சின்னத்தம்பியை ரசித்த மக்களே இப்போது எதிர்ப்பதேன்?

பட மூலாதாரம், Getty Images
உடுமலைப்பேட்டை ,அமராவதி கரும்பு ஆலைக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தின் அருகே தங்கி இருந்த சின்னத்தம்பி அங்கிருந்து நகர்ந்து செங்கிளிப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் வந்துள்ளது.
சின்னத்தம்பி ஊருக்குள் வர ஆரம்பித்ததால், அதனை அங்கிருந்து இட மாற்றம் செய்ய வேண்டுமென, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நான்கு நாட்களாக அந்தப் பகுதி மக்கள் சின்னத்தம்பியை ஆர்வத்துடன் பார்ப்பது, புகைப்படம் எடுப்பது என இருந்தனர். ஆனால், சின்னத்தம்பியை அன்புடன் பார்த்து ரசித்தது மாறி, யானைக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினரிடம் விசாரித்த பொழுது, ''இரண்டு மூன்று வருடங்களாக தண்ணீர் இல்லாமல் ,இந்த வருடம்தான் விவசாயம் நன்றாக இருக்கிறது. எனவே, மிகச் சிறிய அளவு பயிர்சேதம் ஏற்பட்டாலும் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர், அந்தப் பகுதி மக்களின் ஆதரவு குறைய ஆரம்பித்திருக்கிறது. மேலும், யானை தங்கி உள்ள பகுதியில் அதிகமாக மின்னிணைப்புக் கம்பிகள் உள்ளன,
சின்னத்தம்பி தும்பிக்கையை தூக்கி நடக்கும் பழக்கம் உள்ள யானை, எனவே தெரியாமல் மின் இணைப்பில் பட்டால் யானைக்கு ஆபத்து , எனவே யானையையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சின்னத்தம்பி இப்பொழுது அதிக அழுத்தத்தில் இருக்கின்றது, அது காட்டில் இல்லை, தொடர்ந்து மனிதர்கள் சூழ நின்று கொண்டிருப்பதால் அந்த யானையால் இயல்பான மனநிலையில் இருக்க முடியாது. எனவே மக்களுக்கும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல், சின்னத்தம்பிக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது'' என்கின்றனர்.
அமராவதி கரும்பு ஆலையைச் சேர்ந்தவர்கள், மீண்டும் கரும்புத் தோட்டத்தினுள் வந்துவிடக்கூடாது என வேலியை அடைத்துவிட்டனர், யானை தங்கி இருந்த குட்டையையும் மண் இட்டு சமன் செய்து விட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
சின்னத்தம்பியினை தடாகத்தில் இருந்து இடமாற்றம் செய்ய மனு கொடுத்து வெற்றி அடைந்தவர்கள் ஒரு புறம். சின்னத்தம்பியை மீண்டும் தடாகம் பக்கத்திலே விட வேண்டும் என்று ஒரு சாரார் கோரிக்கை வைத்துள்ளனர்.
வழக்கு இருப்பதால் எந்த முடிவையையும் எடுக்க இயலாது என்கின்றனர் வனத்துறையினர்.சின்னத்தம்பியின் பண்புகள் மாறாமல் மீண்டும் அதை வனத்திற்குள் விரட்டுவதால் நிரந்தர தீர்வு கிடைக்காது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
விநாயகன் யானையை விட்ட முதுமலைப் பகுதியிலேயே இந்த யானையையும் விடுங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர் சிலர்.கரும்புத் தோட்டத்தில் தினந்தோறும் நடக்க வேண்டிய பணிகள் நடைபெறவில்லை ,உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபடும் ஆலைத் தொழிலாளர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












