தூத்துக்குடி: இறந்து கரையொதுங்கிய டால்ஃபின்கள், காரணம் என்ன?

பட மூலாதாரம், AFP
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடற்கரையோர கிராமம் ஒன்றில் நேற்று கரையொதுங்கிய 30க்கும் மேற்பட்ட டால்ஃபின்களில் நான்கு உயிரிழந்தன. இறப்பிற்கான காரணத்தை அறிவதற்காக அவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகே உள்ளது கடற்கரை கிராமமான புன்னக்காயல். அவ்வூரில் தூண்டில் வளைவுப் பாலம் அருகே நேற்று மாலை 6:30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் உயிருடன் கரையொதுங்கியதாகவும், அதைத் தொடர்ந்து அவற்றை அங்கிருந்த மீனவர்கள் கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பிறகு சில மணிநேரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு டால்ஃபின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கின.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய, திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் லோக சுந்தரநாதன், "எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த டால்ஃபின்களை கைப்பற்றியதுடன், தொடர்ந்து கரை ஒதுங்கிய டால்ஃபின்களை கடலுக்குள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டோம். மேலும், டால்ஃபின்கள் இறப்பிற்கான காரணத்தை அறிவதற்காக அவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

மனிதர்களைப் போன்று இணைந்து வாழ்வதை இயல்பாய் கொண்ட டால்ஃபின்கள், பெரும்பாலும் நடுக்கடலின் ஆழமான பகுதிகளில் வாழ்பவையாகும். எனவே, டால்ஃபின்கள் இறந்து கரை ஒதுங்கியதற்கான காரணமாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன.
இதுகுறித்த மேலதிக விவரங்களுக்காக இந்திய விலங்கியல் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி வெங்கட்ராமனிடம் பேசியபோது, "இதுபோன்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதற்கு பெரும்பாலும் டால்ஃபின் கூட்டமொன்றை முன்னெடுத்து செல்லும் டால்ஃபின் வழிதவறிவிடுவதால் அதை பின்தொடர்ந்து செல்லும் மற்றவையும் வழிமாறி இவ்வாறு கரையை வந்தடைகின்றன" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும், "கடல் போக்குவரத்து அதிகரிப்பால் ஏற்படும் ஒலி மாசினாலும், நிலப்பகுதியில் இருப்பதைவிட கடலுக்கடியில் ஏற்படும் சத்தங்கள் 25% அதிக இரைச்சலை ஏற்படுத்தும் என்பதாலும் கூட அவை கரை ஒதுங்கியிருக்கலாம். கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கமும், காலநிலை மாற்றமும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு, குலசேகரன்பட்டினம் மற்றும் கல்லாமொழி ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்து கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














