ஸ்டெர்லைட்: ராம்தேவ், ஜக்கி வாசுதேவுடன் `மல்லுக்கட்டும்' ஜெயக்குமார்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பாபா ராம்தேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ் தெரிவித்த கருத்துகள் குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் ஜெயக்குமார், தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது என்றார்.
பாபா ராம்தேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ், ஸ்டெர்லைட் ஆலை குறித்து கூறிய கருத்துகள் பற்றி அரசுக்கு கவலையில்லை என்றும் தெரிவித்த அவர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் மற்றும் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கடந்த சில தினங்களுக்குமுன் தெரிவித்திருந்த கருத்துக்கு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் தேதி பாபா ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில், வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மற்றும் அவரது மனைவி கிரண் அகர்வால் ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார்.

பட மூலாதாரம், Twitter
தனது லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலை சந்தித்ததாக குறிப்பிட்ட பாபா ராம்தேவ், பாரதத்தை கட்டியெழுப்பும் பணியில் அவருடைய பங்களிப்பாக பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியதற்காகவும், பொருளாதார அபிவிருத்திக்காகவும் மரியாதை செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், அப்பாவி உள்ளூர் மக்களை தூண்டிவிட்டு சர்வதேச சதிகாரர்கள் தென்னிந்தியாவிலிருந்த வேதாந்தா ஆலை ஒன்றை மூடியதாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு தொழிற்சாலைகளே கோயில்கள் என்று கூறிய அவர், ஆலை மூடப்படக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Twitter
இதனையடுத்து, இரு தினங்கள் கழித்து (நேற்றைய தினம்) ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் தாமிர உருக்காலை நிபுணரல்ல என்று குறிப்பிட்ட ஜக்கி, இந்தியாவுக்கு தாமிரத்தின் தேவை அதிகமிருப்பதாகவும், நாம் சொந்தமாக உற்பத்தி செய்யாவிட்டால் சீனாவிடம் வாங்கவேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், சுற்றுச்சூழல் விதிமீறல்களை சட்ட ரீதியாக அணுகவேண்டும் என்றும், மிகப்பெரிய வர்த்தகத்தை நிறுத்துவது பொருளாதார தற்கொலை என்றும் கூறியிருந்தார்.
ஜக்கி வாசுதேவ் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்த திரைப்பட நடிகர் சித்தார்த், தமிழக முதலமைச்சர் அலுவலகம் ஓர் இழுக்கு என்றும், யோகாவை தவிர பிரதமர் அலுவலகம் வேறு எதையுமே பேசாது என்றும் கடுமையாக சாடியிருந்தார்.
தாமிர உருக்காலையின் நன்மைகளை பற்றி பேச இது சரியான நேரமல்ல என்று தெரிவித்த சித்தார்த், பொதுமக்கள் போலீஸாரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதைப்பற்றி நீங்கள் தற்போது பேச வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜக்கி வாசுதேவ் பதில்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் கருத்துக்கு ஜக்கி வாசுதேவ் பதிலளித்துள்ளார். தான் எந்தவொரு தொழிற்சாலையையும் மீண்டும் திறக்கக்கோரி பரிந்துரைக்கவில்லை என்றும், விதிமீறல்கள் எதுவும் இல்லை என்பதை அரசுதான் உறுதிபடுத்தியிருக்க வேண்டுமே தவிர வீதிகளில் குடிமக்களை போராட விட்டுவிட்டு வீதிகளில் மக்கள் கூட அனுமதித்துவிட்டு, நிலைமை கட்டுக்கடங்காமல் போகும்போது அவர்கள் கொல்லப்படுவது முறையான வழியல்ல என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Twitter
நமது நாடு 21ஆம் நூற்றாண்டில் இருப்பதாகவும், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில், ஸ்டெர்லைட் சர்ச்சை இன்னும் பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












