மோதியின் சௌபாக்யா மின் திட்டம் தமிழகத்திற்குப் பலன் தருமா?

    • எழுதியவர், முரளீதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமையன்று மாலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் அறிவித்த "சௌபாக்யா யோஜ்னா" என்ற அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் தமிழகத்திற்குப் பெரும் பலனை அளிக்காது என்கிறார்கள் அத்துறை நிபுணர்கள்.

விளக்கொளியில் பயிலும் சிறுவர்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிகார், உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புற மின்னிணைப்பு 50 சதவீதத்துக்கும் குறைவே.

இந்தத் திட்டத்தின்படி 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு மேலே இருந்தாலும், 500 ரூபாய் கட்டணத்தில் இணைப்பு வழங்கப்படும் என்றும் அந்தக் கட்டணத்தை 50 ரூபாய் வீதம் 10 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், மின் கட்டணத்தில் சலுகையோ மானியமோ வழங்கப்பட மாட்டாது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலவச மின் இணைப்பிற்கான பயனாளிகள் கணக்கிடப்படுவார்கள்.

வட மாநிலங்களுக்கே பயன்

மின் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.16,320 கோடி செலவிடப்படும்.

இதில் 60 சதவீதம் மத்திய அரசின் செலவாகவும், 30 சதவீதம் வங்கிக் கடனாகவும் இருக்கும். மீதம் 10 சதவீதம் மாநிலங்களால் செலவிடப்படும்.

இந்தியாவில் மின்சார வசதியில்லாத வீடுகளில் 90 சதவீதம் பிஹார், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ஒதிஷா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய பகுதிகளில் உள்ளன.

மத்திய அரசின் நிதி ஆயோக் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று அளித்த புள்ளிவிவரங்களின்படி, ஆந்திரா, கோவா, குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 100 சதவீத கிராமப்புற வீடுகளும் மின் வசதியைப் பெற்றுள்ளன.

இமாச்சலப் பிரதேசம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 99 சதவீதத்திற்கு மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் மின் வசதி உள்ளது.

ஆனால், அருணாச்சல பிரதேசம், அஸாம், பிஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, ஒதிஷா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கிராமப்புற மின் இணைப்பில் மிகவும் பின்தங்கியுள்ளன. குறிப்பாக பிஹாரில் 45.12 சதவீத கிராமப்புற இல்லங்களிலும் உத்தரப்பிரதேசத்தில் 49.27 சதவீத கிராமப்புற இல்லங்களிலும் மட்டுமே மின் வசதி உள்ளது.

"தமிழகம் 100 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு என்பதை எப்போதோ எட்டிவிட்டது.

மலைச் சிகரங்களில் உள்ள சில பழங்குடியின கிராமங்களில் மட்டும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மற்றபடி எல்லா வீடுகளிலும் மின்சாரம் இருக்கிறது.

வட இந்திய மாநிலங்களுக்குத்தான் இந்த திட்டம் பலனளிக்கும்" என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் ஹரியானா மாநில மின் வாரியத்தின் முன்னாள் தலைவருமான தேவசகாயம்.

புதிய பெயரில் பழைய திட்டம்

ஏற்கனவே ராஜீவ் காந்தி பெயரில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுவந்த கிராமப்புற மின்சார வசதித் திட்டத்தையே இந்த அரசு மீண்டும் புதிய பெயரில் அறிமுகப்படுத்துகிறது என்கிறார் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் சங்கத்தின் தலைவரான எஸ். காந்தி.

"பயனாளிகளுக்கு மானியம் என்பதும் புதிய விஷயமல்ல. 2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்திலேயே வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆகவே இந்த மானியம் என்பது சட்டப்படி அளிக்கப்படுகிறதே தவிர, அரசின் திட்டமல்ல" என்கிறார் காந்தி.

மின் நிலையம் அருகே படகோட்டும் நபர்.

பட மூலாதாரம், Getty Images

ஆகவே, மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலமாக, உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்கள் அதிகபட்ச நிதியுதவியையும் தமிழகம் உள்ளிட்ட 100 சதவீத மின் வசதியைப் பெற்ற மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பெரிதாக நிதி ஏதும் கிடைக்காது.

இன்னும் சில கிராமங்களில்...

தமிழ்நாட்டில் 100 சதவீத கிராமப்புற வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டதாகச் சொன்னாலும் ஆனை மலையில் உள்ள சுள்ளிமேட்டுப் பட்டி, அனைக்கட்டியில் உள்ள தூமானூர், ஆழியாரில் உள்ள சிங்காரப்பட்டி ஆகிய கிராமங்களில் இன்னும் மின்வசதி இல்லை.

"ஆனை மலை போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்கள் காப்புக் காடுகளில் அமைந்திருப்பதால் அங்கு மின் இணைப்பு வழங்க தமிழக மின்வாரியம் மறுக்கிறது. ஆனால், கேரளாவில் உள்ள அதே காப்புக்காட்டுப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அம்மாநில அரசு மின் இணைப்பு வழங்குகிறது.

தமிழக அரசும் இதைப் பரிசீலிக்க வேண்டும். அப்படி அளித்தால்தான் கிராமப்புறங்களில் 100 சதவீதம் மின் வசதி அளித்ததாகச் சொல்லமுடியும்" என்கிறார் காந்தி.

உள்ளடங்கிய பகுதிகளுக்கும் மின்சாரம்

தமிழ்நாட்டில் 1969-71ஆம் ஆண்டில் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது உள்ளடங்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கு குறிக்கப்பட்டு, அது தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள கிராமங்கள் முழுக்கவும் மின் வசதி பெற்றிருப்பதற்கு அந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மிக முக்கிய காரணம் என்கிறார் காந்தி.

"உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் மின் இணைப்பு விவகாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கின்றன. அவர்களுக்குத்தான் இந்தத் திட்டம் மிகவும் பயனளிக்கும். மோதிக்கு வாக்களிப்பவர்களும் அவர்களே" என்கிறார் தேவசகாயம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :