நாளிதழ்களில் இன்று: "சிங்கம், புலியை பார்த்தவன் நான்" - அமைச்சர் ஜெயக்குமார்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர் - "சிங்கம், புலியை பார்த்தவன் நான்": அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சர் ஜெயக்குமார்.

பட மூலாதாரம், Getty Images

சிங்கம், புலியை பார்த்துள்ள நான், நண்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சட்டசபையில் நடந்த கேள்வி நேரத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்காக நண்டு விடும் போராட்டம் நடத்துவதாக கூறி, தன் வீட்டிற்கு வந்ததாக குறிப்பிட்ட அவர், விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவது தற்போது அதிகரித்துள்ளதாக கூறினார். "நண்டு, ஆமை, சிங்கம், புலி என அனைத்தையும் பார்த்துவிட்டுதான் வந்துள்ளேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்" என்று ஜெயக்குமார் பேசினார்.

சிங்கம், புலியை எல்லாம் எங்கு பார்த்தீர்கள் என்று திமுக எம்.எல்.ஏக்கள் என கேள்வி எழுப்பியதற்கு, 2001ஆம் ஆண்டு வனத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது அவர் பார்த்தார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்ததாகவும் மேலும் அச்செய்தி கூறுகிறது.

Presentational grey line

தினமணி - கறுப்புப் பண ஒழிப்பில் மோதி அரசு தோல்வி-ராகுல்

பணம்

பட மூலாதாரம், Getty Images

ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதையடுத்து மோதி அரசின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெயிட்டுள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும் வெளிநாட்டவர்களின் டெபாசிட் விவரங்கள் அடங்கிய வருடாந்திர அறிக்கையை ஸ்விட்சர்லாந்து வங்கி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்களின் டெபாசிட்டுகள் 7000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 50.2 சதவீதமாக அதிகமாகும்.

இந்நிலையில் கறுப்புப் பணத்தை ஒழிப்போம் என்ற மோதி அரசின் வாக்குறுதி எந்த அளவிற்கு பொய்யானது என்பது இப்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Presentational grey line

தி இந்து (ஆங்கிலம்) - ஸ்டெர்லைட் ஆலை மூடலால் சார்ந்த தொழில்கள் பாதிப்பு

ஸ்டெர்லைட் ஆலை

பட மூலாதாரம், VEDANTA

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், அங்கிருந்து கந்தக அமிலம் போன்ற மூலப்பொருட்களைப் பெற்று இயங்கிவரும் உர உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தி இந்து, ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமிலங்கள், செப்புக்கசடுகள் போன்ற பொருட்களுக்காக ஸ்டெர்லைட் ஆலையை பல தொழிற்சாலைகள் நம்பியிருந்தன. தற்போது ஆலை மூடப்பட்டதால், பேட்டரி உற்பத்தியாளர்கள், டிடெர்ஜென்ட் தயாரிப்பவர்கள், சிமென்ட் ஆலைகள் போன்ற பல தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது அந்த செய்தி குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :