுக்கு எதாவது ஒரு வகையில் உதவ அனைவரும் முன்வர வேண்டும்" என கேட்டுக்கொண்டார் ஸ்ரீனிவாசன்.
மருத்துவ பணியாளர்களின் வீடாக மாறிய மருத்துவமனை
கொரோனா சிகிச்சைக்காகவும், குடும்பத்தினரை சந்திக்காமல் இரவு பகலாக கொரோனா வார்டில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் தங்குவதற்காகவும் தனது மருத்துவமனையை அரசுக்கு ஒப்படைத்துள்ளார் மருத்துவர் மகேஸ்வரன்.
"கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கபட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு நிர்வாகமும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதே கொரோனாவின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை என்னால் கணிக்க முடிந்தது. அதனால், 37 வருடங்களாக இயங்கி வரும் எனது மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்காக ஒப்படைக்க நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிவு செய்தேன்.

மருத்துவமனையை பார்வையிட்ட சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கொரோனா சிகிச்சைக்காக எங்களின் மருத்துவமனயை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பொதுப்பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை இங்கு வைத்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்கிறார் மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் சுபா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மகேஸ்வரன்.
"கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர், தங்களின் மூலமாக குடும்பத்தினருக்கு கொரோனா நோய் தொற்றிவிடுமோ என்ற பயத்தில் வீட்டிற்கே செல்வதில்லை. அவ்வாறு தன்னலம் பார்க்காமல் மருத்துவ சேவை செய்துவரும் பத்து மருத்துவ பணியாளர்கள் இங்கு தங்கியுள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசுக்கு அதிக இடவசதி தேவைப்படும். எனவே, தற்போது மூடப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அரசுக்கு இடவசதி செய்து தர பொறுப்புணர்வோடு தாமாக முன்வர வேண்டும்" என தெரிவிக்கிறார் இவர்.
கொரோனா சிகிக்கைக்காகவும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்காகவும் இடங்களை இலவசமாக வழங்க கோவை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் மைய வளாகம், ஈஷா யோகா மையம், தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் முன்வந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












