கடும் எதிர்ப்புக்கிடையில் பாதுகாப்புத் துறை கண்காட்சியைத் திறந்துவைத்த பிரதமர்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக எழுந்த கடும் எதிர்ப்பிற்கிடையில் சென்னை வந்த பிரமதர் மோதி, மாமல்லபுரத்துக்கு அருகில் நடைபெறும் பாதுகாப்புத் துறை கண்காட்சியைத் துவக்கிவைத்தார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்திருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு மௌனமாக இருப்பதாகக் கூறி, தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோதிக்கு கறுப்புக் கொடி காட்டுவதென அனைத்துக்கட்சிகளுமே அறிவித்திருந்தன.
இந்த நிலையில், இன்று காலை ஒன்பதரை மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த மோதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தையில் நடைபெறும் பாதுகாப்புத் துறை கண்காட்சிக்கு (Defence Expo) சென்றார்.
அந்த கண்காட்சியை முறைப்படி துவக்கிவைத்த பிரதமர் மோதி, அங்கு பேசும்போது இந்தியாவில் பாதுகாப்பு தொழில்துறைக்கென இரண்டு 'வலயங்களை' அமைக்க உத்தேசித்திருப்பதாகக் கூறிய மோடி, ஒன்று உத்தரப்பிரதேசத்திலும் ஒன்று தமிழகத்திலும் அமையுமென்று தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய மோதி, கார் மூலம் அடுத்த வளாகத்தில் உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சென்றடைந்தார்.

அங்கு அந்த மருத்துவமனையின் வைர விழாக் கட்டடம், செவிலியர்களுக்கான கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைத்து உரையாற்றிய மோதி, 15வது நிதி கமிஷன் தொடர்பாக தென் மாநிலங்களில் சமீபகாலமாக எழுந்திருக்கும் எதிர்ப்பை சுட்டிக்காட்டிப் பேசினார்.
"இறுதியாகக் கடந்த சில நாட்களாகக் குறிப்பிட்ட சிலர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எழுப்பும் பிரச்சனை குறித்து பேச விரும்புகிறேன். சில குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு எதிராக 15வது நிதிக்குழுவின் செயல்பாடுகள் இருப்பதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காகச் செயலாற்றிய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று மத்திய அரசு நிதிக்குழுவிற்கு யோசனை தெரிவித்துள்ளது. இந்த அளவுகோல் காரணமாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கு பெருமுயற்சியையும், சக்தியையும், ஆதாரவளங்களையும் செலவிட்டுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு நிச்சயமாகப் பயன் கிடைக்கும்" என்றார் மோதி.
இதற்குப் பிறகு, மீண்டும் ஐஐடி வளாகத்தை வந்தடைந்த மோதி, அங்கிருந்து ஹெலிபேட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்து, அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்ப வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அவரிடம் மனு ஒன்றை அளித்தனர். உச்ச நீதிமன்றம் கூறியபடி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி அந்த மனுவில் கோரியிருந்தனர்.
பிரதமர் மோதி வருகையை ஓட்டி சென்னை நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. நகரின் பல பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பிரதமர் வருகையின் காரணமாகவும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிற செய்திகள்:
- பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டத்தால் அதிர்ந்த சென்னை!
- சர்ச்சை ஆகும் இம்ரான்கானின் 'சிவன்' அவதாரம்
- அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்களை காத்தது எப்படி? தமிழ் ஆசிரியையின் சிறப்பு பேட்டி
- ஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்: விடைபெற்ற சி.எஸ்.கே வீரர்கள் உருக்கம்!
- சீனா: பெற்றோர் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












