தமிழக தலைமைச் செயலகத்தில் மத்திய மந்திரி ஆய்வு எழுப்பிய அரசியல் சர்ச்சை
- எழுதியவர், முரளீதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, செய்தியாளர்
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனிருக்க, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Tngovt
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியைத் துவக்கி வைப்பதற்காக இங்கு வந்த மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி, வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் மாநிலத் தலைமைச் செயலகத்தில் தன் துறையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவுடன் மாநில முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டம் தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.
பொதுவாக இந்த அரங்கில் முதலமைச்சர் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் மட்டுமே நடக்கும்.
அது தவிர, தமிழக நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வர்த்தக பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டம் நடக்கும்.
முதல் முறையாக மத்திய அமைச்சரின் ஆய்வுக்கூட்டம் இந்த அரங்கில் நடைபெற்றது.

பட மூலாதாரம், Tngovt
`அஞ்சி நடக்கிறது அதிமுக அரசு`- ஸ்டாலின்
மெட்ரோ ரயில் துவக்கவிழா நடக்கும் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை நெடுக அ.தி.மு.க. கட்சி கொடிகளுடன் பாரதீய ஜனதாக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநில முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு வெங்கய்ய நாயுடு இந்தக் கூட்டத்தை நடத்தியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
"மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல் இது. இதிலிருந்து, இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எவ்வாறு அஞ்சி செயல்படுகிறது என்பது தெரிகின்றது. தமிழகத்தையே மத்திய அரசிடம் அடகு வைத்திருப்பது தெளிவாக தெரிகின்றது." என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சரியா, தவறா ?
ஆனால், மத்திய அமைச்சர் தமிழக தலைமைச் செயலகத்தில் வந்து ஆய்வு நடத்தியதில் தவறில்லை என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பூர்ணலிங்கம்.
"நாம் இருப்பது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கூட்டாட்சி முறையில். பல துறைகள் மத்திய - மாநில அரசுகளின் பட்டியலில் இருக்கின்றன. அவற்றில் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. அந்தத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வுசெய்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் பூர்ணலிங்கம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலகட்டத்தில் மின்சாரத் துறையில், உதய் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், பல முறை ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தும், அவர் நேரம் கொடுக்கவில்லை.
இதை வெளிப்படையாகவே தெரிவித்தார் அவர்.
ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சியை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மிக மோசமாகக் கையாளுவதாகவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டுவருகின்றன.
"முந்தைய முதலமைச்சர் மத்திய அமைச்சர்களைச் சந்திக்கவே மாட்டார். அது சரியா, தற்போது நடந்திருப்பது சரியா என்று கேட்டால் இப்போது நடந்ததுதான் சரி என்பேன்" என்கிறார் பூர்ணலிங்கம்.
வெளிநாடுகள் நிதியுதவி செய்யும்போது, அவர்களே வந்து நமது திட்டங்களைப் பார்வையிடுவதுண்டு. அப்படியிருக்கும்போது மத்திய அமைச்சர் பார்வையிடுவதில் என்ன தவறு என்கிறார் அவர்.
ஆனால், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயம் இதில் முரண்படுகிறார்.
மத்திய அமைச்சர் ஆய்வு செய்ய விரும்பினால், துறை சார்ந்த அமைச்சரையும் அதிகாரிகளையும் வைத்து ஆய்வுசெய்ய வேண்டியதுதானே என்கிறார் தேவசகாயம்.
"மத்திய அமைச்சர்கள் ஆய்வு நடத்துவதைத் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளையும் அமைச்சரையும் வைத்து ஆய்வு நடத்தலாம். முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு, அவரை தனக்கு கீழானவரைப் போல அவர் முன்பாகவே ஆய்வு நடத்தியது சரியல்ல. முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் பிரதிநிதி. மத்திய அமைச்சர் அப்படியல்ல. இது தவறான முன்னுதாரணம்" என்கிறார் தேவசகாயம்.
சங்கடத்தில் அதிமுக
இந்த சம்பவம் குறித்து ஆளும் அ.தி.மு.கவினர் வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லையென்றாலும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எழுந்துள்ள எதிர்ப்பையும் கேலியையும் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
"இதற்கு முன்னுதாரணம் இல்லை. இப்படி நடந்திருக்கக்கூடாது. தமிழக மக்கள் இது குறித்து ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கக்கூடும். பெரிய மீனான பாரதீய ஜனதாக் கட்சி சிறிய மீனான அ.தி.மு.கவை விழுங்கப் பார்க்கிறதோ என கட்சியினரும் பொதுமக்களும் கருதக்கூடும்" என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்திலேயே புதிய பொதுவிநியோகத் திட்டம், உதய் திட்டம் உள்பட, ஜெயலலிதா ஏற்காத பல திட்டங்களுக்கு அதிமுக அரசால் அனுமதி வழங்கப்பட்டது.
அவர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா நிறுத்திவைத்திருந்த மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு.
இம்மாதிரியான தருணங்களில், பாரதீய ஜனதா கட்சி அ.தி.மு.க. அரசை நெருக்கடிக்குள்ளாக்கி இந்த விஷயங்களைச் சாதித்துக் கொண்டதாக கூறப்பட்டது.
"மத்திய அமைச்சர்கள் இதற்கு முன்பாகவும் தலைமைச் செயலகம் வந்து ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆனால், பாரதீய ஜனதாக் கட்சி தமிழக அரசை ஆட்டிவைக்க விரும்புகிறது என்று பேசப்படும் நிலையில், முதல்வரின் முன்பாக மத்திய அமைச்சர் ஆய்வு நடத்தியிருப்பதுதான் இந்த விவகாரத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. இது தவிர்க்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கே. வெங்கடராமன்.
நியாயம்தான் என்கிறது பாஜக
இந்த ஆய்வுக்கூட்டம் முடிவடைந்த பிறகு, வெங்கய்ய நாயுடுவும் முதல்வர் பழனிச்சாமியும் இணைந்து செய்தியாளர் சந்திப்பையும் நடத்தினர்.
அதில் எழுதிவைக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் வாசித்து முடித்துவிட, 45 நிமிடங்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் வெங்கய்ய நாயுடு.
ஆனால், மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கைகளை பாரதீய ஜனதாக் கட்சி நியாயப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "மத்திய அரசின் அதிகாரிகளை அழைத்து வந்து மாநில அரசு அதிகாரிகளோடு இணைந்து அமர்ந்து சுமார் 1500 கோடி ரூபாய்க்கான திட்டங்களை உடனே நடைமுறைப்படுத்துவதற்கு வெங்கய்ய நாயுடு அறிவித்திருக்கிறார். தமிழக நலன் காக்க புதிய முறை கூட்டங்கள் நடத்துவதில் என்ன தவறு?" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மாநில அரசு இந்த விமர்சனங்கள் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












