நவம்பர் 7-ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும்: சிபிஐ நீதிமன்றம்

Getty images

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய "2ஜி" எனப்படும் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்குகளின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோ் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் தரப்பு வாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.

இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆயிரகணக்கான பக்கங்களுக்கு இருந்ததால் அவற்றைப் படித்துப் பார்த்த பிறகு தீர்ப்பை எழுதும் பணியில் ஈடுபடுவதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தார்.

இதன் பின்னர் இந்த வழக்கு இரு முறை விசாரணைக்கு வந்தபோதும், தீர்ப்பு தொடர்பான தேதியை சிறப்பு நீதிபதி சைனி அறிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிபதி சைனி, "2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ஆம் தேதி அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார். மேலும், "குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்" என்று சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யூனிடெக் நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோர் டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளனர். எனவே, அவர்கள் இருவரையும் தீர்ப்பு தேதி வெளியாகும் நவம்பர் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைத் துறைக்கு சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

Getty images

பட மூலாதாரம், Getty Images

வழக்கு என்ன?

மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள்வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதைத் தொடர்ந்து வழக்கின் வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் புலனாய்வு அமைப்பான சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாத தாக்கல் செய்ய சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

இந்த நடைமுறைகள் முடிவடைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிக ஆவணங்களைக் கொண்ட வழக்கின் கோப்புகளை ஆராய்ந்து தீர்ப்பை இறுதி செய்வதில் தாமதம் ஆவதால் செப்டம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவது தொடர்பான தேதி அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிபதி சைனி கூறியிருந்தார்.

ஆனால், செப்டம்பர் 20-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தீர்ப்பு தேதி குறித்து அக்டோபர் 25-ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிபதி சைனி குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

குற்றம்சாட்டப்பட்டோர் யார்?

முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக 2011-ஆம் ஆண்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசா அமைச்சராக இருந்த போது அவரது தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, டி.பி.ரியாலிட்டி நிறுவனர் வினோத் கோயங்கா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

Getty images

பட மூலாதாரம், Getty Images

மேலும், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவன இயக்குநர்கள் கௌதம் தோஷி, சுரேந்தர் பிப்பாரா, ஹரி நாயர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, குசேகான் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி என மொத்தம் 14 நபர்கள் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மூன்று வழக்குகள்: 2ஜி அலைக்கற்றை விவகாரத்துடன் தொடர்புடைய மொத்தம் மூன்று வழக்குகளை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

முதலாவதாக தொடரப்பட்ட வழக்கில் 2011-ஆம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு தொலைத்தொடர்பு வட்டங்களில் 122 2ஜி அலைக்கற்றை உரிமங்களுக்கு அனுமதி வழங்கியதில் மத்திய அரசுக்கு 30,984 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்பட்டதாக சிபிஐ கூறியுள்ளது இந்த வழக்கின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஏடிஏஜி தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் ஆயுள் சிறை வரை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Getty images

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது வழக்கில், எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும் அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தொடர்புடைய செய்திகள்

மூன்றாவதாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரும் இடம் பெற்றிருந்தது. திமுக நடத்தும் கலைஞர் தொலைக்காட்சிக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் வழியாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் அளித்த ரூ.200 கோடி தொடர்பாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை நிகழ்ச்சித் தயாரிப்புக்கான திட்டத்துக்காக கடனுதவியாக பெற்றதாகவும் ஆனால், அதை பின்னர் திருப்பிச் செலுத்தி அதற்குரிய பரிவர்த்தனை வரி பிடித்தத்துக்கான ரசீது பெற்றுள்ளதாகவும் கலைஞர் டி.வி. நிர்வாகம் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :