ரஜினிகாந்துடன் கூட்டணியா? - பிரதமர் நரேந்திர மோதி அளித்த பதில்

Narendra Modi நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

மக்களுடன் வைக்கும் கூட்டணிதான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார் நரேந்திர மோதி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார்.

'ரஜினிவுடன் கூட்டணி'

ரஜினி, அதிமுக ஏன் திமுகவுடன் கூட பா.ஜ.க கூட்டணி வைக்க உள்ளது என்பது போன்ற செய்திகள் உலவுகின்றவே என்ற கேள்விக்கு மோதி சிரித்தப்படி பதில் அளிக்க தொடங்கினார்.

அவர், "இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பேயி வெற்றிகரமான கூட்டணி அரசியலை முன்னெடுத்தார். அதுவரை காங்கிரஸ், மாநில கட்சிகளின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்தது. அவர்களை மிக மோசமாக கூட நடத்தியது. திமிர்தனத்துடன் நடந்து கொண்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி மாநில கட்சிகளை மதித்தது" என்றார்.

மேலும் அவர், "நாம் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பின்னரும் கூட, கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டுதான் ஆட்சி அமைத்தோம். எப்போதும் நம் கதவுகள் கூட்டணி கட்சிகளுக்காக திறந்தே உள்ளன. இதையெல்லாம் கடந்து மக்களுடனான கூட்டணிதான் நம்பிக்கையான கூட்டணி" என்று பதில் அளித்துள்ளார்.

இறுதிவரை அந்த கேள்விக்கு நேரடியான பதிலை அளிக்கவில்லை.

'நமோ செயலி'

மற்றொரு கேள்விக்கு, "இந்த நூற்றாண்டு தகவல்களின் நூற்றாண்டு. இரண்டு தசாப்தங்களுக்கு முன் தகவலை தெரிந்து கொள்வதற்கும், அதை மக்களிடம் கொண்டு சேர்பதற்கும் மிகவும் சிரமப்பட்டோம். ஆனால், இப்போது சமூக ஊடகங்கள் உள்ளன. மக்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன." என்றார்.

Modi மோதி

பட மூலாதாரம், Getty Images

அவர், "நமோ செயலியை பாருங்கள். அதில் ஒலி, ஒளி, வரைகலை என பல்வேறு சுவாரஸ்யமான வடிவங்களில் தகவல்களை தருகிறோம். அதனை மக்களிடம் கொண்டு சேருங்கள்" என்று கூறினார்.

'தமிழகத்திற்கு செய்தவை'

தமிழகத்திற்கு பல்வேறு நலதிட்டங்களை பா.ஜ.க செயல்படுத்தியதாக மோதி பட்டியலிட்டார்.

அவர், "உள்கட்டமைப்பு, முதலீடு, சமூக நலம் என பல்வேறு விஷயங்களை பா.ஜ.க செயல்படுத்தி உள்ளது. நாம் செய்தது போல, வேறு எந்த கட்சிகளும் தமிழகத்திற்கு செய்யவில்லை" என்றார்

தமிழகத்தில் 47 லட்சம் கழிப்பறைகளை கட்டி உள்ளோம். திறந்து வெளியில் மலம் கழிப்பதை 12 ஆயிரம் கிராமங்களில் முற்றும் முழுவதுமாக ஒழித்துள்ளோம். 3000 கி.மீ நீளத்திற்கு கிராம சாலைகளை தமிழகத்தில் போட்டுள்ளோம். உஜ்வாலா திட்டத்தினால் 27 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். திறன் மேம்பாட்டு பயிற்சியை 4 லட்சம் இளைஞர்களுக்கு அளித்துள்ளோம். 4 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு கிடைத்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 70 ஆயிரம் பேர் மோதிகேர் திட்டத்தினால் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். சாகர் மாலா திட்டத்தின் கீழ் 3 பெரிய துறைமுகங்களை கட்டுகிறோம். தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனையெல்லாம் மக்களிடம் கொண்டு சேருங்கள். அவர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுங்கள்" என்று கூறினார்.

'அந்நிய சக்திகள்'

இந்திய பாதுகாப்புத் துறை குறித்து பேசிய மோதி, இந்திய பாதுகாப்புத் துறை வலிமையடைவதை அந்நிய சக்திகள் விரும்பவில்லை என்று பா.ஜ.க செயற்பாட்டாளர்கள் மத்தியில் பேசினார்.

Modi மோதி

பட மூலாதாரம், Getty Images

நமது வீரர்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது, என்னால் அமைதியாக உட்கார்ந்து இருக்க முடியாது. நமது வீரர்களின் கரங்களை நான் வலுப்படுத்துவேன் என்றார்.

காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், "பொருளாதாரத்தில் மட்டும் இந்தியா தோல்வியடையவில்லை, பாதுகாப்புத் துறையிலும் மோசமாக செயல்பட்டது. தங்களுக்கு ஏதாவது பலன் இருந்தால் மட்டுமே, காங்கிரஸ் ஆயுதங்களை கொள்முதல் செய்தது.பக்கத்து நாடுகள் எல்லாம் விமானபடைக்காக விமானங்களை வாங்கி படை வலிமையை அதிகரித்தபோது, நாம் இருப்பதையும் இழந்தோம்." என்று கூறினார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: