2ஜி விசாரணை: பி சி சாக்கோவை நீக்க கோரிக்கை

பட மூலாதாரம், PTI
இரண்டாம் தலைமுறை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக விசாரித்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து பி.சி. சாக்கோவை நீக்க வேண்டும் என்று அந்த குழுவில் இருக்கும் 29 உறுப்பினர்களில் 15 பேர் கோரியிருக்கிறார்கள்.
இந்த ஊழல் புகாரில் முக்கிய குற்றவாளியாக காட்டப்படும் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரான ஆண்டிமுத்து ராசாவின் கட்சியான திமுகவும், அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்களும் கூட்டாக சென்று இந்திய நாடாளுமன்ற அவைத்தலைவர் மீராகுமாரிடம் நேரில் தமது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக விசாரித்துவரும் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி சி சாக்கோ இருக்கிறார்.
இந்த குழுவில் தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தான் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆ ராசா கோரிவருகிறார். இவரது இந்த கோரிக்கையை எதிர்கட்சிகளும் ஆதரிக்கின்றன. மேலும் இந்த குழுவில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன.
"மன்மோகன் சிங்குக்கு தொடர்பில்லை; வாஜ்பாய் தவறு செய்தார்"
இது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே, இந்த குழுவின் இறுதி வரைவு அறிக்கை ஊடகங்களில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வரைவு அறிக்கையில் எல்லா தவறுகளுக்கும் ராசாவே பொறுப்பு என்றும், இதில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கோ, நிதியமைச்சர் ப சிதம்பரத்திற்கோ தொடர்பில்லை என்றும் கூறப்பட்டிருந்ததாக ஊடக செய்திகள் தெரிவித்தன.
மேலும் முந்தைய பாரதீய ஜனதா கட்சித் தலைமையிலான ஆட்சியில் தொலைத்தொடர்புத்துறையில் ஊழல் நடந்ததாகவும், அதற்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாயும் பொறுப்பு என்று இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகவும் ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.
கூட்டுக் குழுவின் உறுப்பினர்களுக்கே வரைவு அறிக்கை கிடைப்பதற்கு முன்பே ஊடகங்களுக்கு அது எப்படி கசிந்தது என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், குழுவின் தலைவரான சாக்கோ தனது கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இறுதி வரைவு அறிக்கையை தயார் செய்திருப்பதாக புகார் கூறின. இந்த வரைவு அறிக்கை குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றதல்ல என்றும் திமுகவும் மற்ற எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டின.
இந்த பின்னணியில் வியாழனன்று இந்த கூட்டுக்குழுவின் கூட்டம் டெல்லியில் கூடுவதாக இருந்தது. இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரான அம்பிகா பானர்ஜி காலமானதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், இந்த குழுவில் இருந்த பாஜக, ஐக்கிய ஜனதா தளம், திமுக, அதிமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகியவற்றின் 15 உறுப்பினர்கள் சபாநாயகர் மீரா குமாரை நேரில் சந்தித்து பிசி சாக்கோ மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் அவரை இந்த குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தங்களின் இந்த கோரிக்கை ஏற்கப்படும் வரை தமது இந்த போராட்டம் தொடரும் என்று திமுகவைச் சேர்ந்த டி ஆர் பாலு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.












