நரேந்திர மோதி தமிழகத்தை குறிவைப்பது ஏன்?

நரேந்திர மோதி தமிழகத்தை குறிவைப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆர்.மணி
    • பதவி, மூத்த பத்திரிகையாளர்

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )

அது ஒரு வியாழக்கிழமை மதிய நேரம் … மார்ச், 20, 2014. மக்களவை தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முந்தைய காலகட்டம். சென்னையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பாஜக மற்றும் அதனது தோழமை கட்சிகளின் கூட்டம். அன்று தான் பாஜக வின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் தமிழகத்தில் ஒரு மெகா கூட்டணி அமைந்து விட்டது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

காலை 11.30 மணிக்கு ராஜ்நாத் சிங் வருவார் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால் மதியம் 1.30 வரையில் அவர் வரவில்லை. திடீரென்று, பாஜக மாநில பொதுச் செயலாளர்களில் ஒருவரான, வானதி சீனிவாசன், ராகுகாலம் வந்து விட்டதால் கூட்டம் மதியம் 3.30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும், ஆகவே செய்தியாளர்களும், கூடியிருந்த கட்சி தொண்டர்களும் மதிய உணவுக்கு சென்று விட்டு மதியம் 3 மணிக்கு மேல் திரும்பி வந்தால் போதும் என்றும் அறிவித்தார்.

கலைந்து சென்ற செய்தியாளர்களும் மதியம் 2.30 மணிக்கு மீண்டும் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு திரும்பி வந்தனர். அப்போது கண்ட காட்சி என்னுடைய பத்திரிகையுலக வாழ்க்கையில் மறக்க முடியாதது. ராஜ்நாத் சிங் அமர இருந்த மேடையில் பல இருக்கைகள் கூட்டணி கட்சித் தலைவர்களுக்காக போடப்பட்டிருந்தன.

அந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக, வைகோவின் மதிமுக, டாக்டர் ராமதாஸின் பாமக, ஈஸ்வரனின் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் (கேஎம்டிகே), பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக் கட்சி (ஐஜேகே) மற்றும் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன.

ராஜ்நாத் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங் அமரும் இருக்கைக்கு பக்கத்தில் அவரது இரு புறமும் யாரை அமர வைப்பது என்ற விவகாரம் மெள்ள, மெள்ள சூடு பிடித்துக் கொண்டிருந்தது. ஒவ்வோரு இருக்கையிலும் கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதி ஒட்டப்பட்டிருந்தன.

முதலில் சில இருக்கைகள் ராஜ்நாத் சிங் அமரும் இருக்கைக்கு அருகில் போடப் பட்டன. பின்னர் காதில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு மேடைக்கு வந்த வானதி சீனிவாசன், 'அந்த இருக்கையை இங்கே போடுங்கள், இந்த இருக்கையை அங்கே போடுங்கள்' என்று கூறிக் கொண்டிருந்தார். தொடர்ந்து இருக்கைகள் பல முறை இடம் மாற்றி, மாற்றி போடப்பட்டன.

ஒரு கட்டத்தில் இருக்கைகளில் இருந்த தலைவர்களின் பெயர்கள் இருந்த காகிதங்கள் கிழித்து எடுக்கப் பட்டன. கடைசியாக அனைத்து இருக்கைகளும் மேடையின் சுவற்றை ஒட்டிய மூலையில் திருப்பித் தள்ளி வைக்கப்பட்டன. ராஜ்நாத் சிங் 4.15 மணிக்கு மேடைக்கு வந்தார். அப்போதுதான் திருப்பி வைக்கப்பட்டிருந்த இருக்கைகள் மீண்டும் மேடையின் நடுவில் கொண்டு வந்து போடப்பட்டன. ராஜ்நாத் சிங்கின் இடப்புறம் பாமக வின் அன்புமணியும், வலப்புறம் விஜயகாந்தும் அமர்ந்தனர்.

இலங்கை

எட்டு மாதங்கள் கழித்து இந்த சம்பவம் பற்றி தமிழகத்தின் முன்னணி வார இதழுக்கு கொடுத்த வீடியோ பேட்டியில் வானதி சீனிவாசன் இப்படி சொன்னார்; ''முதலில் ஒரு இருக்கையை இங்கே போடுங்கள் என்று எங்களுடைய தலைமையிடமிருந்து எனக்கு ஃபோன் வரும். பின்னர் இதனை அப்படி போடுங்கள், அதனை இப்படி போடுங்கள் என்று தொடர்ந்து உத்தரவுகள் வந்து கொண்டேயிருக்கும். ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல், அனைத்து இருக்கைகளையும் திருப்பி வைத்து விட்டோம்'' என்று பலமாக சிரித்துக் கொண்டே கூறினார்.

கடந்த 2014 தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. நாகர்கோவில் தொகுதியில் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தருமபுரியில் பாமகவின் அன்புமணி ராமதாசும் மட்டுமே வென்றனர். மற்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி படு தோல்வி கண்டது.

பொன். ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொன். ராதாகிருஷ்ணன்

இந்த நிகழ்வை தற்போது நினைவு கூற காரணம், இன்று தமிழக பாஜகவின் அரசியல் நிலைமைதான். 2014-ல் பல கட்சிகளை சேர்த்து கூட்டணி கண்ட பாஜக, இன்று கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலையில்தான் இருக்கிறது. பிரதமர் மோதி, ஒரு மாதத்துக்கு முன்பு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் டெல்லியிலிருந்து நடத்திய வீடியோ கான்ஃபரன்சிங் உரையாடலில் பாஜகவின் கதவுகள் அந்தக் கட்சியின் முன்னாள் கூட்டணி கட்சிகளுக்கும், மற்ற சில கட்சிகளுக்கும் திறந்தே இருப்பதாக கூறினார். ஆனால் ஒரு கட்சி கூட தாங்கள் பாஜக வுடன் சேர தயாராக இருப்பதாக இதுவரையில் கூறவில்லை. ''கடைவிரித்தேன் கொள்வாரில்லை'' என்பதுதான் தமிழக பாஜக இன்று தமிழகத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலை.

எந்த விருப்பு, வெறுப்பும் இல்லாமல், கள நிலவரத்தின் அடிப்படையில், ஒரு சமநிலையான பத்திரிகையாளனாக (a balanced journalist) ஒரு விஷயத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இன்று தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மட்டங்களிலும், பாஜகவின் மீதான, குறிப்பாக மோதியின் மீதான கோபம் என்பது கொதி நிலையின் உச்சத்தில் இருக்கிறது. இதற்கு காரணம், கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமும், கோபமும்தான்.

நீட் தேர்வு விவகாரம், காவிரி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுகளையும் புறந்தள்ளி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட மறுத்த கர்நாடகத்தை வழிக்கு கொண்டு வர தவறியது, மேகதாது விவகாரம், கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மோதி தமிழகம் வராதது, புயலில் இறந்தவர்களுக்காக அதிகாரபூர்வமாக, வழக்கமாக, பிரதமர் அலுவலகத்தின் வாயிலாக பிரதமர் தெரிவிக்கும் இரங்கல் செய்தி கூட வராதது, தமிழகம் கேட்ட கஜா புயல் நிவாரண நிதியில் பத்தில் ஒரு பங்கை கூட கொடுக்காதது, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் அப்பட்டமான ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளின் ஆதிக்கம், தமிழகத்துக்கே பிரத்யேகமான விவகாரங்களில் மாநிலத்தின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாட்டுக்கும் நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்து மாநில பாஜக தலைவர்கள் பேசும் வரம்பு மீறிய பேச்சுக்கள் மற்றும் தொடர் தனி மனித தாக்குதல்கள், ஆதிக்க ஜாதிகளில் வறுமையில் உள்ளவர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கை

கடந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை மோதி தமிழகம் வந்த போது, பிரதமரின் வருகைக்கு எதிரான, 'மோதியே திரும்பி போ' (Go Back Modi) என்ற ஹேஷ்டேக் டிரண்டிங் ஆனது. அது உணர்த்தும் செய்தி தமிழகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள வலுவான மோதி ஆதரவாளர்களையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது என்பது நிதர்சனம்.

விவரம் அறிந்த இந்த வரை மோதி ஆதரவாளர்கள் பொது வெளியில் இதனை மறுத்தாலும், தனிப்பட்ட முறையில் பேசும்போது இந்த யதார்த்தத்தை, கள உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆட்சி மற்றும் கட்சியை பொறுத்த வரையில், தமிழகத்தை ஆளும் அஇஅதிமுக அரசும், அஇஅதிமுக என்ற கட்சியும் இன்று மத்திய பாஜகவின் மற்றும் மோதியின் இரும்புப் பிடிக்குள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள் என்ற மாநிலத்தின் பெரும்பலான கட்சிகளின் வலுவான கருத்தும், குற்றச்சாட்டும் ஒதுக்கித் தள்ள முடியாத உண்மை என்றே நான் நினைக்கிறேன்.

ஜெயலலிதா

இந்த ஐயப்பாடு, டிசம்பர், 5, 2016 முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தவுடனேயே தமிழக அரசியலை சற்றே கூர்ந்து பார்ப்பவர்கள் அனைவரிடமும் ஏற்பட்டு விட்டது என்றே சொல்லுவேன். ஜெயலலிதா இறப்பதற்கு கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்துக்கு முன்பே, அப்போதைய மத்திய அமைச்சரும், தற்போதைய குடியரசு துணைத் தலைவருமான எம். வெங்கய்ய நாயுடு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு வந்து விட்டார்.

ஜெயலலிதா இறந்தவுடன், ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்கும் அந்த நிகழ்வு சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்றே பார்க்கப்பட்டது (smooth transformation of power). அதன் பிறகு அடுத்த நாள் ஜெயலலிதாவின் பூத உடல் சென்னையில் உள்ள ராஜாஜி அரங்கில் காலை 7 மணியளவில் வைக்கப்பட்ட போது, இறந்த முதலமைச்சரின் சவப்பெட்டியின் அருகில் வெங்கய்ய நாயுடு அமர்ந்து கொண்டிருந்தார். மாலையில் ஜெயலலிதாவின் இறுதி சடங்குகள் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் வரையிலும் வெங்கைய நாயுடு உடனிருந்தார்.

2017 பிப்ரவரி 7 ம் தேதி இரவு 9 மணிக்கு அன்றைய முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திடீரென்று ஜெயலலிதா சமாதியில் போய் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். காரணம் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சராக சசிகலாவை அஇஅதிமுக எம்எல்ஏ க்கள் தேர்ந்தெடுத்ததுதான். தன்னிடம் இருந்து வற்புறுத்தலின் காரணமாக ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டதாக ஓபிஎஸ் கூறினார். தான் ஒரு தர்ம யுத்தத்தை தொடங்கி விட்டதாக கூறினார்.

நரேந்திர மோதி தமிழகத்தை குறிவைப்பது ஏன்?

இந்த சம்பவம் பற்றி சில வாரங்கள் கழித்து ஒரு தமிழ் செய்தி தொலைக் காட்சிக்கு பேட்டி கொடுத்த, பாஜக வுக்கு நெருக்கமான, ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, தான் சொல்லித்தான் ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து, தர்ம யுத்தத்தை தொடங்கியதாக சொன்னார். இதனை இன்று வரையில் பாஜக மற்றும் அஇஅதிமுக விலிருந்து எவரும் மறுக்கவில்லை. பின்னர் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு 2017 ஆகஸ்ட் 21, மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசில் ஓபிஎஸ் துணை முதலமைச்சராக இணைந்தார். அப்போது ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் சொன்னது, ''மோதி சொல்லித்தான் நான் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அரசில் சேர்ந்தேன்' என்பதுதான்.

இவை எல்லாமே பொது வெளியில் இருக்கும் நிகழ்வுகள். இவற்றை பார்த்தாலே எந்தளவுக்கு பாஜகவின் கட்டுப்பாட்டில் அஇஅதிமுக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இன்னும் மூன்று மாதங்களில் வரவிருக்கும் மக்களவை தேர்தல்களில் எப்படியும் அஇஅதிமுக வை பாஜக தன்னுடைய கூட்டணிக்குள் இழுத்து விடும் என்று பரவலாகவே ஒரு வலுவான கருத்து நிலவிக் கொண்டிருக்கிறது.

ஜனவரி 15 ம் நாள் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற அஇஅதிமுக வுடன் கூட்டணி சேர வேண்டும் என்றார். அடுத்த நாள் இதுபற்றி டெல்லியில் கருத்து தெரிவித்த, அஇஅதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை தலைவருமான எம்.தம்பிதுரை, ''நாங்கள் ஏன் இந்த பாவத்தை தூக்கி சுமக்க வேண்டும்?'' என்றே கேட்டார்.

இந்த சூழ்நிலையில்தான் புதன்கிழமை, ஜனவரி 30 ம் தேதி, வரவிருக்கும் மக்களவை தேர்தல்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்கள் தங்களுடைய விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அஇஅதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இது பாஜக வுடன் கூட்டணி சேர தாங்கள் விருப்பமில்லை என்பதை அஇஅதிமுக வின் தற்போதய தலைமை உணர்த்திக் கொண்டிருக்கிறது என்றே நான் பார்க்கிறேன்.

ஆனால் இதில் உள்ள இன்னொரு விவகாரத்தையும் நான் ஒதுக்கித் தள்ளவில்லை. அஇஅதிமுக வின் அமைச்சர்களும், தலைவர்களும் இரட்டைக் குரலில் இந்த விவகாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தம்பிதுரை ''நாங்கள் ஏன் இந்த பாவத்தை தூக்கி சுமக்க வேண்டும்?'' என்று சொல்லும் அதே வேளையில், மாநில அமைச்சர் ஜெயகுமார், கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்கிறார்.

மூன்று மாநில தேர்தல்களில் பாஜக ஆட்சியை இழந்த போது ''இது அவ்வளவு பெரிய தோல்வி இல்லை. பாஜகவின் வாக்கு சதவிகிதம் அப்படியே இருக்கிறது'' என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அஇஅதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ பாஜக கூட்டணி பற்றி பேசும் போது, ''நாங்கள் எதற்காக நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்கும் பாஜக வுடன் கூட்டணி சேர வேண்டும்?'' என்று கேட்கிறார்.

நரேந்திர மோதி தமிழகத்தை குறிவைப்பது ஏன்?

பட மூலாதாரம், DIPR

வேறு சில நிகழ்வுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 2017 குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களில் அஇஅதிமுக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்தது.

அதே சமயம் முத்தலாக் மற்றும் பத்து சதவிகித இட ஒதுக்கீடு விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் பாஜக வுக்கு எதிராக கடுமையாக பேசி, இந்த இரண்டு மசோதாக்களையும் எதிர்த்த அஇஅதிமுக எம்.பி. க்கள் வாக்களிப்பை புறக்கணித்தனர். மோதிக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் பேசும் போது பெரும்பாலான அஇஅதிமுக தலைவர்கள் பாஜக வுடன் தாங்கள் கூட்டணி சேர விரும்பவில்லை, கட்சியில் கீழ்மட்டத்திலிருந்து எம்எல்ஏ க்கள் மற்றும் எம்பி க்கள் வரையில் 90 சதவிகிதத்தினரின் கருத்து இதுதான் என்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக எனக்கு நன்கு பரிச்சயமான, முன்னாள் மாநில அமைச்சரும், மக்களைவை உறுப்பினருமான ஒரு அஇஅதிமுக பிரமுகரிடம் சில நாட்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவர் இப்படி சொன்னார், ''தங்களுடன் கூட்டணி சேர பாஜக எங்களை கடுமையாக நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் சொன்ன பதில், தேர்தலுக்கு பின்பு வேண்டுமானால், பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நாங்கள் எங்களுடைய எம்.பி க்களின் ஆதரவை கொடுக்கிறோம். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.

மேலும், அவர் கூறுகையில் ''ஆனால் கடைசி நேரத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை, நாங்கள் பாஜகவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வைக்க துளியளவும் விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள கள நிலவரம் எங்களுக்கு துல்லியமாக தெரிந்துள்ளதால்தான் இப்படி சொல்லி வருகிறோம்'' என்றார்.

தமிழகம் மோதியை பொறுத்த வரையில் முக்கியமான ஒரு மாநிலம். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று கடந்த கால வரலாறு. 2004 மற்றும் 2009 ம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் தமிழகத்திலிருந்த தேர்வான எம்.பி.க்கள்தான் மத்தியில் யார் ஆள்வது என்பதை தீர்மானித்தனர்.

நரேந்திர மோதி தமிழகத்தை குறிவைப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

2004 ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து 40 எம் பி தொகுதிகளையும் திமுக - காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகள், பாமக, மதிமுக கூட்டணி வென்றது. அது ஒரு மெகா கூட்டணி. 2009 ல் திமுக - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தைகள் கூட்டணி 28 இடங்களை வென்றது. அஇஅதிமுக - இடதுசாரிகள் - மதிமுக கூட்டணி 12 இடங்களை வென்றது. ஆகவே தமிழகம் தான் இரண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகள் பத்தாண்டுகள் நாட்டை ஆள பெரும் பங்காற்றியிருக்கிறது.

இரண்டாவது காரணம் இதுதான்: இன்றைக்கு தென்னிந்தியாவில் உள்ள புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அதிக எம்.பி. தொகுதிகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்ளன. ஆந்திராவில் 25, தெலங்கானாவில் 17, கர்நாடகாவில் 28, கேரளாவில் 20, புதுச்சேரியில் ஒரு தொகுதி. ஆகவே 2004, 2009 முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்திலிருந்து வரும் எம்.பி க்கள் பாஜக வுக்கு எதிர் அணிக்கு போனால், அது மத்தியில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் கனவுக்கு வேட்டு வைத்து விடும்.

ஏனெனில் 2014 போன்று தனி மெஜாரிட்டி கண்டிப்பாக பாஜக வுக்கு இந்த முறை கிடைக்கப் போவதில்லை. இந்த சூழலில் சமீபத்தில் வந்த இரண்டு கருத்து கணிப்புகளின் முடிவுகளை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று சி வோட்டர் நடத்தியது, இரண்டாவது டைம்ஸ் நவ் தொலைக் காட்சி நடத்திய கருத்து கணிப்பு. சி வோட்டர் திமுக - காங்கிரஸ் கூட்டணி அனைத்து 40 இடங்களை வெல்லும் என்கிறது. டைம்ஸ் நவ் கணிப்பு 35 இடங்களுக்கும் மேல் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்கிறது.

பாஜக வெளியில் எவ்வளவு வீரம் பேசினாலும் அது உள்ளுக்குள் கள நிலவரத்தை அறிந்தே இருக்கிறது. கருத்து கணிப்புகள் பொதுவாக அவை இந்த கட்சி இத்தனை இடங்களை வெல்லும் என்று கூறும் போது அந்த இடங்களின் எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். ஆனால் ஒட்டு மொத்த முடிவில் அரிதாகவே தலை கீழ் மாற்றம் வந்திருக்கிறது. மேலே சொன்ன இரண்டு கருத்து கணிப்புகளும் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றே கணித்திருக்கின்றன.

ஆகவே நான் நினைப்பது, மத்தியில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். தற்போதுள்ள தனி மெஜாரிட்டியான 282 இடங்கள் பாஜக வுக்கு கண்டிப்பாக கிடைக்காது. ஆனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். மோதியே மீண்டும் பிரதமராகலாம். நான் மறுக்க வில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மோதி மஸ்தான் வித்தை பலிக்கப் போவதில்லை என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :