காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம்; இந்தியாவுக்கும் வேண்டாம் - அஃப்ரிடியின் அதிரடி

பட மூலாதாரம், Getty Images
இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: ‘பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம் - ஷாஹித் அஃப்ரிடி’
காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம்; இந்தியாவுக்கும் வேண்டாம், அது சுதந்திரமாகவே இருக்கட்டும். பாகிஸ்தானால் அதன் நான்கு மாகாணங்களையே சமாளிக்க முடியவில்லை. காஷ்மீரை எப்படி பார்த்துக் கொள்ளும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அதே வேளையில் தனக்கு தற்போது அரசியலில் இறங்கும் எண்ணமில்லை என்றும், தொடர்ந்து சமூகநல பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் குறித்த ஷாஹித் அஃப்ரிடியின் கருத்து சமூகவலைத்தளங்களில் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இதனை தொடர்ந்து தனது கருத்து இந்திய ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தனது ட்விட்டர் பதிவில் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
''காஷ்மீர் குறித்த எனது கருத்துக்கள் இந்திய ஊடகங்களால் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் மிகுந்த பற்றுள்ள நான், காஷ்மீர் மக்களின் போராட்டங்களை பெரிதும் மதிக்கிறேன். காஷ்மீரில் மனிதநேயம் நிலவவேண்டும். அந்த மக்கள் தங்களின் உரிமைகளை பெற வேண்டும்'' என்று அஃப்ரிடி தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் கூறியுள்ளது.

தினமணி: 'வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி மார்க்3 - டி2 ராக்கெட்'

பட மூலாதாரம், Getty Images
"ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி மாலை 5.08 மணிக்கு... கஜா புயல் காரணமாக புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்று, மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தபோதும், திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை 5.08 மணிக்கு 3,423 கிலோ எடைகொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் ராக்கெட் பலத்த சப்தத்துடன் தீயைக் கக்கியபடி சீறிப் பாய்ந்தது.

பட மூலாதாரம், Getty Images
முதல் நிலையில் இரண்டு திட எரிபொருள் என்ஜின்கள், இரண்டாவது நிலையில் ஒரு திரவ எரிபொருள் என்ஜின், மூன்றாவது நிலையில் அதிக திறன்கொண்ட கிரையோஜெனிக் என்ஜின் என மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட் ஒவ்வொரு நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்து சென்றது." என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிஷங்கள் 44 விநாடிகளில் அதில் இணைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்து, திட்டமிட்டபடி பூமிக்கு அருகே 190 கிலோ மீட்டர் தூரத்திலும், பூமிக்குத் தொலைவில் 35,975 கிலோ மீட்டர் தூரத்திலும் தற்காலிக நீள்வட்டப் பாதையில் புவியைச் சுற்றிவரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது.
வாழ்த்துத் தெரிவித்துக் கொண்ட விஞ்ஞானிகள்: ராக்கெட் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக மேலெழும்பிய உடனேயே விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் ஒவ்வொரு நிலையைக் கடக்கும்போதும் கைகளைத் தட்டி வரவேற்புத் தெரிவித்தனர். இறுதியில், செயற்கைக்கோள் திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும், விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


இந்து தமிழ்: 'பிறந்தநாள் விழா: ரவுடிகளை சுற்றி வளைத்த போலீஸ்'
மதுரை அருகே பரவையில் தனியார் கிளப் ஒன்றில் நடந்த திமுக பிரமுகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ரவுடிகளில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை 4 காவல் நிலையங்களில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், இந்து தமிழ்
"முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் சோலை எம்.ரவி. இவர் தற்போது திமுக செயற்குழு உறுப்பினராக உள்ளார். கல்வி நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் சிறப்பாக கொண்டாடுவர்.இந்த ஆண்டும் வழக்கம் போல, மதுரை அருகே பரவை யில் உள்ள கிளப் ஒன்றில் அவரது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.இவ்விழாவில் கூட்டாளிகள் மற்றும் மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்." என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"மதுரை மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பிரபல ரவுடிகளும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தனியார் கிளப்புக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை முதலே தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, விழாவில் பங்கேற்க சென்ற 15-க்கும் மேற்பட்டவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி வளைத்து போலீஸ் பிடித்ததாக கூறுகிறது" அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: "ரபால் போர் விமான விவகாரம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்படுமா?"
ரபால் போர் விமான விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"இந்திய விமானப்படைக்கு பிரான்சு நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு ரபால் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ம் ஆண்டு மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

பட மூலாதாரம், Getty Images
ரபால் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்சு நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் இதை மத்திய அரசு மறுத்து உள்ளது. டசால்ட் நிறுவனமும் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று கூறி இருக்கிறது.
இந்த நிலையில், இந்த ஊழல் விவகாரம் குறித்து கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில், போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நடைமுறைகள் பற்றிய விவரங்களை நீதிபதிகளிடம் மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் போர் விமானத்தின் விலை விவரம் பற்றிய தகவலை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது." என்கிறது அந்நாளிதழ்.
"ரபால் போர் விமானங்கள் வாங்கும் பேரத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களால் இதுபோன்ற ஒரு விசாரணை அவசியம் தேவை என்பது புலனாகிறது. 36 ஜெட் விமானங்கள் வாங்குவதில் டெண்டர் முறைகள் தவிர்க்கப்பட்டு இரு அரசுகளுக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்து ஏப்ரல் 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்து உள்ளார். ராணுவ மந்திரிக்கு கூட இந்த ஒப்பந்தம் பற்றி அப்போது தெரிந்து இருக்கவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்த பேரத்தில் இடம்பெற வைக்கவே இது போன்று அறிவிக்கப்பட்டு உள்ளது." என்று னுதாரர்களில் ஒருவரான சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதாடுகையில் கூறியதாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், "பாதுகாப்புத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து அத்துறையின் நிபுணர்கள்தான் முடிவெடுக்க முடியும். இதுபோன்ற விஷயங்கள் இந்த கோர்ட்டின் அதிகாரத்துக்குள் வராது. மேலும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் மற்றும் வேறுசில ஆவணங்களின் அடிப்படையில் இதுபோன்று விசாரணை நடத்த முடியாது. அந்த ஆவணங்கள் மனுதாரர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதையும் ஆராய வேண்டும்" என்று கூறினார் என்கிறது தினத்தந்தி.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேற்றுடன் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












