சினிமா விமர்சனம்: கோலமாவு கோகிலா

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அறம் படத்திற்குப் பிறகு நாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் மையப்புள்ளியாக வைத்து உருவாகியிருக்கும் படம்.
கீழ் மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்த கோகிலாவின் அம்மாவுக்கு நுரையீரல் புற்றுநோய். தங்கை படித்துக்கொண்டிருக்கிறாள். தந்தையால் பெரிதாக சம்பாதிக்க முடியாது. இந்த நிலையில் யதேச்சையாக ஒரு போதைப் பொருள் கடத்தும் கும்பலின் அறிமுகம் ஏற்படுகிறது கோகிலாவுக்கு. தாயின் சிகிச்சைச் செலவுக்காக போதைப் பொருளைக் கடத்த ஆரம்பிக்கிறாள் கோகிலா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஒரு கட்டத்தில் அதனால் பல பிரச்சனைகள் ஏற்பட, அதிலிருந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி, தானும் எப்படி தப்புகிறாள் என்பதுதான் கதை. இதற்கு நடுவில் கோகிலாவின் வீட்டிற்கு எதிரில் கடை வைத்திருக்கும் யோகிபாபுவின் ஒருதலைக் காதலையும் சமாளித்தாக வேண்டும்.
ஒரு சாதாரண கடையில் வேலை பார்க்கும் கோகிலா தன் மேலாளரிடம் சம்பள உயர்வு கேட்கிறாள். மேலாளர், அதற்கு தன்னை அரவணைத்துச் செல்ல வேண்டுமெனக் கூற, பதிலுக்கு கோகிலா கூறும் வசனம் அட்டகாசம். இப்படியாக பெரும் ஆரவாரத்துடன் துவங்குகிறது படம்.

பட மூலாதாரம், LYCA Productions/கோலமாவு கோகிலா
போதைப் பொருள் கடத்தல் போன்ற ஒரு பாதாள உலகம் சம்பந்தப்பட்ட கதையின் மையப்புள்ளியாக ஒரு நாயகியை வைத்திருப்பதே இந்தப் படத்தின் முதல் வெற்றி. அதுவும் அந்த நாயகி நயன்தாராவாக இருக்கும்போது கேட்கவே வேண்டாம். துவக்கக் காட்சியிலிருந்தே தூள்பரத்துகிறார்.
அப்பாவியைப் போல இருந்துகொண்டு மிகவும் அழுத்தமான வேலைகளைச் செய்யும் பாத்திரம். அதில் அப்படியே ஒன்றிப்போயிருக்கிறார் நயன்தாரா. ஆனால், பல காட்சிகளில் அவரது நடிப்பு நானும் ரவுடிதான் படத்தை நினைவுபடுத்துகிறது. தவிர, படம் நெடுக முதுகில் பையும் ஒரே மாதிரியான உடையும் வருவது சலிப்பேற்படுத்துகிறது.

சூழலுக்கு ஏற்ப நடந்துகொண்டு தப்பிக்கும் நாயகி, விசித்திரமான பழக்கங்களைக் கொண்ட வில்லன்கள், உருப்படியில்லாமல் சொதப்பும் அடியாட்கள், சொதப்பும் காவல்துறை, சம்பந்தமில்லாத காரியங்களைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நபர்கள் என ஒரு டார்க் காமெடி படத்திற்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் உண்டு.
ஆனால், இரண்டாம் பாதியில் பெரிய அளவில் போதைப் பொருளைக் கடத்த முற்படும்போது நேர்மையான தந்தை உட்பட குடும்பமே இணைந்துகொள்வது, தேவையில்லாமல் நாயகி குறுக்கு வழியில் இறங்குவது என இடைவேளைக்குப் பிறகு சற்று தொய்வடைகிறது படம். ஆனால், க்ளைமாக்ஸை நெருங்கும்போது மீண்டும் விறுவிறுப்பெடுக்கிறது.
படத்தின் நாயகி நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கும் யோகிபாபு, நயன்தாராவுக்கு அடுத்தபடியாக படத்தின் பலமான அம்சம். நயன்தாராவுக்காகவே அவரது வீட்டிற்கு எதிரில் கடை வைத்திருப்பது, பிறகு அவருக்கு உதவப்போய் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வது என்று வெளுத்துக்கட்டுகிறார் மனிதர்.

தொடர்ந்து பஞ்ச் டயலாக் பேசும் மொட்டை ராஜேந்திரன், நேர்மையான அப்பாவாக வரும் ஆர்.எஸ். சிவாஜி, தாயாக வரும் சரண்யா ஆகியோர் தேர்ந்த நடிகர்கள் என்பதால் படம்நெடுக ரசிக்கவைக்கிறார்கள்.
குறிப்பாக, நயன்தாராவின் தங்கையைக் காதலிக்கும் (ஒருதலைக் காதல்தான்) இளைஞனும் அசரவைக்கிறார்.
அறம் படத்தில் கதாநாயகி ஏற்றிருக்கும் ஆட்சியர் பாத்திரம் அவருக்கு ஒரு அதிகாரத்தைத் தருகிறது. ஆனால், இந்தப் படத்தில் எந்த பலமுமே இல்லாமல் வரும் நாயகி, நோயிலிருந்து தன் தாயைக் காப்பாற்ற முயல்கிறார், பலம்வாய்ந்த வில்லன்களை எதிர்கொள்கிறார், கொலை செய்கிறார். உண்மையில் இது நயன்தாராவுக்கு அடுத்த கட்டம். நயன்தாரா மட்டுமல்ல, படத்தில் வரும் பெண் பாத்திரங்கள் எல்லோருமே முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த வகையில் இது ஒரு கவனிக்கத்தக்க படம்.

அனிருத்தின் இசையில் 'கல்யாண வயசு' பாடல் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது.
நயன்தாராவின் ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் ரசிக்கக்கூடிய படம்தான்.
கோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













