ஐஎஸ் இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் வான் தாக்குதலில் பலி

ஐஎஸ் இலக்குகளின் மீது அமெரிக்கா இதுவரை 2000 தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஐஎஸ் இலக்குகளின் மீது அமெரிக்கா இதுவரை 2000 தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ரசாயன ஆயுத நிபுணர் ஒருவர், கூட்டுப்படையினரின் வான் தாக்குதலில் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அபு மாலிக் என்ற அந்த நபர், ஐஎஸ் இயக்கத்தை ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் திறனுடைய இயக்கமாக மாற்றுவதற்கான தகவல்களைத் தந்துவந்தார் என அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் ஆட்சியின்போது, அபு மாலிக் அங்கே ரசாயன ஆயுத பொறியாளராகப் பணியாற்றி வந்தார் எனவும் அதற்குப் பிறகு ஈராக்கின் அல் காய்தாவிலும் பின் ஐஎஸ்ஸிலும் பணியாற்றினார் என அமெரிக்கா கூறியுள்ளது.

ஐஎஸ் இலக்குகளின் மீது இதுவரை 2000 தாக்குதல்களை அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்தியுள்ளனர்.

ஜனவரி 24ஆம் தேதி மோசுல் நகரத்திற்கு அருகில் நடந்த தாக்குதலில் மாலிக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இவருடைய மரணம் ஐஎஸ் இயக்கத்திற்கு பேரிடியாக இருக்கும் என்றும் ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைக் குறைக்கும் என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஐஎஸ் இயக்கம் அவ்வப்போது குளோரின் வாயுவைப் பயன்படுத்திவந்ததாக செய்திகள் வெளியாகின. இருந்தபோதும், அந்தக் குழுவிடம் குறிப்பிடத்தக்க அளவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

கடந்த வருடம் பாக்தாத் நகருக்கு வடக்கில் ஜிகாதிகளுடன் போரிட்ட ஈராக்கிய காவல்துறை அதிகாரிக்கு, மயக்கமும் வாந்தியும் ஏற்பட்டன. குளோரின் வாயுதான் இதற்குக் காரணமாக இருக்கும் என நம்பப்பட்டது.

சிரிய நாட்டின் பெரும்பகுதியைக் ஐஎஸ் கைப்பற்றியுள்ளது. அங்கே இருக்கும் அரசு, ரசாயன ஆயுதங்களை அழித்துவருகிறது. ஆனால், எவ்வளவு ரசாயன ஆயுதங்கள் இருந்த என்பது தெளிவாகவில்லை.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதன் நேச நாடுகளும் ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் நிலைகளைத் தாக்கிவருகின்றன.

ஈராக்கியப் படையினரின் உதவியுடன் விரைவில் மோசுல் நகரை மீட்டுவிடலாம் என ராணுவத் தளபதிகள் நம்புகின்றனர்.

ஆனால், தரைவழியான மோதலுக்கு ஈராக்கியப் படையினர் தயாராக இல்லை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.