ஆட்சியமைக்க யாருக்கு வாய்ப்புத்தர வேண்டும்? என். ராம் பேட்டி

தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் முதல் வாய்ப்புத் தரப்பட வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார்.

என்.ராம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, என்.ராம்

இதுகுறித்து பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிச்சாமிதான் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலைக் கொடுத்துள்ளார். பன்னீர் செல்வம் எந்தப் பட்டியலையும் கொடுக்கவில்லை. அதனால், பழனிச்சாாமிக்குத்தான் ஆதரவு தர வேண்டும் என்று ராம் தெரிவித்தார்.

நிர்பந்தப்படுத்தி, ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டதாக பன்னீர் செல்வம் முதலில் புகார் கூறியிருந்தார். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. அந்தப் புகார் இப்போது செல்லாது. ஆளுநர் அந்த அளவுக்கு தீர்ப்பு சொல்ல முடியாது. அதை ஒதுக்கிவிடலாம் என்று ராம் கருத்துத் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் நியமனம் மாபெரும் தவறு

அதிமுகவில் துணைப் பொதுச் செயலராக, தனது உறவினர் டி.டி.வி. தினகரனை சசிகலா நியமித்திருப்பது மிகப்பெரிய தவறு என என். ராம் தெரிவித்துள்ளார்.

"தினகரன், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர். அவர் மேல் வழக்கு இருக்கிறது. கட்சியினர் மத்தியில் வெறுப்பு இருக்கிறது. இதனால் மோசமான விளைவுகள் ஏற்படும்" என்றாார் அவர்.

"யார் யாரெல்லாம் கட்சிக்கு விரோதிகள் என்று ஜெயலலிதா தீர்மானித்தாரோ அவர்களில் பலரை மீண்டும் கொண்டு வந்துள்ளார் சசிகலா. டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் ஜெயலலிதா விலக்கி வைத்திருந்தார். அவர்களை மீண்டும் அழைத்து வந்துவிட்டார். இதற்குப் பெரிய எதிர்ப்பு இருக்கும் என நினைக்கிறேன்," என்றார் என். ராம்.

காணொளிக் குறிப்பு, பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா சரண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்