அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

Capital gazette front page 29.6.2018

பட மூலாதாரம், Capital Gazette

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

வியாழக்கிழமையன்று மேரிலாண்டில் கேபிடல் கெசட் நாளிதழ் அலுவலகத்தில் ஒரு துப்பாக்கிதாரி ஐந்து பேரை சுட்டுக்கொன்ற நிலையில் அப்பத்திரிகையின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.

மேரிலாண்டில் வசிக்கும் 30 வயதுக்கு மேல் உடைய வெள்ளை நிற மனிதர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters

அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க, சந்தேக நபர் மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிபிஎஸ் நியூஸின் தகவல்படி, அவர் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் விரல் ரேகைகளை அழித்துவிட்டதாகவும் தெரிகிறது.

போலி கிரனேட் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் தனது பையில் அவர் வைத்திருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் "பெரிய துப்பாக்கியை" பயன்படுத்தியதாக தெரிவித்த அவர்கள் மேற்கொண்டு எந்தவித தகவல்களையும் அளிக்கவில்லை. வெடிகுண்டாக இருக்கலாம் என கருதிய பொருளை செயலிழக்கச் செய்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சம்பவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து 170 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதாக போலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

இறந்தவர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

1. வெண்டி வின்டர்ஸ், 65 வயது - ஆசிரியர்

2. ரெபேக்கா ஸ்மித் 34 வயது - விற்பனை உதவியாளர்

3. ராபர்ட் ஹியாசன் , 59 வயது - துணை ஆசிரியர் மற்றும் பத்தி எழுத்தாளர்

4. ஜெரால்டு பிஷ்மேன், 61 வயது - தலையங்க எழுத்தாளர்.

5. ஜான் மெக்நமாரா, 56 வயது - செய்தியாளர் மற்றும் ஆசிரியர்

"நீங்கள் உங்கள் மேசையில் அமர்ந்து பணி செய்து கொண்டிருக்கும்போது பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாவது போன்ற சத்தத்தையும், துப்பாக்கிதாரி மீண்டும் துப்பாக்கியில் குண்டை நிரம்பும் சத்தத்தையும் கேட்பதை போன்றதை காட்டிலும் திகிலூட்டும் சம்பவம் வேறேதும் இருக்க முடியாது"

"அது ஒரு 'போர் பகுதியை' போன்று காட்சியளித்தது" என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஃபில் டேவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

மாகாணத் தலைவர் ஸ்டேவ் சூஷ், தகவல் அறிந்ததும் 60 நொடிகளில் போலிஸார் வந்தடைந்தனர். அப்போது சந்தேக நபர் மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தார் என்று தெரிவித்தார். மேலும் போலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

எச்சரிக்கை நடவடிக்கையாக நியூயார்க் நகரில் அமைந்துள்ள செய்தி நிறுவனங்களுக்கு பயங்கரவாத தடுப்பு குழுக்களை நிறுத்தியுள்ளதாக நியூயார்க் நகர போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :