"சிஏஏ தொடர்பாக தமிழக தலைமை செயலாளருடன் நடந்த சந்திப்பு ஏமாற்றமே" - இஸ்லாமிய அமைப்புகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் இஸ்லாமிய அமைப்புகளோடு, தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் நடத்திய சந்திப்பு, ஏமாற்றத்தை அளித்ததாக ஒருதரப்பினரும், எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என மற்றொரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டு மாதங்களாக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
கடந்த மாதத்தில், இஸ்லாமிய அமைப்புகளுடன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். இன்று (மார்ச் 14) முதல்முறையாக, தலைமைச் செயலாளர் சண்முகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு, போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புகள், இஸ்லாமிய அரசியல் அமைப்புகள் போன்றவற்றைச் சேர்ந்த 49 பேர் அழைக்கப்பட்டனர்.

தலைமை செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை இரண்டு பிரிவுகளாக இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்தனர். தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் பேசும்போது, பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்தது என்றார்.
''நாங்கள் மார்ச்18ஆம் தேதி மக்களைத்திரட்டி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என எங்கள் கோரிக்கையை தெரிவித்தோம். ஆனால் அதற்கான எந்த முடிவும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படவில்லை,'' என்றார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட இரண்டாவது குழுவினர் பேசும்போது, தலைமை செயலாளருடன் முதல்முறையாக சந்திப்பு நடைபெற்றது மகிழ்ச்சி என்றபோதும் அந்த சந்திப்பு தங்களது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி சொல்வதற்கான வாய்ப்பாக இருந்தது என்று தெரிவித்தனர்.
''இந்த சந்திப்பு ஏமாற்றத்தை தந்தது அல்லது நம்பிக்கை அளித்தது என உடனடியாக சொல்லமுடியாது. எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால், இந்த சந்திப்பு வெற்றியை தந்தது என சொல்லுவோம். தற்போது எங்கள் கோரிக்கையை முதல்வருக்கு எடுத்துசெல்வதாக தலைமை செயலாளர் தெரிவித்தார். எங்கள் போராட்டங்கள் தொடரும்,'' என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












