ரிசர்வ் வங்கி அறிவிப்பு: சாமானியர்களுக்கான நன்மை என்னென்ன? - விளக்கம் தரும் இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைதொகுத்து வழங்குகிறோம்.
தினத்தத்தி: "ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன?"
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன? என்பது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு குறித்தும், இதனால் மக்களுக்கு கிடைக்கும் பலன் குறித்தும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக வைக்கும் இருப்புத் தொகையை 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைத்து இருக்கிறார்கள். அதனால் வங்கிகளிடம் ரூ.1 லட்சம் கோடி மிச்சம் ஆகும். அவற்றை ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லாததால், மக்களுக்கு அவர்கள் கடனாக வழங்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கு வட்டியும் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே வங்கிகள் குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கியிடம் குறுகியகால கடன் வாங்கலாம். வங்கிகளும் மக்களுக்கு குறைந்த வட்டியில் அவசர நேரத்தில் கடன் கொடுக்கலாம்.
கடன்கள் ஒத்திவைப்பு
3 மாதங்களுக்கு எல்லா கடன்களுக்கும் திருப்பி செலுத்தும் தவணைகளையும் ஒத்திவைத்து இருக்கிறார்கள். இதில் எல்லா கடன்களும் வரும். தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த 3 மாதங்களும், ஒவ்வொரு நபரும் கடன் தொகையை செலுத்துவதற்காக ஒப்புக்கொண்ட காலங்களின் இறுதியில் இந்த 3 மாதங்கள் நீட்டிக்கப்படும். இதற்கு வட்டிக்கு வட்டியும் வராது. 'கிரெடிட் கார்டு' கடனுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.
அதேபோல், உற்பத்திக்கு வாங்கும் செயல் மூலதனத்துக்கு வட்டியையும், மூலதனத்தையும் திருப்பி செலுத்தவில்லை என்றாலும் அது வராக்கடனாக அறிவிக்கப்படாது. வராக்கடனாக அறிவித்தால் 'சிபில் ரேட்' பாதிக்கப்படும். பின்னர் வங்கிகளில் கடன் வாங்க முடியாது. இப்போது அது வராது.
இந்த சலுகைகளை வைத்து சுகாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் சாதாரண மக்களுக்கும், துறைகளுக்கும் விரைவாக குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் திட்டங்களை ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு
மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த 'நீட்' நுழைவுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதன்படி, 2020-21-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி முதல் அதே மாதம் 31-ந்தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான 'ஹால்' டிக்கெட் நேற்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்த போது தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நேற்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதற்கு தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
ஆனால் தேசிய தேர்வு முகமை மே மாதம் நடை பெறுவதாக அறிவித்த தேர்வை ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் வினித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு தயாராவதில் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மே மாதம் 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.
3-ந்தேதிக்கு பதில் மே மாதம் இறுதி வாரத்தில் நீட் தேர்வு நடைபெறும். சூழ்நிலையை பொறுத்து புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். நீட் தேர்வுக்கு இன்று வெளியிடப்பட இருந்த ஹால் டிக்கெட் ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்னர் வெளியிடப்படும்.
தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கவலைப்படாமல், இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள தகவல் ஒவ்வொரு தேர்வரின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மாணவர்கள் ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் தொடர்ந்து கவனித்து வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 87000 28512, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


- கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
- கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்

இந்து தமிழ்: "தவறான தகவல் வெளியிட்டால் நடவடிக்கை"

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை இருப்பதாகத் தவறான தகவல் வெளியிட்டாலோ, தவறான எச்சரிக்கை விடுத்தாலோ அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக 144 தடை உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதிவரை நீடிக்கப்படுவதாக அறிவித்தார். அதன் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தமிழக முதல்வர், சமூக விலகல் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்துதலில் முழு கவனம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில், மாவட்ட ஆட்சியர்கள், 375 துணை ஆட்சியர்கள், 1,131 வட்டாட்சியர்கள், 1,133 துணை வட்டாட்சியர்கள், 1,150 வருவாய் ஆய்வாளர்கள், 10,104 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் 15,162 பேர் உட்பட ஒட்டு மொத்தமாக 29,000-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர், பேரிடர் தொடர்பாகச் செயல்படும் அனைத்து துறையினர், சுகாதாரத் துறையினருடன் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் முக்கியமான பணி என்பது, தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்கள் மூலம் வெளிநாடுகளிலிருந்து வந்த 18,912 பேரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தினோம். தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதல்வர் அளித்த உத்தரவின்படி, குடியுரிமை துறையின் மூலம், நாடு முழுவதும் எவ்வளவு பேர் மார்ச் 1-ம் தேதி வந்துள்ளார்கள் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்து வெளிநாடுகளில் இருந்து வந்து வேறு மாநிலத்தில் இறங்கி, ரயில், பேருந்து மூலம் தமிழகம் வந்தவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களின் முகவரியைக் கண்டறிந்து 96,663 பேரது வீடுகளுக்கு, சுகாதாரம், வருவாய், காவல்துறை, உள்ளாட்சித் துறையினர் சென்று வீடுகளில் தனிமைப்படுத்தப் படுவதற்கான அறிவிப்பை ஒட்டி வருகின்றனர். இப்பணிகள் விரைவில் முடிவடையும்.
மேலும், இந்த அறிவிப்பைக் கேட்டதும் தானாக முன்வந்து அவர்களே தங்கள் விவரங்களை 104, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். இது மட்டுமின்றி, மற்ற மாநிலங்களின் எல்லை சீல் செய்யப்பட்டிருந்த போதிலும், ஏற்கெனவே வந்தவர் கள் இருந்தால் அவர்களுக்குத் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கும்போது, அதை மீறுபவர்கள் மீது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தட்டுப்பாடின்றி கிடைக்க, நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து வருகின்றனர். முதல்வர் 9 குழுக்களை அமைத்து அக்குழுக்களும் கண்காணித்து வருகின்றன. சமூக விலகல் மூலம் நம்மைத் தனிமைப்படுத்துவது அவசியம். அதை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறான சிகிச்சை, தவறான எச்சரிக்கை விடுத்தல், அதிகாரி களை பணிசெய்ய விடாமல் தடுப்பது, நிறுவனங்கள் போதிய நடவடிக்கை எடுக்காதது போன்வற் றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப் படும். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரக்கூடாது. குடியிருப் போர் நலச் சங்கங்களும் இதை அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நாள்களில் (மாா்ச் 25 முதல் ஏப்.14 வரை )மின்கட்டணம் செலுத்துவதற்கான இறுதி தேதி கொண்ட மின்நுகா்வோா், ஏப்.14-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோவைட்-19 தொற்று பரவுதல் காரணமாக, தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்களின் (எல்டி மற்றும் எல்டிசிடி) மின் இணைப்புகளுக்கு இந்த ஆண்டு மாா்ச் அல்லது ஏப்ரல் மாத பட்டியலுக்கு, மாா்ச் 22 முதல் ஏப்ரல் மாதம் 14- ஆம் தேதி வரை மின் கணக்கீடு செய்ய முடியாததால் முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மாா்ச் அல்லது ஏப்ரல் மாத கணக்கீடாக எடுத்துக் கொண்டு நுகா்வோா்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
கால நீட்டிப்பு: தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்களின் மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இருக்குமாயின், அதற்கான தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக்கான கட்டணமின்றி ஏப்.14-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே பயனீட்டாளா்களுக்கு வழங்கியுள்ள இணையதளம், வலைதள வங்கியியல், செல்லிடப்பேசி வங்கி, பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலான வழிகள் மூலம் பணம் செலுத்தலாம். மின் கட்டணம் செலுத்த மின்அலுவலகங்களுக்கு வருவதைத் தவிா்த்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












