கேரள வெள்ளம்: 'மக்களை காப்பாற்ற முடியவில்லையே!' - கதறி அழுத ஊராட்சித் தலைவி
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
வெள்ளத்தால் சூழப்பட்ட கேரளாவின் சிறுகிராமமான நெடும்பச்சேரியில் தனது மக்களை காப்பாற்றமுடியவில்லை என ஊராட்சித் தலைவி மினி எல்தோரா கதறிஅழுதது, அத்தானி வெள்ளநிவாரண முகாமில் உள்ளவர்களின் நெஞ்சை உலுக்கியது.

''எங்கள் பஞ்சாயத்தில் மொத்தம் 35,௦௦௦ பேர் உள்ளனர். இதில் எத்தனை நபர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளர்கள், எத்தனை பேர் மீண்டார்கள் என்று தெரியவில்லை. 13 முகாம்கள் செயல்படுகின்றன. ஆனால், என் மக்கள் அனைவரும் பத்திரமாக உள்ளார்களா என்று தெரியவில்லை. அச்சமாக உள்ளது,'' கண்ணீருடன் பேசுகிறார் மினி எல்தோரா.
கொச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்தானி முகாமில் சுமார் நூறு குழந்தைகள் உள்ளிட்ட 500 நபர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கான உணவு,மருந்துகளை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார் மினி.

பட மூலாதாரம், Getty Images
''எல்லா இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலில் செல்லமுடியாது. பேருந்துகளை இயக்குவதிலும் சிரமம் உள்ளது. என் மக்களுக்கான உணவு, மருந்துகளை எப்படி கொண்டுவருவேன் என்று புரியாமல் தவிக்கிறேன்,'' என்றார் மினி.
குழந்தைகள் தவிப்பார்கள்
''எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஊரில், பக்கத்துக்கு ஊரில், கேரளத்தில் எத்தனை குழந்தைகள் தவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. முடிந்த அளவு வெள்ள நிவாரண முகமாமுக்கு மக்களை கொண்டுவருகிறோம். ஆனால் பயமாக இருக்கிறது. மழை கொட்டுகிறது. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை,'' அழுகையுடன் பேசினார் மினி எல்தோரா.

நம்பிக்கையுடன் மீட்பு பணிகளை செய்து வந்தாலும், தனது சொந்த ஊர் மக்கள் தவிக்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்கமுடியவில்லை என்கிறார் மினி.
''இது வரை எர்ணாகுளம் மாவட்டம் இது போல வெள்ளத்தை சந்தித்ததில்லை. கொச்சி நகரத்தில் மழையை நாங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்திருக்கிறோம். இன்று வெள்ளத்தில் மூழ்கும் நிலைக்கு வந்துள்ளோம். வெள்ளம் வடியவேண்டும் என்று மட்டுமே எங்கள் ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்கிறோம்'' என்று தெரிவித்தார்.
நிவாரண முகாமில் உள்ள பலரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பரிச்சயத்துடன் பழகும் மினி, இந்த வெள்ளத்தில் காணமல் போனவர்கள் பற்றி குழப்பத்துடன் இருப்பதாக கூறினார்.
வீட்டுக்கு எப்போது செல்வோம்?
வெள்ள நிவாரண முகமாமில் உள்ள பாதிக்கபட்டவார்கள் பலரும் ஒற்றுமையுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வது மட்டுமே தங்களிடம் உள்ள பலம் என்று அவர் கூறினார்.
''இங்கு யாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எல்லோருமே பாதிக்கப்பட்டவர்கள். எல்லோருமே வெள்ளத்தில் சிக்கியவர்கள். எங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறோம். நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்,'' என்கிறார் நிவாரண முகாமில் உள்ள ராமேந்திரன்(68).
இரண்டு குழந்தைகளுடன் முகாமிற்கு வந்தவர்கள் இளம் தம்பதி சபீர் மற்றும் ஜாஸ்மின். ''எங்கள் இரண்டு குழந்தைகளையும் தோளில் சுமந்துகொண்டே வந்தோம். கயிறு கட்டி எங்களை வீட்டுக்கு வெளியே கொண்டுவந்தார்கள். என் சின்ன மகன் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அழுதுகொண்டே இருந்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை,'' என்று கூறினார் சபீர்.

தனது முதல் மகனுக்கு கஞ்சி ஊட்டுகிறார் ஜாஸ்மின். ''எப்போது வீட்டுக்கு போவோம் என்று மகன் கேட்கிறான். எங்கும் செல்ல முடியாது என்பதை உணர்த்திவருகிறோம். எங்களிடம் எதுவும் இல்லை. நம்பிக்கையைத் தவிர,'' என்றார் ஜாஸ்மின்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












