குளத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தலித் தம்பதி கொலை

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் காதல் திருமணம் செய்த கொண்ட தலித் தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சோலைராஜ். இவருக்கு வயது 24. குளத்தூர் அருகே பல்லாகுளத்தை சேர்ந்தவர் ஜோதி. இவரது வயது 21. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் பணியாற்றிய போது காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அதில் இருவேறு உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு ஜோதியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமணத்துக்கு பின்னர் சோலை ராஜ் தனது மனைவியுடன் தந்தை பெரியார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். ஜோதி தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். நேற்று இரவு மின்தடை ஏற்பட்டதால் கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வெளியே தூங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை சோலைராஜின் தாய் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, இருவரும் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டார். உடனே குளத்தூர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குளத்தூர் காவல் ஆய்வாளர், உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துகுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நடந்தது ஆணவக்கொலை என்றும் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இறந்தவர்களின் உடலை வாங்க மறுக்கும் சோலை ராஜனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யபடுவார்கள் என உத்தரவாதம் அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தக் கொலை குறித்து சோலை ராஜின் அக்கா பேச்சியம்மாள் பிபிசி தமிழிடம் கூறுகையில், ஜோதி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவர்களின் பெற்றோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஜோதி தங்கியிருந்த வீட்டிற்க்கு வந்து பிரச்சனை செய்தனர். பின்னர் ஜோதியிடம் இருந்து அவர் பெற்றோர் வாங்கி கொடுத்த நகையை பெற்றுக் கொண்டு கொலை மிரட்டல் விட்டு சென்றாதாக கூறினார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தூத்துகுடி தீண்டாமை ஒழிப்பு முண்ணனி தலைவர் சீனிவாசன், நாளுக்கு நாள் சமத்துவம், பொதுவுடைமை குறித்து குரல்கள் எழுந்து வந்தாலும் மறு புறத்தில் சாதிய ரீதியிலான கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இதுபோன்ற கொடூரங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












