ஜெயலலிதாவுக்காக குழந்தைகளுக்கு அலகு: நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Twitter

பட மூலாதாரம், Twitter

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி, இருபது குழந்தைகளுக்கு அலகு குத்திய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரக் காவல்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து சென்னை மாநகரக் காவல்துறை அனுப்பிய அறிக்கையைப் பரிசீலித்த ஆணையம் இன்று காவல்துறை கூடுதல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதில், "சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி அலகு குத்தப்படவில்லை. ஆனால், அந்த சம்பவம் குழந்தைகள் உரிமைகளை மீறும் வகையில் இருந்ததாகக் காவல்துறை ஒப்புக்கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மேலும், அந்த நிகழ்வுக்குக் பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் காவல்துறை ஆணையர் கூறியுள்ளார். ஆனால், குழந்தைகளின் கன்னத்தில் இரும்புக் கம்பிகள் கொண்டு இரு புறமும் குத்துவதற்கு எவ்வாறு அவர்களின் பெற்றோர் ஒப்புக் கொண்டனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பணியை செய்யத் தவறிய காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தது மட்டும் போதாது. குழந்தைகளின் கன்னத்தில் அலகு குத்தக் காரணமானவர்கள் மீது சிறார் நீதி சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவில் கூறியுள்ளது.

சம்பவம் எப்போது? ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உடல் நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

getty images

பட மூலாதாரம், Getty Images

அதைத்தொடர்ந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு ஜெயலலிதாவைத் தேர்வு செய்த ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம்தேதி இந் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை மணிகூண்டு பகுதியில் உள்ள சென்னியம்மன் கோவிலுக்கு 20 குழந்தைகளின் கன்னத்தில் அலகு குத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று அதிமுகவினர் வழிபட்டனர்.

getty images

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக வெளியான புகைப்படத்தில் ஜெயலலிதாவின் படம் உள்ள தொப்பி அணிந்த ஒரு குழந்தையை சிலர் பிடித்திருக்க அதன் கன்னங்களில் கட்டாயப்படுத்தி அலகு குத்துவது போல இருந்தது.

இது பற்றிய புகார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து சென்னை நகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பிய நோட்டீஸில், சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :