கொரோனா வைரஸ்: முடக்கம் என்றால் என்ன? அது இந்தியாவில் எப்படி செயல்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமர் மோதி அறிவித்ததின்படி, மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை மக்கள் சிறப்பாக கடைபிடித்தனர் என பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய மக்கள் தாங்கள் கொரோனாவை எதிர்க்க தயாராக இருக்கிறார்கள் என காட்டிவிட்டனர் . ஆனால் இது தொடக்கம் மட்டுமே," என பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்று கிழமை மாலை இந்தியாவின் 75 மாவட்டங்களை மார்ச் 31 வரை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த 75 மாவட்டங்களும் கொரோனா வைரஸ் தொற்று பரவிய மாவட்டங்கள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அன்று மாலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது.
மாறி வரும் சூழலுக்கேற்ப அரசு நடவடிக்கை எடுக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய அரசு ஆகியவை தெரிவித்தன.
பரவி வரும் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குனர் பலராம் பார்கவ் கூறுகையில் , நாங்கள் தேவையில்லாமல் பதற்றத்தை உண்டாக்கவில்லை. ஆனால் இந்த பரவும் விதத்தை குறைக்க வேண்டும். அதற்கு தனிமை படுத்துவதே சிறந்த வழி என்றார்.
முடக்கம் என்பது தேவையான ஒன்று என்ற கூறிய பார்கவ் , அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு 26 ஆயிரம் பரிசோதனைகள் நடக்கின்றன. ஆனால் இந்தியாவில் வராத்திற்கு 5 ஆயிரம் பரிசோதனைகளே நடக்கின்றன. இதுவரை 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வாரம் 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்ய தயாராக இருக்கிறோம்.


ஆனால் இதனால் இந்த எண்ணிக்கை குறையாது. சமுகத்திலிருந்து தனிமைப்பட்டு இருப்பதே பரவாமல் தடுக்கும் ஒரே வழி என்கிறார் அவர்.
ஞாயிறன்று 75 மாவட்டங்களை முடக்க உத்தரவு வந்தது. அவையனைத்தும் வைரஸ் பரவிய மாவட்டங்கள்.
முடக்கம் என்றால் என்ன?
முடக்கம் என்பது அவசர நிலையின்போது அமல்படுத்தப்படும். முடக்கத்தின்போது கடைகள், தனியார் அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தி வைக்கப்படும். அதாவது மக்கள் வீட்டை விட்டு வெளியேற ஏதேனும் முக்கிய காரணம் இருக்க வேண்டும். மத்திய அரசு இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் , முடக்கத்தின் போது மக்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால் வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவருவது என்ற நோக்கைத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வழிமுறையையே உலகம் தற்போது பின்பற்றி வருகிறது என்றது.
ராஜஸ்தான் , மஹாராஷ்டிரா , கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சனிக்கிழமை அன்றே முடக்கம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் வேறு சில மாநிலங்களில் திங்கள் காலை 6 மணியிலிருந்து முடக்கம் என உத்தரவு வந்துள்ளது.
முடக்கத்தின்போது மூடி இருப்பவை எவை?
பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கும். ஆனால் சில மாநிலங்களில் 25 சதவீத பேருந்துகள் ஓடும் என அறிவிக்கபட்டுள்ளது.
அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், அலுவலகங்கள் ஆகியவை மூடப்படும்.
மாநில எல்லைகள் மூடப்படும். வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் ரயில் சேவைகள் ஆகியவை நிறுத்தப்படும். கட்டுமானப் பணி நிறுத்தப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படும். மக்கள் வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவர்.
இவையனைத்தும் மக்களை ஒருவரிடமிருந்து ஒருவரை தூரமாக வைக்கவே ஆகும்.
முடக்கத்தின்போது திறந்து இருப்பவை எவை ?
இந்திய அரசின் கூற்றுப்படி முடக்கத்தின்போது காவல் நிலையம் , மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், சிறைச்சாலை, முக்கிய அரசு அலுவலகங்கள், அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் ஆகியவை திறந்திருக்கும்.

தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆடம்பர பொருட்கள் கிடைக்காது.
அதாவது மின்சாரம், நீர், இணையம், வங்கி மற்றும் ஏடிஎம்கள் ஆகியவை இருக்கும். அஞ்சல் அலுவலகங்கள் இருக்கும். ஊடங்கங்கள் வேலை செய்ய அனுமதி உண்டு.
பெட்ரோல் பங்குகள், மருந்து கடைகள் , பால் விற்பனை ஆகியவை இருக்கும். உணவு பொருட்கள் கிடைக்கும். சில மாநிலங்களில் அரசு தேவையான அன்றாட பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
தேவையென்றால் சொந்த வாகனங்களை பயன்படுத்தலாம். அவசர தேவையின்போது ஆம்புலன்ஸ்கள் செயல்படும். முடக்கத்தின்போது இதை மீறுபவர்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.
உலக நாடுகளில் முடக்கம் உள்ளதா ?
சீனா, அமெரிக்கா, டென்மார்க், பிரிட்டன் , அயர்லாந்து, இத்தாலி,பிரான்ஸ், நியூசிலாந்து , போலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முடக்கப்பட்டன.
சீனாவில் முதலில் கொரோனாத் தொற்று பாதித்ததால் அங்கேதான் முடக்கம் முதலில் அறிவிக்கப்பட்டது.
பிறகு இத்தாலியில் தொற்று அதிகம் பரவியதால் அங்கு முடக்கம் அறிவிக்கப்பட்டது . ஆனால் மக்கள் அப்போது அதை முக்கியமாக கருதவில்லை .பிறகு சனிக்கிழமையன்று ராணுவத்தால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பிறகு ஸ்பெயின் மற்றும் பிரான்சில் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












