சென்னை வன்முறை; தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர சட்டம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் கூறப்படுவது தொடர்பாகவும், ஊடகங்களில் வெளியானதாக சொல்லப்படும் காவல் துறையினரே குடிசைகளுக்கு தீ வைத்தது, வாகனங்களை கொளுத்தியது போன்ற நிகழ்வுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதால் பல இடங்களில் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருந்த போதும், மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் நிரந்தர சட்டம் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து அங்கிருந்து வெளியேற மறுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்துள்ள செய்தி அறிக்கையில், ''சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்தும் போது மேற்கொண்ட நடவடிக்கைகளையின் போது ஏற்பட்ட வன்முறையில் மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ரத்தம் வழிய ஓடிய காட்சிகள், காவல் துறையினர் பலரின் வீடுகளுள் சென்று மக்களை கடுமையாக தாக்கியது போன்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் கண்ணபிக்கப்பட்டன. இது குறித்த விளக்கம் அளிக்க வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வன்முறை ஏற்பட்டபோது காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும்,இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.








