பா.ஜ.க கூட்டணி கலைகிறதா: முதிர்ச்சியற்ற அணுகுமுறை, தொடரும் மனகசப்புகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஷரத் பிரதான்
- பதவி, லக்னோ
ராஜ்நாத்சிங் 2014ஆம் ஆண்டு அந்த முடிவை எடுத்தபோது, அதனை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதாக இல்லை.
என்ன முடிவு?
தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முடிவுதான். 1998 மற்றும் 2004 என இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றி இருந்தது அந்த கூட்டணி. வாஜ்பேயியால் உருவாக்கப்பட்ட கூட்டணி அது. 2014 தேர்தலை எதிர்கொள்ள அந்த கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று நினைத்தது பா.ஜ.க. அதற்கான பணிகளை பா.ஜ.க வின் அப்போதைய தலைவர் ராஜ்நாத் சிங் மேற்கொண்டார். ஆனால், அந்த பணி அவ்வளவு எளிதானதாக இல்லை.

பட மூலாதாரம், Getty Images
மனம் தளராத ராஜ்நாத்சிங் அனைத்து கட்சிகளுடன் உறவை புதுபித்து கொண்டார். முன்பு கூட்டணியில் இருந்தவர்கள், விட்டு சென்றவர்கள், சிறு கட்சிகள் என அனைவருடன் இணக்கம் பாராட்டினார். இது பா.ஜ.கவுக்கு நல்விளைவுகளை தந்தது.
முப்பதுக்கும் மேற்பட்ட கட்சிகள் பா.ஜ,க தலைமையை ஏற்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வந்தன. ஒரு ஸ்திரமான கூட்டணி அமையப்பெற்றது. இதற்கெல்லாம் காரணம் ஒற்றை மனிதர் - ராஜ்நாத் சிங்.
அதுவொரு வாஜ்பேயி காலம்
அந்த கூட்டணி, ஒரு தசாப்தத்திற்கு முன், ராஜ்நாத்தின் அரசியல் ஆசான் வாஜ்பேயி அமைத்த கூட்டணியைவிட பெரிதாக இருந்தது. மற்றொரு வாஜ்பேயீ உருவாகிறார் என்று அனைவரும் ராஜ்நாத் சிங்கை விதந்தோதினார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அப்போது கூட்டணியில் இருந்த கட்சிகளில் சிவ சேனா மட்டும்தான், பா.ஜ.கவுடன் சித்தாந்தரீதியாக ஒத்துபோகும் கட்சியாக இருந்தது. வாஜ்பேயி காலகட்டத்தில் சிவ சேனா கட்சிகளுடன் முரண்பாடு ஏற்படும் போதெல்லாம், அவர் நேரடியாக பால்தாக்ரேவை அழைப்பார். 2014இல், ராஜநாத் அந்த பங்கை வகித்தார். சச்சரவுகளை பேசி தீர்த்தார்.
ஆனால், இன்று நிலை அவ்வாறாக இல்லை.
மனகசப்புகள்
நரேந்திர மோதி அமைச்சரவையில் அமைச்சராக தற்போது இருக்கும் போதும், அனுப்பிரியா பட்டேலால் தமது ஆப்னா தால் கட்சிக்கு மரியாதைக்குரிய எண்ணிக்கையிலான தொகுதிகளை எதிர்வரும் 2019 தேர்தலில் பெறுவது அவ்வளவு சுலபமானதாக இருக்க போவதில்லை. ஒரு மனகசப்பு நிலவி வருகிறது. இதற்கு சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் விதிவிலக்கல்ல. அந்த கட்சியின் தலைவர் உத்தர பிரதேச ஆளும் பா.ஜ.க அரசில் அமைச்சராக இருக்கும் போதும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமது அரசை விமர்சித்து வருகிறார்.
இவர்கள் கூட்டணியை முறித்து கொள்ளப் போவதாகவும் அவ்வபோது சொல்லி வருகின்றனர்.
ஆனால், அவர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க சார்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
அவர்களை பேச்சுவார்த்தை, உரையாடல் மூலம் இணங்க வைப்பதற்கு பதிலாக, அவர்களை மிரட்டல் மூலம் இணங்க வைக்க முடியுமென பா.ஜ.க தலைமை நம்புவதாக தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதனை அகந்தை அல்லது மிதமிஞ்சிய நம்பிக்கை என கூறலாம். மனகசப்பில் இருப்பவர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க தலைவர் அமித் ஷா எந்த சமிக்ஞையையும் காட்டுவதாக தெரியவில்லை.
ராம் விலாஸ் பாஸ்வான் நிலையும் இதுவாகதான் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அவருக்கு ஏராளமான கருத்து வேற்றுமைகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால், அவரை சமாதானப்படுத்தி கூட்டணிய வலுவாக்க எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.
ராஜ்நாத் சிங் இருந்திருந்தால் இவ்வாறாக நிகழாது. மனகசப்பு வெளியே தெரியாத வண்ணம் உடனடியாக பேசி சமாதானம் செய்திருப்பார் என்கிறார் உள்விவகாரங்களை நன்கு அறிந்த ஒருவர்.
முதிர்ச்சி தேவை
ராஜ்நாத் சிங் திறமையை புரிந்து கொள்ள நாம் கொஞ்சம் வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும். 1998ஆம் ஆண்டு, மாயாவதி, கல்யான் சிங் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கினார். அனைவரும் கல்யாண் சிங் ஆட்சி கவிழப் போகிறது என்று நினைத்த போது, ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தனியார் விமானத்தில் அழைத்து சென்று குடியரசு தலைவர் முன் அணிவகுப்பு நடத்தி ஆட்சியை காப்பாற்றினார் ராஜ்நாத்.
அதன் பின், வாஜ்பேயிக்கும் கல்யாண் சிங்கிற்கும் மனகசப்பு ஏற்பட்ட போது, ராஜ்நாத் வாஜ்பேயி பக்கம் நின்றார். ஆனால், அப்போதும் கல்யாண்சிங்கிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஊடகங்கள் பல்வேறு வழிகளில் கேட்டு பார்த்தன . அனைத்தையும் புன்னகையுடன் கடந்தாரே தவிர ஒரு வார்த்தை கூட யார் குறித்தும் தவறாக பேசவில்லை.
அது போன்ற முதிர்ச்சிதான் இப்போது பா.ஜ.வில் இல்லாமல் இருக்கிறது.
இப்போது இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருக்கிறார் ராஜ்நாத் சிங். ஆனால், அவரால் கட்சியின் உள்விவகாரங்களில் எதுவும் சொல்ல முடியாமல் இருப்பது தெரிகிறது.
2019 மக்களவைக்கான தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்குள் பெரிதாக அதிகாரமற்ற பொறுப்பு அது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












