இந்தியாவிலேயே அதிக வயதான 'பாட்டி யானை' மரணம்

பட மூலாதாரம், STR/AFP/GETTY
இந்தியாவில் வளர்ப்பு யானைகளிலேயே மிகவும் வயது முதிர்ந்ததாக கருதப்படும் தாக்ஷாயணி எனும் பெண் யானை அதன் 88-ம் வயதில் இறந்துள்ளது.
செல்லமாக 'கஜ முதாசி' அல்லது 'பாட்டி யானை' என்று அழைக்கப்பட்ட தாக்ஷயணி, இந்தியாவின் தெற்கிலுள்ள கேரள மாநிலத்தின் செங்கலூர் மகாதேவன் கோயில் சடங்குகளிலும், ஊர்வலங்களிலும் பங்கேற்றுள்ளது.
ஆனால், திடீரென உணவு உட்கொள்வதை நிறுத்திய தாக்ஷாயணி செவ்வாய்கிழமை இறந்து விட்டதாக அதன் பாகன் தெரிவித்துள்ளார்.
இந்த யானை நடப்பதற்கு கஷ்டப்பட தொடங்கியதும், சமீபத்திய ஆண்டுகளில் அன்னாசி பழம் மற்றும் கேரட்களை உணவாக வழங்கத் தொடங்கினர்.
பல ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் இந்த யானை பங்கேற்கவில்லை.
இந்த யானை வாழ்ந்து வந்த கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, இந்த யானைக்கு 88 வயது என்ற மதிப்பிடப்படுவதால் வளர்ப்பு யானையாக அதிக வயதான யானை இதுவாகும் என்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், STR/AFP/GETTY
இருப்பினும், வளர்ப்பு யானையில் அதிக வயதாகி இறந்ததாக லின் வாங் என்ற யானைதான் இப்போது வரை உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
2003ம் ஆண்டு அதன் 86வது வயதில் தைவான் உயிரியல் பூங்காவில் இறந்த இந்த ஆசிய யானை, இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படையினருக்கு சேவை செய்துள்ளது.
2017ம் ஆண்டு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இறந்த 'இந்திரா' எனப்படும் இன்னொரு யானை 85 முதல் 90 வயதுக்குள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் 2,400-க்கும் அதிகமான யானைகள் வளர்ப்பு யானைகளாக உள்ளன.
தாக்ஷாணி மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


நடைமுறை சிக்கல்களால் இந்த யானையை அதன்போக்கில் சுதந்திரமாக உலவவிட எங்களால் முடியவில்லை. ஆனால், அது புழங்குவதற்கு போதிய இடத்தை உறுதி செய்தோம் என்று அவர் கூறினார்.
ஆனால், பல யானைகள் மிகவும் மோசமான நிலைமைகளால் துன்புறுவதாக வனவிலங்கு பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய கோயில்களில் குறிப்பாக கேரள மாநிலத்தில், வாழும் சுமார் 800 யானைகள், பொதுவாக பரிதாபமான நிலைமைகளில் வாழ்வதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'ஆக்ஷன் ஃபார் எலிபென்ட்ஸ்' என்ற குழு தெரிவிக்கிறது.
யானை - மனித மோதலைத் தடுக்க பள்ளி மாணவிகளின் தீர்வு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













