தஞ்சை பெரிய கோயில்: உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் - வலியுறுத்தும் முன்னாள் அதிகாரி

தஞ்சை பெரிய கோயில்: உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்

பட மூலாதாரம், M Niyas Ahmed

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

News image

இந்து தமிழ் திசை: தஞ்சை பெரிய கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்

உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரிய கோயிலை சேர்க்க வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், குடமுழுக்கு விழா உயர்மட்டக் குழு உறுப்பினருமான டி.கங்கப்பா தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று கோயிலுக்கு வந்த டி.கங்கப்பா(81), வாராகி அம்மன், ராஜராஜ சோழனால் அமைக்கப் பட்ட நந்தி சிலை, கருவூர்த் தேவர் சந்நிதிக்குச் சென்று சென்று வழிபட்டார். தொடர்ந்து, கோயில் அலுவலகத்துக்குச் சென்று விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

நான் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக கடந்த 1979-ம் ஆண்டு பொறுப்பேற்று ஓராண்டு காலம்தான் பணியாற்றினேன். 12.7.1979 அன்று என்னுடைய பிறந்தநாள். அன்று முதன்முறையாக எனது குடும்பத்தினருடன் இந்தக் கோயிலுக்கு வந்தேன். அப்போது விளக்குகள் இல்லை, பூஜை செய்ய போதிய அர்ச்சகர்கள் இல்லை. கோயிலைப் பார்த்து வியந்து போனேன். பின்னர் இக் கோயிலுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தேன்.

இதையடுத்து, 1980-ம் ஆண்டு மார்ச் மாதம் கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவை சிறப்பாக நடத்தினேன். இதைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெரிய கோயில் குட முழுக்கு விழா சிறப்பாக நடத்தப் பட்டது. அந்த விழாவில் எந்த குறைகளும் கிடையாது. அந்த அளவுக்குத் திட்டமிட்டு பணியாற்றினேன். அந்த விழாவின்போது பல லட்சம் பேர் கோயிலுக்கு வந்து சென்றனர்.

மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்திலும் சரி, மராட்டியர்கள் காலத்திலும் சரி, நான் ஆட்சியராக இருந்தபோதும் ஏப்ரல் மாதத்தில்தான் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

1980-ம் ஆண்டு குடமுழுக்கு விழாவின்போது 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரத்தில் ஏறியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாகும். இது நான் கலந்துகொள்ளும் இந்தக் கோயிலின் 3-வது குடமுழுக்கு விழாவாகும்.

இந்தக் குடமுழுக்கு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ஆனால், தொல்லியல் துறை கொஞ்சம் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, விழாவுக்கு இன்னும் மெருகூட்டியிருக்கலாம்.

குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்கள் அதிக அளவு வரும் நிலையில் வாராகி அம்மன் சந்நிதியில் அர்ச்சகர்கள் யாரும் இல்லை. அதேபோல, மாமன்னன் ராஜராஜ சோழனால் நிறுவப்பட்ட ஒரே கல்லால் ஆன நந்தி சிலையை எவ்வித பராமரிப்பும் இல்லாமல் வைத்திருப்பது சற்று வேதனையாக உள்ளது. அந்தச் சிலையைக் கொஞ்சம் புதுப்பித்திருக்கலாம்.

இக்கோயில், தாஜ்மகாலைவிட அற்புதமானது, தனிச் சிறப்புப் பெற்றது. எனவே, இக்கோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெற ஆவண செய்ய வேண்டும். நான் பணியாற்றிய போது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தது. அப்போது, திருவாரூருக்குச் சென்றேன். அங்குள்ள மனுநீதி சோழனின் சிலையையும், அவரது நிர்வாகத் திறனையும் கேள்விப்பட்டு அதிசயித்துப் போனேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஆண் குழந்தை ஆசையால் பறிபோன நான்கு உயிர்கள்

ஆண் குழந்தை பெற்றுத்தரவில்லை என்று கணவனின் பெற்றோர் கொடுமைப்படுத்தியதால் ராணிப்பேட்டை அருகே பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

நிர்மலா எனும் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவரது கணவர் வெங்கடேசனும், இரண்டு மற்றும் ஒரு வயதாகும் தனது பெண் குழந்தைகள் சஞ்சனா ஸ்ரீ மற்றும் ரித்திகா ஸ்ரீ ஆகியோருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

நிர்மலா ஆண் குழந்தை பெற்றுத் தரவில்லை என்பதால், வெங்கடேசனுக்கு வேறு திருமணம் செய்து வைக்கப்போவதாக அவரது பெற்றோர் தொடர்ந்து கூறி வந்ததால் நிர்மலா தற்கொலை செய்து கொண்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: "அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் சென்னையில் தொடரும்"

மத்திய அமைச்சா் பியூஷ்கோயல்

பட மூலாதாரம், Getty Images

அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. சென்னையிலேயே அது தொடரும் என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவா்) மதிமுக உறுப்பினா் வைகோ, அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறி அப்பிரச்சனையை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தாா்.

இது குறித்து அவா் பேசுகையில், 'அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் 2003-இல் சென்னையில் நிறுவப்பட்டது. மறைந்த மத்திய தொழில்த் துறை அமைச்சா் முரசொலிமாறன் முயற்சியால் இந்த மேல்முறையீட்டு வாரியம் சென்னையில் அமைக்கப்பட்டது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த வாரியத்தின் கிளைகள் / சுற்று அமா்வுகள் மும்பை, தில்லி, கொல்கத்தா, ஆமதாபாத் போன்ற நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும் அட்டாா்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபால் இந்த தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்ற மத்திய அரசு ஏற்பாடு செய்து கொண்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறாா். தற்போது இந்த மேல்முறையீட்டு வாரியத்தில் 2800 வணிக உரிமைக் குறிகள் தொடா்பான வழக்குகளும் 600 காப்புரிமை வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதற்கு காரணம் இது அமைந்திருக்கும் இடத்தினால் ஏற்பட்ட தேக்கமில்லை. வாரியத்தின் தலைவா், தொழில்நுட்ப உறுப்பினா் நியமனங்களுக்கான தோ்வில் தாமதம் செய்யப்பட்டது தான் காரணம். உச்ச நீதி மன்றத்தின் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று கோரி வரும் நிலையில் இதை மாற்றக் கூடாது'' என்று கூறி இந்த விவகாரத்தை வைகோ எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த மத்திய வா்த்தகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ''இந்த மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையிலிருந்து மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. மாறாக இதன் கிளைகளை நாடு முழுக்க அதிகரிக்கும் திட்டம் உள்ளது. மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் புதிய கிளைகள் உருவாக்கப்பட இருக்கின்றன'' என்று பதிலளியத்தாா். இதே விவகாரத்தை மக்களவையிலும் திமுகவைச் சோ்ந்த டி. ஆா். பாலு எழுப்பியிருந்தாா்.

Presentational grey line
Presentational grey line

தினத்தந்தி: அபராத தொகையை செலுத்தாத சசிகலா

அபராத தொகையை செலுத்தாத சசிகலா

பட மூலாதாரம், Getty Images

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் 3 பேரும் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் அவர்கள் இன்னும் அபராத தொகையை செலுத்தவில்லை.

தண்டனை காலம் முடியும் முன்பு அபராத தொகையை செலுத்தாவிட்டால் 3 பேரும் கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட பெரிய வழக்குகளில் அபராதம் விதிக்கப்படுபவர்கள் தண்டனையின் கடைசி வருடத்தில்தான் அபராத தொகையை செலுத்துவார்கள். சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதில் 2 சிக்கல்கள் உள்ளன. அபராத தொகை அவர் சம்பாதித்த பணத்தில் இருந்து தான் செலுத்த வேண்டும். அவர் சிறையில் வேலைபார்த்து சம்பளம் வாங்கி இருந்தால் அந்த பணத்தை கழித்து மீதி பணத்தை செலுத்தினால் போதும்.

அவர் செலுத்தும் அபராத தொகைக்கு வருமான வரித்துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அபராத தொகையை சசிகலா காசோலை அல்லது வரைவோலை மூலமாக செலுத்த வேண்டும். சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டதாக அவர் மீது ஊழல் தடுப்பு பிரிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றவாளி என தீர்ப்பு வந்தால், அவருக்கு அந்த வழக்கில் கூடுதல் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி உள்ளதால் சசிகலா நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து முன்கூட்டியே வெளிவர வாய்ப்பு இல்லை.

இவ்வாறு சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: