'கொரியாவில் அணு ஆயுத ஒழிப்பு' - சீனா மற்றும் அமெரிக்கா உறுதி

கொரிய தீபகற்பத்தில், அணு ஆயுதத்தை ஒழிப்பது தொடர்பில் இணைந்து செயற்படப் போவதாக சீனாவும், அமெரிக்காவும் கூறியுள்ளன.

சீனத் தலைநகர் பீஜிங்கில் பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு பேசிய அமெரிக்க அரசுத்துறை செயலர், ஜோண் கெரி அவர்கள், இது பற்றி குறிப்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இரு தரப்பும் தொடர்ந்தும் பேசவிருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவையும், தென்கொரியாவையும் வடகொரியா மிரட்டியது தொடர்பான முரண்பாடு, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியாக கையாளப்பட வேண்டும் என்று சீன வெளியுறவு கொள்கை தலைவரான யாங் ஜீச்சி கூறியுள்ளார்.

வடகொரியா தனது அணு ஆயுதத்திட்டத்தை கைவிட உடன்படும் வரை, அதனுடன் மேலும் சமரச முயற்சிகளை மேற்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்கா கூறுகிறது.