நடிகை பிரியங்காவை மோதி சந்தித்தது குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை
ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் தனது முக்கிய அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை சந்திக்க நேரம் ஒதுக்கிய சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், PRIYANKACHOPRA
அரசு முறை பயணமாக ஆறு நாட்கள் ஜெர்மனி , ஸ்பெயின் ,ரஷியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோதி பயணம் செய்கிறார்.
நான்கு நாடுகளிடம் இருந்து முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் இந்திய பொருளாதாரத்தை அதிகப்படுத்தும் விதமாக தனது பயணம் அமையும் என்று பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக தனது டிவிட்டர் தளத்தில் மோதி பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த திங்களன்று ஜெர்மனியில் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து, பேசியது பெரும் சர்ச்சையை சமூக வலைத்தளங்களில் தொடக்கிவைத்துள்ளது.

பட மூலாதாரம், TWITTER
நடிகை பிரியங்கா தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மோதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
மோதி-பிரியங்கா சந்திப்பை கண்டித்தவர்கள் சிலர் ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர், அவர்களை சந்திக்காத மோதி, ஜெர்மனி பயணத்தில் நடிகை பிரியங்காவை சந்திக்க எவ்வாறு நேரம் ஒதுக்கினார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்புடைய கட்டுரைகள்:
அதே சமயம் சிலர் பிரியங்கா சோப்ராவுக்கு நல்ல நேரம். ஜெர்மனியில் இருக்கிற சமயத்தில் இந்திய பிரதமரை சந்திக்க முடிந்தது. ஆனால் பிரதமர் இந்தியாவில் இருக்கும்போது கூட அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் பதிவிட்டிருந்தனர்.
மோதி-பிரியங்கா சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் பதிவுகளுக்கு சிலர் விமர்சனம் செய்து, மோதி-பிரியங்கா சந்திப்பு தீடீரென நடந்தது என்று குறிப்பிட்டனர்.

பட மூலாதாரம், TWITTER
இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்டபோது, ''பிரதமர் மோதி தனது அலுவலக நேரம் போக, மீதம் இருந்த இடைவேளை நேரத்தில்தான் பிரியங்காவை சந்தித்திருப்பார். முழு நேரமாக அந்த சந்திப்பு நடந்திருந்தால், விமர்சனம் வைக்கலாம். ஒரு நாட்டிற்கு செல்லும்போது, நம் நாட்டினர் அங்கு இருந்தால் அவரை சந்திப்பதில் தவறு இல்லை,'' என்றார் தமிழிசை.

பட மூலாதாரம், twitter
மோதி பிரியங்காவை சந்திக்க நேரம் ஒதுக்கினார் ஆனால் , தமிழக விவசாயிகளுக்கு நேரம் ஒதுக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுவது குறித்து கேட்டபோது, ''விவசாயிகள் என்ற பெயரில் விவசாயி அல்லாதவர்களும் வேண்டுமென்றே போராட்டம் செய்தனர். விவசாயிகள் மீது அன்பு கொண்டவர் மோதி,'' என்றார் தமிழிசை.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












