2ஜி வழக்கில் ஆ.ராசா வாக்குமூலம்; 1718 கேள்விகளுக்கு பதில்
2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா திங்கட்கிழமையன்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

2ஜி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் புதியதாக வகுக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டதாக சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்த போது ஆ.ராசா தெரிவித்தார்.
மேலும் சிபிஐ தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அவர், அவர்களது குற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளது போல் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறினார்.
சிபிஐ தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள 17 பேரின் வாக்குமூலம் 5ஆம் தேதி பதிவு செய்யப்படும் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வழங்கப்படிருந்த 824 பக்கங்களை கொண்ட 1,718 கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமான பதில்களை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பிப் பதிலைப் பெற்ற பின்னர், அவர்களது எழுத்துப்பூர்வமான பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திங்களன்று தொடங்கிய இந்த வாக்குமூலப் பதிவை, இந்திய முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் இருந்து சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சாய்னி துவங்கினார்.
நேரடியான உரையாடல் மூலம் பதிவு செய்யப்படவுள்ள இந்த வாக்குமூலத்தில், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி அப்போது குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்ஸார் குழுமம் மற்றும் லூப் டெலிகாம் தரப்பில் இன்றைய வாக்குமூலம் பதிவு தொடர்பாக, வரும் மே 19ம் தேதி வரை கால அவகாசம் கோரப்பட்டது.
ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளதால் அதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று துவங்கிய இந்த வழக்கின் விசாரணையில், ஆ.ராசா தவிர குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, தயாளு அம்மாள், சரத் ரெட்டி, அமிர்தம், சாஹித் பல்வா, ஆசிப் பல்வா, கரீம் மொராணி, வினோத் கோயங்கா, ராஜீவ் அகர்வால் உள்ளிட்டோரும் வாக்குமூலத்தை தொடர்ந்து பதிவு செய்ய உள்ளனர்.
இவர்கள் மீது கிரிமினல் சதித்திட்டம், மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், லஞ்சம் பெறுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள மத்திய அமலாக்கப் பிரிவு, ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 25ம் தேதி அன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்றபோது, அவர்கள் அனைவரும் மே மாதம் 26ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் வழங்க கூறி டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த மே 2ம் தேதி உத்தரவிட்டது.












