`உலகில் சர்க்கரை கலந்த மென்பானம் அதிகம் குடிக்கும் மெக்ஸிக்கர்கள்'

பட மூலாதாரம், Thinkstock
தனிநபர் அடிப்படையில் பார்க்கும் போது, சர்க்கரை கலந்த மென்பானங்களை அதிகம் அருந்தும் நாடுகளின் பட்டியலில், உலக அளவில் மெக்ஸிக்கோ முதல் இடத்தில் இருக்கிறது.
மெக்சிகோவில்தான் உலகிலேயே அதிக பருமனான குழந்தைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மெக்ஸிக்கோ அரசாங்கம் சர்க்கரை கலந்த மென்பானங்கள் மீது புதிய வரி ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனாலும், அரசாங்கத்தின் இந்த முயற்சி பெரிய அளவு வெற்றியளிக்கவில்லை என்று தற்போது கூறப்படுகிறது.
மெக்ஸிக்கோவில், ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக ஒரு நபர் 163 லிட்டர் சர்க்கரை கலந்த மென்பானங்களை குடிக்கிறார்கள் என்று தெரிவிக்கும் புதிய ஆய்வு, அமெரிக்கர் ஒருவர் சராசரியாகக் குடிக்கும் இதுபோன்ற சர்க்கரை கலந்த மென்பானங்களின் அளவை விட மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம் அதிகம் குடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
மெக்ஸிக்கோவில் இது மிகப்பெரிய பொதுசுகாதார பிரச்சினையாக உள்ளதுடன், நீரிழிவு நோயினால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கையும் அங்கே அதிகமாக உள்ளது.
மெக்ஸிகோவில் நீரிழிவு நோய் காரணமாக ஆண்டுக்கு 70000 பேர் உயிரிழக்கின்றனர்.
மெக்ஸிக்கோவில், பிறந்தது முதல் 6 மாதங்கள் வரையுள்ள குழந்தைகளில், 10 சதவீதம் பேருக்கு சர்க்கரை கலந்த சோடா ஊட்டப்படுவதாக தெரிவிக்கும் மெக்ஸிசிக்கோ சுகாதார அதிகாரிகள், குழந்தைகள் இரண்டு வயதாகும் போது அந்த தொகை 80 சதவீதமாக அதிகரிப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மெக்ஸிக்கோவில் தாய்மார்கள் தமது குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று வெகுவாக விரும்புவதாகவும், குடிப்பதற்கு தூய தண்ணீர் இருந்தாலும், தமது குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த சோடாவையே குடிக்கக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.












