குறைப்பிரசவத்தை முன்கூட்டியே அறிய உதவும் ரத்தப் பரிசோதனை

கர்ப்பினிப் பெண்களின் குறைப்பிரசவத்தை அறிய செய்யும் ரத்தப் பரிசோதனை ஒன்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

அதி உயர் பிரசவ கால ஆபத்து உள்ள பெண்கள் மத்தியில் இந்த ஆய்வு முடிவுகள் 80 சதவீதம் துல்லியத்தோடு இருப்பதாக 'சயின்ஸ்' சஞ்சிகையில் வெளியான தொடக்க நிலை ஆய்வு தெரிவிக்கிறது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆய்வில் தெரியும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை மூலம் குழந்தை பிறக்கின்ற தேதியையும் துல்லியமாக கணிக்க முடிவதாக, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முன்னர் இன்னும் அதிக ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளன.

உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை கோடி குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்கின்றன.

ஓராண்டில் நிகழும் 10 லட்சம் இறப்புகளுக்கு குறைப்பிரசவம் காரணமாக அமைகிறது.

ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்புக்கு இது முக்கியக் காரணமாக விளங்குகிறது.

குழந்தை

பட மூலாதாரம், Science Photo Library

கரு மற்றும் நஞ்சுக் கொடியில் இருந்தும், தாயிடம் இருந்தும் வந்து ரத்தத்தில் கலக்கும் ஆர்என்ஏ எனப்படும் மரபணுவின் நடவடிக்கையை இந்தப் பரிசோதனை ஆய்வு செய்கிறது.

கர்பிணிப் பெண்களிடம் இருந்து ஒவ்வொரு வாரமும் ரத்த மாதிரிகளை சேகரித்த ஆய்வாளாகள், மகப்பேறு காலத்தில் வெவ்வேறு ஆர்என்ஏ-வின் அளவுகள் மாறுவது பற்றி ஆராயத் தொடங்கினர். இதன் மூலம்

வயிற்றிலிருக்கும் குழந்தையின் மாதம் அல்லது குறைப்பிரசவத்தை முன்னதாகவே கணக்கிட இந்த ஆர்.என்.ஏ. அளவு மாற்றத்தை அறிவது உதவலாம் என்று இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

38 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ரத்த பரிசோதனை, வயிற்றில் இருக்கும் குழந்தையின் மாதத்தை கணிப்பதில் 45 சதவீத துல்லியமான முடிவுகளை வழங்கியது. ஆனால், அல்ராசவுண்ட் பரிசோதனையில் 48 சதவீதம் துல்லியமாக முடிவுகள் தெரியவந்துள்ளன.

குழந்தை பிறப்புக்கு 2 மாதங்களுக்கு முன்பு வரை குறைப்பிரசவத்தை கணிக்கவும் இந்தப் பரிசோதனை பயன்படுத்தப்பட்டது.

குழந்தைகள்

பட மூலாதாரம், CHINA PHOTOS

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்த ஆய்வு இரண்டு தனித்தனி பெண்கள் குழுக்களிடம் நடத்தப்பட்டன. ஒரு குழுவில் எட்டுக்கு ஆறு முறை ஆய்வு முடிவுகள் சரியாக இருந்தன. இன்னொரு குழுவில் ஐந்துக்கு நான்கு முறை முடிவுகள் சரியாக இருந்துள்ளன.

"இவை எல்லாம் நடந்திருப்பது பற்றி நான் உண்மையிலேயே உற்சாகமடைந்துள்ளேன்" என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவரான மிரா மௌஃபார்ரெஜ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"தாயின் ரத்தத்தை பயன்படுத்தி சுகாதார பராமரிப்பை எளிதில் கிடைக்கக்கூடியதாகவும், அல்ட்ராசவுண்ட சோதனைகள் கிடைக்காத மக்களுக்கு அதனை மலிவானதாக பெறக்கூடிய அளவிலும் நாம் பயன்படுத்த முடிந்தால், ஆரோக்கியமாக குழந்தைகள் பிறக்கும். சுகப் பிரசவங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இது தொடக்க ஆய்வுதான் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் பெரிய ஆய்வுகளால் இந்த முடிவுகளை உறுதி செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவத்தின் ராயல் கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் பாஸ்கி திலகநாதன் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், குறைப் பிரசவத்தால் ஏற்படும் சிக்கல்கள் பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கு முன்னிலை காரணமாக இருப்பதோடு பிரிட்டனிலுள்ள 7 முதல் 8 சதவீத குழந்தை பிறப்பை பாதிக்கின்றன.

"ஆனால், இந்த ஆய்வு நடத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், குறைப்பிரசவத்தை கணிப்பது கடினம்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"சிகிச்சையில் இதனைப் பயன்படுத்துவதற்கு முன்னால் அதிக ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த முடிவுகளை உறுதி செய்துகொள்வது அவசியம் என்றும் இந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

குழந்தை புற்றுநோயாளிகளை மகிழ்விக்கும் "கோமாளி சிகிச்சை" (காணொளி)

காணொளிக் குறிப்பு, புற்றுநோயாளிக்கும், நமக்கும் ஒரே நேரத்தில் பயன்தரும் “கோமாளி சிகிச்சை”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: