ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

அண்மையில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை சுருக்கமாகத் தொகுத்து வழங்குகிறோம்.

விடுதலை வாக்கெடுப்பை நிறுத்திவைக்க குர்திஸ்தான் தயார்

போராட்டத்தில் அழும் குர்து.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்ரிலில் நடந்த போராட்டத்தில் அழும் குர்து.

இராக்கில் உள்ள குர்திஸ்தான் தன்னாட்சிப் பிராந்தியத்தல் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் அப்பகுதி தனிநாடாகப் பிரிந்து செல்லவதற்கு ஆதரவாக பெரும்பாலோர் வாக்களித்திருந்தனர்.

இதையடுத்து விடுதலையில் உறுதி காட்டியது குர்திஸ்தான் பிராந்திய அரசு. இந்த வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள இராக் மத்திய அரசு மறுத்தது.

இந் நிலையில், குர்து படைகள் கட்டுப்பாட்டில் இருந்த கிர்குக் உள்ளிட்ட பகுதிகளை இராக் ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, மேலும் மோதல்களும், வன்முறையும் நடக்காமல் இருப்பதற்காக கருத்து வாக்கெடுப்பின் முடிவுகளை நிறுத்திவைக்கவும், பாக்தாத்துடன் பேச்சுவார்தை தொடக்கவும் தயாராக இருப்பதாக குர்திஸ்தான் பிராந்திய அரசு அறிவித்துள்ளது.

"பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே போதிய நம்பிக்கை இல்லை"

ஆசிஃப்- டில்லர்சன்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஆசிஃப்- டில்லர்சன்.

ஆப்கானிஸ்தான் மோதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நம்பிக்கை குறைபாடு நிலவுவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனுடன் பேசிய பின் இந்தக் கருத்தை ஆசிஃப் வெளியிட்டார்.

தலிபான்கள் செயல்பட பாதுகாப்பான இடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டிய பிறகு பாகிஸ்தான் வரும் முதல் அமெரிக்கப் பிரதிநிதி டில்லர்சன்.

தலிபான்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பான இடமெல்லாம் இல்லை என்று கூறிய ஆசிஃப், "எங்கள் பிராந்தியம் அவர்களுக்குத் தேவையில்லை. ஆப்கானிஸ்தானின் 40 சதவீதப் பகுதி தலிபான்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது," என்றார்.

சீனாவின் அதிகாரக் குழு: ஜிங்பின் நாளை அறிவிப்பார்

ஷி ஜின்பிங்

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமக்குக் கீழே இருந்து செயலாற்றக்கூடிய அதிகாரம் மிக்க சீனத் தலைவர்கள் யார் யார் என்பதை சீன அதிபர் ஷி ஜின்பிங் புதன்கிழமை அறிவிப்பார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் நிலைக்குழு உறுப்பினர்களான இவர்களே அந்நாட்டில் அதிபருக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க நபர்கள்.

வழக்கமாக தமக்கு அடுத்து தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று தாம் விரும்பும் நபர்களை இந்தக் குழுவில் இடம் பெறச் செய்வது அதிபர்களின் வழக்கம். எனவே, ஜின்பிங்கின் அடுத்த வாரிசு யார் என்று கணிப்பதற்காக, இந்த அறிவிப்பை எதிர்நோக்கி எல்லோரும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :