புதையல் வேட்டையர்களுக்கு போலந்து அரசு எச்சரிக்கை
தங்கம் நிரம்பிய நாஜி காலத்து ரயிலைத் தேடுவதை நிறுத்தும்படி புதையல் வேட்டையர்களை போலந்து நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அந்த ரயிலில் வெடிகுண்டுகளோ, அபாயகரமான பொருட்களோ வைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அந்த ரயில் கண்டுபிடிக்கப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளிவந்தததும், தென்மேற்கு வால்ப்ரைக் பகுதியில் புதையல் வேட்டையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
1945ல் காணாமல்போன இந்த ரயிலைக் கண்டுபிடித்துவிட்டதாக இந்த மாதத் துவக்கத்தில் இரண்டு பேர் தெரிவித்தனர்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் காணாமல் போன இந்த ரயிலில் தங்கம், விலை உயர்ந்த கற்கள், துப்பாக்கிகள் ஆகியவை இருந்ததாக சொல்லப்படுகிறது.
தற்போது போலந்து நாட்டில் இருக்கும் வ்ரோக்லா நகரில் இந்த ரயில் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் மாத மத்தியில், இந்த ரயிலைக் கண்டுபிடித்துவிட்டதாக இருவர் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். மற்றொருவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்.
அந்த ரயிலில் என்ன இருந்தாலும் அதில் பத்து சதவீதத்தைத் தங்களுக்குத் தர வேண்டுமென அவர்கள் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அறிக்கை விடுத்திருக்கும் போலந்து நாட்டின் கலாச்சாரத் துறை அதிகாரி ஒருவர், "இந்தத் தேடல் முழுமையாக முடிவடையும்வரை அந்த ரயிலைத் தேடும் பணியை நிறுத்தும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
"இரண்டாம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த அபாயகரமான பொருட்கள் ஏதாவது அந்த ரயிலில் இருக்கலாம். அல்லது வெடிகுண்டோடு இணைக்கப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறியுள்ளார்.
அப்படி ஒரு ரயில் இருக்கிறது என உறுதியாகத் தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரயில் தற்போது இருக்கும் இடமும் ரயிலைக் கண்டுபிடித்ததாகக் கூறும் இருவரின் இடமும் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக வால்ப்ரைக்கின் துணை மேயர் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தங்கள் நிர்வாக ஆளுமையில் இருக்கும் பகுதிக்குள்தான் அந்த ரயில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
வால்ப்ரைக்கிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சியாஸ் கோட்டைக்கு அருகில் இந்த ரயில் காணாமல் போனதாக உள்ளூர்வாசிகள் கூறிவருகின்றனர்.












