"ஹெல்மெட் போடலையா 10 திருக்குறள் எழுதுங்க" - நூதன தண்டனை வழங்கிய போலீஸ் அதிகாரி

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: ஹெல்மெட் போடலையா 10 திருக்குறள் எழுதுங்க - நூதன தண்டனை வழங்கிய போலீஸ் அதிகாரி
பெரம்பலூரில் போக்குவரத்து பிரிவில் ஆய்வாளாராக பணியாற்றும் நாவுக்கரசன் என்பவர் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
சாலையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் கல்லூரி மாணவர்களுக்கு அபராதம் விதிக்காமல், அவர்களிடம் பேப்பர், பேனாவை கொடுத்து பத்து திருக்குறளை பிழையில்லாமல் எழுத சொல்கிறார்.
பத்து திருக்குறள் எழுதிவிட்டால் அபராதம் கிடையாது. பத்து திருக்குறள் எழுத முடியாவிட்டால் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்: ஆன்லைன் சந்தைக்கு புதிய கட்டுப்பாடு: எச்சரிக்கும் அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இயங்கும் ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் சந்தை நிறுவனங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறையும் என் அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு எச்சரித்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா - இந்தியா வர்த்தக கூட்டமைப்பு தலைவர், நிஷா தேசாய் பிஸ்வால் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதலீடு செய்ய, அமெரிக்க நிறுவனங்கள் தயாராகி வரும் சூழலில் திடீரென கொள்கையை மாற்றினால், எவ்வாறு அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்து தமிழ்: சென்னை பிரபல மருத்துவமனையின் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமிரா

பட மூலாதாரம், Hindustan Times
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில், சக பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிராவை பொருத்தி வீடியோ எடுத்து மிரட்டிய மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இந்த தனியார் மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை ரகசியமாக பதிவு செய்து தன்னோடு பணியாற்றும் சக ஊழியர்களிடம் பகிர்ந்துள்ளார்.
போலீஸார் பிரகாஷ் பொருத்திய ரகசிய கேமிராவை கைப்பற்றி அவரையும் கைது செய்தனர். இதற்கு முன்பு, சென்னை ஆதரம்பாக்கத்தில் பெண்கள் தனியார் விடுதி ஒன்றில், விடுதி உரிமையாளர் கேமிரா பொருத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: அகஸ்டா ஊழல் வழக்கு: சோனியா, ராகுல் பெயரை கூறிய இடைத்தரகர்

பட மூலாதாரம், PRAKASH SINGH
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிரிஸ்டியன் மைக்கெல் விசாரணையின் போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிட்டதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்காரணமாக, அவரது போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தான் யாரை குறிப்பிட்டு கூறினேன் என்பதை கிரிஸ்டியன் மைக்கெல் குறிப்பிடவில்லை என்று அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாலிய பெண்ணின் மகன் என அவர் கூறியதுடன், அந்த பெண் இந்தியாவின் அடுத்த பிரதமர் எனவும் கூறியதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர்ட் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- 150-வது டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா: ஆஸ்திரேலியாவில் மகத்தான சாதனை
- வட கொரிய சிக்கலின் சூட்டை தணித்த 2018-ம் ஆண்டு
- டிம் பெய்னை கலாய்த்த ரிஷப் பந்த்- விக்கெட் கீப்பர்களுக்குள் நடந்த நீயா-நானா?
- ஃபேஸ்புக்கில் நிதி திரட்டி செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்ற தம்பதி
- ஐந்து வயது சிறுமிக்கு தண்ணீர் கொடுக்காமல் கொன்ற பெண் தீவிரவாதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












