மதுரை பல்கலை. ஊடகத் துறைத் தலைவருக்கு கத்திக் குத்து

ஜெனேஃபா செல்வின்
படக்குறிப்பு, ஜெனேஃபா செல்வின்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஊடகத் துறைத் தலைவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அத்துறையில் முன்பு பணியாற்றிய ஒருவரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஊடகத் துறைத் தலைவராக இருப்பவர் ஜெனேஃபா செல்வின். செவ்வாய்க்கிழமையன்று காலையில் அவர் தனது அறையில் இருந்தபோது, அங்கு வந்த ஜோதி முருகன் என்பவர், சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு அவரைக் கத்தியால் பல இடங்களில் கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த ஜெனேஃபா தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

"காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. 32 வயதான அந்த நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும் விசாரணை நடந்துவருகிறது" என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, ’’அடிமை மனநிலை கொண்டவர்களின் ஆட்சிதான் இங்கு நடந்து வருகிறது’’

ஜெனேஃபாவை கத்தியால் தாக்கிய ஜோதி முருகன், அதே துறையில் கடந்த ஆண்டு தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றியவர். ஆனால், கடந்த கல்வியாண்டின் பாதியிலேயே அவர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டார்.

இந்த ஆண்டிற்கு வேறு இருவர் தற்காலிக விரிவுரையாளர்களாக கடந்த வியாழக்கிழமையன்று தேர்வுசெய்யப்பட்டனர். இதனைக் கேள்விப்பட்ட ஜோதி முருகன், ஜெனேஃபாவைச் சந்தித்து, தன்னை ஏன் தேர்வுசெய்யவில்லையென கேள்வியெழுப்பியுள்ளார். இந்த வாக்குவாதத்தின் முடிவிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :