கொரோனா வைரஸ்: கிரேட்டா துன்பெர்க்குக்கு கொரோனா தொற்று பாதிப்பா? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
பருவநிலை மாற்றும் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கிரேட்டா துன்பெர்க் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தற்போது தான் குணமடைந்துவிட்டதாகவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
17 வயதாகும் கிரேட்டா துன்பெர்க் அண்மையில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு தான் பயணம் மேற்கொண்டதாக கூறுகிறார்.
பயணம் முடிந்து தனது சொந்த நாட்டிற்கு வந்த பிறகு மிகவும் சோர்வு அடைந்ததாகவும், உடலில் நடுக்கம் இருந்ததாகவும் கூறுகிறார்.
தொண்டையில் வறட்டு தன்மை மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் இரண்டு வாரங்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதால், தானும் தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறுகிறார். ஆனால், இதுவரை கோவிட் 19 வைரஸ் தொடர்பாக எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை என்றும், அறிகுறிகளை வைத்து பார்க்கும்போது நிச்சயம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவே தெரிகிறது என்றும் கிரேட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மக்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி முழுமையான உரை

பட மூலாதாரம், DD
செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்தியாவைக் காப்பாற்ற ஒவ்வொரு குடிமகனைக் காப்பாற்ற உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இன்று 12 மணி முதல் வீட்டிலிருந்து வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும், மாவட்டமும், கிராமும் முழுவதுமாக அடைக்கப்படுகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை இரவு8 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார் நரேந்திர மோதி.
அப்போது அவர், "கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அந்த தொற்று சங்கிலியை நாம் அழிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தனித்திருத்தல் என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.ஆனால் அது சரியல்ல. தனித்திருத்தல் என்பது ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும். அது பிரதமருக்கும் பொருந்தும்." என்றார்.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி முழுமையான உரை

கொரோனா வைரஸ்: அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைக்க திரண்ட கலைஞர்கள்

பட மூலாதாரம், Twitter
கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளைக் கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் நிறுத்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில், 'பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறாது என்றாலும் ஓரளவாவது அவர்களை சமாளிக்க சொல்லலாம். காலவரையறை இல்லாமல் எனக் கூறும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது. எத்தனை நாட்கள் கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அவர்களால் எப்படி திரும்ப கொடுக்க இயலும். பெரிய நடிகர்கள் யாராவது முன்வந்து அவர்களுக்கு பணரீதியாக உதவிகள் செய்யாவிட்டாலும், அரிசி மூட்டை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்காவாவது உதவி செய்யலாம்.' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, உறுப்பினர்களுக்கு உதவக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பெப்ஸி தொழிலாளர்களுக்கு பல்வேறு நடிகர்கள் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைத்த கலைஞர்கள்

கொரோனா வைரஸ்: "இனம், மதம், நிறம் பார்த்து கொரோனா தாக்காது. மோதல்களை நிறுத்துங்கள்" - ஐ.நாவின் வலியுறுத்தல்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றால் சர்வதேச அளவில் 383, 944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,767 பேர் பலியாகி உள்ளனர்.
சீனா, இத்தாலிக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் அதிக பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அங்கு மட்டும் 46,450 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச அளவில் நடக்கும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோன்யு குட்டாரெஷ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ்: சீனாவை காட்டிலும் இத்தாலியில் இரட்டிப்பான உயிரிழப்பு - மற்ற நாடுகளில் என்ன நிலை?

பட மூலாதாரம், HAGEN HOPKINS/GETTY IMAGES
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78, 601-ஆக உயந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
அதேவேளையில் இதுவரை 16,505 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் 6,077 பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்று நோயின் தொடக்கமான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 1 மடங்கு அதிகம்.
விரிவாக படிக்க:கொரோனா வைரஸ்: சீனாவை காட்டிலும் இத்தாலியில் இரட்டிப்பான உயிரிழப்பு - மற்ற நாடுகளில் என்ன நிலை?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












