தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு உயர்வுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் பெண் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மகப்பேறுகால விடுப்பு ஆறு மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டிருப்பதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

மகேப்பேறு காலத்தில் விடுப்பு அவசியம். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

பெண் அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் மகப்பேறுகால விடுப்பு ஆறு மாதங்களிலிருந்து 9 மாத காலமாக உயர்த்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த அறிவிப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருமணமான, இரு குழந்தைகளுக்குக் குறைவாக குழந்தைகள் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு, 180 நாட்களிலிருந்து 270 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை பிரசவத்திற்கு முன்பிருந்து, குழந்தைப் பிறப்பிற்கு பின்புவரை பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது பிரசவ விடுப்பிலிருக்கும் பெண்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மகப்பேறு காலத்தில் வேலை செய்யும் பெண் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பேறு கால விடுப்பை ஒரு வருடமாக உயர்த்த வேண்டுமெனத் தாங்கள் கோரிவருவதாகவும், இருந்தபோதும் இந்த அறிவிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.