நரேந்திர மோதியின் கடைசி நாடாளுமன்ற உரை: “நான் ஏழைகளுக்காகவே வாழ்கிறேன்”

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
பதினாறாவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இன்று, வியாழக்கிழமை, மாலை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோதிக்கு முன் உரையாற்றிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, விவசாயிகளுக்காக இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை எதையும் செய்யவில்லை என்றும், அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து தயாரிக்கப்பட்டது என்றும் விமர்சித்தார்.
தமது அரசு ஏழைகள் பிரச்சனைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு என்றும், நேர்மை மற்றும் வளர்ச்சிக்காக அறியப்பட்ட அரசு என்றும் மோதி அப்போது குறிப்பிட்டார்.
இந்திய மக்களுக்குப் பதில் சொல்ல தாங்கள் கடமைப்பட்டிருப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியதாகவும் நரேந்திர மோதி கூறினார்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இயல்பானதுதான் என்று குறிப்பிட்ட மோதி, ஆரோக்கியமான போட்டியை அவர்களிடம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது சாதனைகளுக்காக அறியப்பட்டது என்று கூறிய மோதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இளம் தலைமுறை தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.


தமது உரையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த மோதி BC என்றால் Before Congress என்றும் AD என்றால் After Dynasty என்றும் எள்ளலாகக் குறிப்பிட்டார்.
"ஜனநாயகத்தில் விமர்சனம் மிகவும் முக்கியமானது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தில் உண்மை இல்லை," என மோதி கூறினார்.

தமது உரையில் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக விமர்சித்த மோதி, தங்கள் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழி சுமத்தியது என்று கூறினார்.
அரசமைப்பின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளைப் பாதுகாப்பது பற்றி காங்கிரஸ் பேசுகிறது. ஆனால் என்.டி.ஆர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று காங்கிரஸ் கட்சியை நோக்கி கேள்வி எழுப்பி, அவர்கள் ஆட்சி இந்திரா காந்தியின் ஆட்சியில் கலைக்கப்பட்டதைக் குறிப்பிட்டார்.
மாநில அரசுகளை கலைக்க வழிவகை செய்யும் அரசியல்சாசன சட்டப்பிரிவு 356 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குறைந்தது 100 முறை பயன்படுத்தப்பட்டது என்று குற்றம்சாட்டிய மோதி, தம்மைத் தாக்குவதற்காக இந்தியாவுக்கு காங்கிரஸ் அவப்பெயரை உண்டாக்குவதாகக் கூறினார்.
கடந்த 55 மாதங்களில் 13 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளதாகவும், கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இரண்டரை கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கியதாகவும் காங்கிரஸ் கட்சி செய்யாமல்விட்டவற்றை செய்ததாகவும் மோதி கூறினார்.
"நான் ஏழைகளுக்காகவே வாழ்கிறேன். அவர்களுக்காகவே நான் இங்கு உள்ளேன்," என்று மோதி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவானபோது, தங்களை எதிர்க்கட்சியாகக் கூட காண முடியாதவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொண்டனர். ஆனால், தற்போது இந்தியா உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக உருவாகியுள்ளது அவர்களுக்கு வருத்தமளிக்கிறது," என்றார் மோதி.
கொள்ளை அடிப்பவர்களை கொள்ளையடிக்க காங்கிரஸ் கட்சி அனுமதித்ததாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடுமையான சட்டங்களை இயற்றி, அவர்களை திரும்பக் கொண்டுவந்ததாக குறிப்பிட்டார் மோதி.
"ஒரு பெரும்பான்மை அரசு என்ன செய்ய முடியும் என்பதை மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்த்துள்ளனர். சமீபத்தில் கொல்கத்தாவில் கூடியவர்களைப் போன்ற கலப்படம் நிறைந்த கூட்டணிகளின் அரசுகளை மக்கள் விரும்பவில்லை," என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களில் எதிர்ப்புக்குரலுக்கு இடையே மோதி கூறினார்.

காங்கிரஸ் அரசிடம் இருந்து வாராக்கடன் பிரச்சனையை ஏற்றதாகக் கூறிய மோதி தமது ஆட்சியில் வாராக்கடன் பிரச்சனை அதிகரிக்கவில்லை என்றார்.
"முப்படைகளின் பலத்தைப் பெருக்க காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கையெழுத்தான அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும் ஓர் இடைத்தரகர் இருந்தார்," என்று மோதி குற்றம்சாட்டினார்.
பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு சுமார் மூன்று லட்சம் போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஊழலை எதிர்த்ததால் விமர்சனங்களை எதிர்கொண்டதாவும் மோதி தெரிவித்தார்.
'காங்கிரஸ் கட்சி இல்லாத பாரதம்'
'காங்கிரஸ் கட்சி இல்லாத பாரதம்' என்பது மகாத்மா காந்தியின் விருப்பம் என்றும், காந்தி சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைக் கலைக்க விரும்பினார் என்றும் மோதி தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
"காங்கிரஸ் கட்சியில் சேர்வது தற்கொலை செய்வதற்கு சமம் என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறினார், " என்றார் மோதி.
எல்லோரும் தங்கள் ராணுவ பலத்தை அதிகரிக்க விரும்பும்போது, காங்கிரஸ் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்புவது ஏன் என்றும் எந்த நிறுவனத்துக்காக அதைச் செய்ய விரும்புகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய மோதி, இந்தியாவுக்கு வலிமையான விமானப்படை இருப்பதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி ஏற்றம் இருந்ததாகவும், தற்போது 99% பொருட்களுக்கு 18%க்கும் குறைவான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) உள்ளதாகவும் மோதி கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலை தமது ஆட்சிக்காலத்தில் குறைந்துள்ளது என்றும், அமைப்பு சாரா துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் மோதி தெரிவித்தார்.
விவசாயிகளின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை
விவசாயிகளின் மேம்பாடு தங்கள் முன்னுரிமை என்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட வேளாண் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக தணிக்கைத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாக மோதி பேசினார்.
ஜவஹர்லால் நேரு காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட நீர்பாசனத் திட்டங்களைத் தாம் தொடங்கி வைப்பதாகவும் மோதி கூறினார்.
வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசிய மோதி, "இந்தியா, எதிரெதிர் தரப்பில் உள்ள இஸ்ரேல் - பாலத்தீனம் ஆகிய இரு நாடுகளுடனும் நட்புடன் இருக்கும், இரான் - சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளுடனும் நட்புடன் இருக்கும். நமது வெளியுறவுக் கொள்கையால் உலக அரங்கில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது," என்றார்.
பிரதமரின் உரைக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












